Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நான் காங்கிரசுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன்! :திருமாவளவன்.

நான் காங்கிரசுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன். ஜிகே மூப்பனார் தான் என்னை தேர்தல் களத்துக்கு கொண்டு வந்தவர். அந்த நன்றியை மறக்கமாட்டேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியின் சிதம்பரம் வேட்பாளர் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்து வேட்பாளர் திருமாவளவனை அறிமுகப்படுத்தினார்.

இதையடுத்து கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில்,

காங்கிரஸ் தலைவர் ஜிகே மூப்பனார் தான் என்னை 1999ல் சிதம்பரம் தொகுதியில் தேர்தல் களத்தில் அறிமுகம் செய்தார். காங்கிரஸ் கட்சிக்கும் எங்களுக்கும் எந்த விரோதமும் கிடையாது.

இடையில் காங்கிரசுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இடையே சிறு சலசலப்பு ஏற்பட்டது. சத்தியமூர்த்தி பவனில் தேர்தல் அரசியல் களத்தை தொடங்கிய நான் அந்த இடத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்யவில்லை. நான் நன்றி மறந்தவன் இல்லை.

அங்கு வழியில் சென்ற போராட்டக்காரர்களுக்கும், தோழர்களுக்கும் இடையே சிறு சலசலப்பு ஏற்பட்டு கைகலப்பில் முடிவுற்றது. அது திட்டமிட்ட செயல் அல்ல. சில தீய நிகழ்வுகள் தூக்கிப் பிடிக்கப்பட்டன. ஊடகங்கள் அதை பெரிதாக்கிவிட்டன.

நான் பழிவாங்கும் நோக்கம் உடையவன் அல்ல. இதுகுறித்து நாங்கள் தவறு செய்யவில்லை என சம்பவம் நடந்த அடுத்த அரை மணி நேரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சுதர்சனம், தங்கபாலு, வாசன், சிதம்பரம் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு தெரிவித்தேன்.

சொன்ன சொல்லை காப்பாற்றுவேன்!
______________________________________

தற்போது இங்கு மூன்றாவது முறையாக போட்டியிடுகிறேன். தமிழகத்தின் பாரம்பரியமிக்க கட்சியான திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகிறேன். மிகப்பெரிய கூட்டணியில் போட்டியிடுவது இதுதான் முதன்முறை.

அதிமுக அணியில் நான் வர வேண்டும் என அழைப்பு விடுத்தனர். சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவன் நான். உங்களுடன் தான் இருப்பேன் என கருணாநிதியிடம் கூறினேன். ஈழத்தமிழர் பிரச்னைக்காக யார் போராடினாலும் அவர்களுடன் நிற்பேன். அது வேறு. அரசியல் வேறு.

திருமாவளவன் திசை மாறிப் போய்விடுவான் என எதிர்பார்த்தார்கள். திமுக அணி ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நாங்கள் வேறு அணிக்கு ஓடமாட்டோம் என்றேன். ஒட்டுமொத்த தமிழர்களுக்காகவும், உலகத் தமிழர்களுக்காகவும் நான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.

எங்களுக்கு தேர்தல் அனுபவம் கிடையாது. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் களப்பணியாற்ற வேண்டும் என்றார் திருமாவளவன்.

Exit mobile version