இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட காலம்வரை வடக்கின் நிலைமை குறித்து இந்தியாவுக்கு விளக்கிய வண்ணமிருந்தோம். இந்திய அதிகாரிகளுடன் இதுவிடயத்தில்பொறிமுறையொன்றை ஏற்படுத்தியிருந்தோம் என்று இந்தியாவின் பி.ரி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்தியா விடுதலைப் புலிகள் மீது அக்கறை காண்பிக்கவில்லை என்பது இலங்கைக்கு தெரியும். புலிகளை தோற்கடிக்க வேண்டுமென்பதே அவர்களது எண்ணமுமாக இருந்தது. இந்தியா இறுதியாக நாம் மேற்கொண்ட யுத்த நடவடிக்கைகளை வரவேற்றதுடன் உதவியாகவும் இருந்தது என்றும்பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பாதுகாப்பு படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்திய இறுதி யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து புலிகள் இறுதியில் தோற்கடிக்கப்பட்டது வரை வடக்கின் நிலைமை குறித்து இந்தியாவுக்கு விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின் முதல் தினத்திலிருந்து முடிவு வரை இந்தியாவுக்கு சகல விபரங்களையும் அறிவித்து, சீனாவுடனோ பாகிஸ்தானுடனோ அல்லது வேறெந்த நாட்டுடனோ நாம் வைத்துள்ள உறவு காரணமாக எதுவித சந்தேகமும் ஏற்படாத வகையில் நடந்து கொண்டோம்.
வெளியுறவு அமைச்சின் தொடர்புகளுக்கு மேலதிகமாக நாங்கள் இந்திய அதிகாரிகளுடன் ஒரு கட்டமைப்பினை ஏற்படுத்திக் கொண்டிருந்தோம். இந்த கட்டமைப்பில் இந்தியாவின் சார்பில் வெளியுறவு செயலாளர் சிவ்சங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், பாதுகாப்பு செயலாளர் விஜய் சிங் ஆகிய மூவரும் பங்கேற்றிருந்தனர்.
எங்கள் தரப்பில், ஜனாதிபதியின் செயலாளர், லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரும் நானும் பங்கேற்றோம். இரண்டு குழுக்களையும் உருவாக்கி கருத்துக்களை பரிமாறிக் கொண்டதுடன் சந்திப்புக்களையும் நடத்தி வந்தோம். சகல விவகாரங்கள் குறித்தும் அவ்வப்போது இலங்கைக் குழு இந்தியாவுக்கு விஜயம் செய்து இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தது.
தமிழ்நாடு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தது. அதனை புரிந்து கொண்டு நாங்கள் மேற்கொண்ட சில செயற்பாடுகள் அவர்களுக்கு (இந்தியாவுக்கு) உதவியாக இருந்தன. கடந்த சில வருடங்களில் (புலிகளுடனான யுத்தத்தின் போது) இந்தியாவுடன் இந்த நட்புறவை ஏற்படுத்தி அவர்களுடன் மிக நெருக்கமாக செயற்பட்டோம்.
வேறு எத்தகைய அழுத்தங்கள் ஏற்பட்ட போதும் இந்த உறவு முறையால் அந்த அழுத்தங்களை சமாளித்து விடலாமென நாம் தெரிந்திருந்தோம். இந்தியா விடுதலைப் புலிகள் மீது அக்கறை காண்பிக்கவில்லை என்பது இலங்கைக்கு தெரியும். புலிகளை தோற்கடிக்க வேண்டுமென்பதே அவர்களது எண்ணமுமாக இருந்தது.
சிவிலியன்களின் இழப்புக்களை தவிர்ப்பதற்கு பல நடவடிக்கைகளை நாம் எடுத்திருந்தோம். இறுதிக்கட்டத்தில் கனரக ஆயுத பிரயோகத்தை தவிர்த்தமை குறித்து இந்தியா வரவேற்பு தெரிவித்திருந்தது.
இலங்கைப் படையினர் யுத்தத்தின் கடைசிக் கட்டங்களில் இராணுவ வெற்றிகளை அடைந்ததால் புலிகளுக்கு எதிரான போரில் நிச்சயம் வெற்றி கிடைக்குமென நம்பிக்கை கொண்டனர்.
முடிவு குறித்து எமக்கு திடமான நம்பிக்கை இருந்ததால் எவராலும் இந்த நம்பிக்கையை கெடுத்துவிட இடம்கொடுக்காத வகையில் நாம் நடந்து கொண்டோம். புலிகளுடன் நாம் மிகக் கடுமையாக இருந்தோம். யுத்தநிறுத்தத்திற்கு முன்வந்த அவர்களுக்கு எந்தவித விட்டுக் கொடுப்புக்கும் இசையாமல் நாம் செயற்பட்டோம்.
எந்தக் கட்டத்திலும் எவருக்கும் விட்டுக் கொடுக்க நாம் தயாராக இருக்கவில்லை. ஜனாதிபதியின் நிலைப்பாடும் அதுவாகவே இருந்தது. என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் சரியாக தெரிந்து வைத்திருந்தோம்.
யுத்தத்தின் போது விமானத் தாக்குதலை நிறுத்த இலங்கை எடுத்த முடிவுக்கும் இந்திய தேர்தலுக்கும் எதுவித தொடர்பும் இல்லை.
விமானத் தாக்குதல் நிறுத்தப்பட்டமை, பாதுகாப்பு வலயம் உருவாக்கப்பட்டமை ஆகிய அனைத்தும் ஜனாதிபதி மற்றும் படைத் தளபதிகளுடன் கலந்தாலோசித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளாகும்.
இந்தியா இந்நடவடிக்கைகளை வரவேற்றது. எனவே இந்தியாவும் உதவியாக இருந்தது. என்றார்.