இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப் படையை அவமதிக்கும் விதமாகப் பேசியதாக நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சீமான் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தேசியப் பாதுகாப்புச் சட்ட உரிமையின் படி அறிவுரைக் கழக விசாரணையில் இன்று நேரில் ஆஜராகி சீமான் தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய சீமான் ‘’நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. ஒரு லட்சம் தமிழர்களை ஈவிரக்கமின்றிக் கொன்றொழித்த இலங்கை பேரினவாதிகளால் கெடாத இறையாண்மை நான் பேசிக் கெட்டு விடுமா? என்று கேள்வி எழுப்பினார். மிகப் பயங்கரமான கொலை ஒரு பக்கம் இன்னொரு பக்கம் நிற்கதியாய் விடப்பட்டுள்ள வன்னி மக்கள் இன்னொரு பக்கம் என்று ஈழ மக்களின் வாழ்க்கையே கேள்விக்குள்ளாகியிருக்கிற நிலையில் என்னைச் சிறையிலடைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று தமிழக அரசும் கருணாநிதியும் பகல் கனவு காண்கிறார்கள்.துன்புறும் மக்களுக்காக போராடுவது தவறு என்றால் அதே தவறை நான் மீண்டும் மீண்டும் செய்வேன். இந்திய சட்டத்தின் 21 வது பிரிவு எல்லோரும் அவரவர் கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்கும் உரிமையை வழங்கியுள்ள நிலையில் அது தமிழனுக்கு மட்டும் கிடையாதா? என்றவர்.தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அரசியலில் லாபம் அடைவதற்காக நான் அரசியல் இயக்கத்தை தொடங்கவில்லை. என்றார்.