மேலும் இலங்கை அரசியல் பற்றிக் குறிப்பிடுகையில், இந்த நாட்டின் வளங்களை உலகமய முதலாளித்துவ சக்திகள் கபளீகரம் செய்வதற்கு எதிரான போராட்டங்களைப் போன்று , நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான போரட்டங்களும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற போராட்டமும் இலங்கையில் முனைப்படைய வேண்டும். இதன் மூலமே இந்த நாட்டின் உண்மையான விடுதலையை நாம் எல்லோரும் அடையமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமது கட்சியின் அரசியல் நிலைப்பாடு பற்றி விளக்குகையில், அதிகாரப் பரவலாக்கம் ஊடாக மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து விட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு எனவும் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் நிலைப்பாட்டிற்கும் எமது நிலைப்பாட்டிற்கும் இடையே பாரிய வேறுபாடுள்ளது எனவும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை ஐ.தே.க.யின் சஜித் பிரேமதாஸ இன்று கிராமிய மட்டத்தில் பேரினவாத நிலைப்பாட்டுப் பயணத்தை ஆரம்பித்துள்ளார். இதனூடாக ஐ.தே.க.யின் தலைமைக்கு குறிவைத்து அவர் செயற்படுகிறார். இந்த நிலையைமால் ஐ.தே.க.யில் உள்ள சமூக ஜனநாயகத்தை விரும்பும் சில பிரிவினர் எம்முடன் இணையும் நிலை தோன்றியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உலகின் சமூக ஜனநாயக வாதத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றி விபரித்துள்ளதுடன், சமூக ஜனநாயக வாதத்தின் முன்னுள்ள பிரச்சினைகள் மற்றும் பணிகள் பற்றியும் விபரித்திருக்கிறார்.
இன்று இவர்கள் (ஜேர்மன் சமூக ஜனநாயகவாதிகள்) இரண்டு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இவர்கள் உலகமய முதலாளித்துவத்திற்கு எதிராகவும் அரசு சோசலிசத்திற்கு எதிராகவும் போராட வேண்டிய நிலையில் உள்ளனர்.
இந்தப் பிரச்சினை ஜேர்மன் சமூக ஜனநாயக வாதிகளுக்கு மாத்திரமல்ல. உலகம் முழுவதும் உள்ள இடதுசாரிகளுக்கு உள்ள பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. உலக முதலாளித்துவத்திற்கு எதிராகப் போராடுவதில் பிரச்சினைகள் இல்லை. ஆனால் மாற்றீடாக என்ன கொள்கையை முன்வைப்பது என்பதில் பிரச்சினைகள் உள்ளன.
எவருக்கும் ஜனநாயகமற்ற அதிகார வர்க்க ஆதிக்கம் நிலவும் ரஷ்யாவில் இருந்தது போன்ற சீனாவில் இருப்பது போன்ற ஆட்சி முறையில் நாட்டமில்லை. ஆனால் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாட்டில் உள்ள ஜனநாயக உரிமைகளைவிட மேம்பட்ட உரிமைகளை விரும்புகின்றனர்.
ஆனால் ஜனநாயக மனித உரிமைகளை சமூகத்தில் எல்லோரும் சமம் என்ற நிலையை தியாகம் செய்யுமாறு கூறும் சோஷலிஸ போக்கை எவரும் விரும்பவில்லை.
இன்று நாம் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தத்துவார்த்த விஞ்ஞானம் மூலம் விடை தேடப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மார்க்சிய-லெனினிய-மாவேயிச சிந்தனையில் உருவான அரசியல் முறைகளில் பிற்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் இன்று அச்சிந்தனை பற்றிய பாரிய விமர்சனமொன்றை வேண்டி நிற்கிறது. அத்துடன் மூன்றாம் உலக நாடுகளில் மார்க்சிய கட்சிகள் கொண்டுள்ள பாராளுமன்ற சீரழிவு-சந்தார்ப்பவாத போக்கும் இந்தப்போக்கினை வலுவுடையதாக்கியிருக்கிறது.
உலகமய முதலாளித்துவத்திற்கெதிராகப் போரடுதல் என்ற கோஷத்தின் கீழ் இலங்கை இடதுசாரிகள் ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணியுடன் இணைந்து செயற்பட முடிகிறது என்பதுவும், இதனால் இடதுசாரிகள் தங்களின் மக்களின் துயரங்கள் பற்றி எந்த மூச்சும் விடுவதில்லை என்பதுவும் நிலைமைகளின் துயரத்தினை எடுத்துக்காட்டத்தக்கன.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஒரு இரும்பு விலங்காய் மக்கள் வாழ்வை நசிக்கிக் கொண்டிருக்கும் சூழலில், இடதுசாரிகள் பிற்போக்கு சக்திகள் எனக் குறிப்பிடும் பல்வேறு தரப்பினரும் அது குறித்து பேசத்தொடங்கியுள்ள நிலையில் இடது சாரிகள் மௌனம் காத்து வருகின்றமை துயரமானது என்பதுடன் மார்க்சியம் மீதான விமர்சனங்களையும் தோற்றுவித்துவிடுகிறது.
இன்று தரகு முதலாளித்து சக்திகளான ஐ.தே.க. மக்கள் விடுதலை பற்றி அதுவும் உழைக்கும் மக்களின் விடுதலை பற்றிக் கதைக்கும் ஒரு நிலைமை தேன்றியிருக்கிறது.
இந்த நிலையில் மக்களின் விடுதலைக்கான சிந்தனையாக சமூக ஜனநாயக வாதம் முன்னிறுத்தப்படும் ஒரு போக்கு இலங்கையில் வலுப்பெறுகிறது என்பதனைக் இக்கட்டுரை உணர்த்தி நிற்கிறது. ஐ.தே.க.யினதும் ஜே.வி.பி.யினதும் ‘ஜனநாயக விடுதலை” என்ற கோஷத்திற் கெதிராகவே சமூக ஜனநாயக வாதம் முன்வைக்கப்படுகிறது.
எது எவ்வாறாயினும் சமூக ஜனநாயக வாதம், சமூக முன்னேற்றத்திற்கு , பல்வேறு அடக்கு முறையின் கீழ் வாழும் கோடான கோடி மக்களின் விடுதலைக்கு வழிகாட்டுமா? என்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.