அரசுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அரசுக்கு ஆதரவான பிரச்சார நடவடிக்கைகள் என்னும் நோக்கங்களுக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளை கொண்டு அரசாங்கம் இவ்வார்ப்பாட்டத்தினை நடாத்தியுள்ளது.
முல்லைத்தீவு, கிளிநொச்சி, பகுதிகளில் இருந்து பஸ்களில் ஏற்றி வரப்பட்ட சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளைக் கொண்டு கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி தலைமையில் அமெரிக்காவுக்கும் ஜெனீவாத் தீர்மானங்களுக்கும் எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேற்படி அமெரிக்கா, ஜெனீவா எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அருகில் இருந்து A9 வீதியால் டிப்போ சந்தியை நோக்கி நடந்து சென்று அச்சந்திக்கு அருகில் அமைக்கப்பட்ட மேடையில் அமெரிக்காவுக்கும் ஜெனீவாவுக்கும் எதிரான கோசங்களுடன் நடைபெற்றது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் கீதாஞ்சலி,
“அமெரிக்காவே நீ உனது வேலையைப் பார்த்துக்கொள்”, “எமது வேலையை நாம் பார்த்துக்கொள்வோம்”,
“எமது நாட்டு உள்விவகாரங்களில் உனது நலனுக்காக தேவையற்று தலையிடாதே”,
“போர் நடைபெற்ற போது மக்களை அழிப்பதற்கு ஆதரவு வழங்கி விட்டு இப்போது எங்கள் மக்களை நிம்மதியாக வாழவிடாமல் தடுப்பதற்கு முயற்சிக்காதே”,
“எங்கள் தலைவன் மகிந்த ராஜபக்சாவே, மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது”,
இலங்கை அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அழிக்கப்பட்டார்கள் என்பதை இலங்கை அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. இனப்படுகொலைக்கு அமரிக்கா ஆதரவு வழங்கியது என்று ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளது. ஆட்சி மாற்றத்திற்கே அமரிக்கா தீர்மானம் கொண்டுவருகிறது என்பதை அறிவித்துள்ளது. ஆட்சி மாற்றம் கொண்டுவராதே மகிந்தவையே தலைவனாக நீடிக்க விடு என்பதை மறைமுகமாகக் கூறியுள்ளது. இந்தியாவும் அமரிக்காவும் இணைந்து தமது பல்தேசிய வியாபார நலன்களுக்காக அழித்துத் துவம்சம் செய்யப்பட்ட மக்கள் உலகின் ஒடுக்கப்பட்ட மக்களோடு இணைந்து போராட முன்வருவார்கள்.