Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நாட்டை காட்டிக் கொடுத்த கே.பி தேசப்பற்றாளன் சரத் போன்சேகா தேசத் துரோகி! : ரணில்

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக சிங்கள மக்கள், படையினர் மற்றும் மகா சங்கத்தினர் மத்தியில் அரசாங்கம் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. பிரபாகரனால் செய்ய முடியாததை அரசாங்கம் இன்று செய்துள்ளது என்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டைப் பாதுகாத்த ஜெனரல் சரத் பொன்சேகா தேசத் துரோகியாகி விட்டார். கே.பி. இன்று தேசப்பற்றாளர் ஆகிவிட்டார் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சுட்டிக் காட்டினார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கப்படவுள்ள 10 இலட்சம் மக்களின் கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கையின் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று கொழும்பு ஜே.ஆர். ஜயவர்த்தன நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

“குற்றங்களை முன்வைத்தே எவரையாவது கைது செய்ய முடியும். இது தான் சட்டம். அரசியலமைப்பும் இதனையே வலியுறுத்துகிறது. ஆனால், இவையனைத்தையும் மீறி ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார். இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கலாகும். இன்று அவரது மருமகனின் தாயாரைg கைது செய்துள்ளனர். எதிர்காலத்தில் இறந்து போன அவர்களது உறவினர்களின் புதை குழிகளையும் தோண்டினாலும் அது அதிர்ச்சிக்குரிய விடயமல்ல.

எமது நாட்டு அரசியல் வரலாற்றில் தேர்தலில் போட்டியிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டமை இதுவே முதற் தடவையாகும்.

இவை போன்ற சம்பவங்கள் மியான்மாரில் இடம்பெற்றன. இன்று எமது நாட்டிலும் நடைபெறுகிறது. நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்த்தோம். ஆனால், இன்று இனங்களிடையே அரசாங்கம் பிளவுகளை ஏற்படுத்தி வருகிறது.

முதன் முறையாக சிங்கள மக்களை, மகா சங்கத்தினரை, படையினரை அரசாங்கம் பிளவுபடுத்தியுள்ளது. தாய்நாட்டை பாதுகாத்தவரை தேசத் துரோகியாக முத்திரை குத்தி நாட்டை காட்டிக் கொடுத்த கே.பிக்கு தேசப்பற்றாளன் முத்திரையை அரசாங்கம் குத்தியுள்ளது.

நாட்டில் அனைவராலும் மதிக்கப்படும் மகா சங்கத்தினர் விமர்சிக்கப்படுகிறார்கள்; அச்சுறுத்தப்படுகிறார்கள். அந்தளவுக்கு ஒழுக்கம் சீர்குலைந்து போய்விட்டது.

ஜெனரல் பொன்சேகா நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து மக்களைப் பாதுகாத்தார். அவர் தேசிய வீரர். எனவே தேர்தலின் போது அவருக்கு வாக்களித்தோர், வாக்களிக்காதோர் அனைவரும் அவரின் விடுதலைக்கான மகஜரில் கையெழுத்திட வேண்டியது அவசியமாகும்.

இது ஜெனரல் பொன்சேகாவின் விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மட்டுமல்ல, நாட்டில் ஜனநாயகத்தை நிலை நிறுத்தி மனித உரிமைகளை பாதுகாப்பதற்குமான போராட்டமுமாகும்.

இந்த நாட்டை மியன்மாராக மாற்றுவதற்கு இடமளிக்க மாட்டோம். எனவே மக்கள் அனைவரும் சர்வாதிகாரத்திற்கு எதிராக அணி திரள வேண்டும்.” இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Exit mobile version