பத்திரிகை பேரவைச் சட்டமூலத்தின் ஊடாக ஊடகவியலாளர்களை அடக்குவதற்கு முயற்சிக்கும் அரசாங்கம் தற்போது சட்டத்தரணிகளையும் ஒடுக்குவதற்கு முற்பட்டுள்ளதாக தேசிய சட்டத்தரணிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அச் சங்கம் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அதன் தலைவர் ஸ்ரீநாத் பெரேரா பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இது தொடர்பாக கூறியதாவது;
சண்டே லீடர் பத்திரிகை அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் சார்பில் தாக்கல் செய்த மனுமீதான விசாரணைக்கு பத்திரிகை சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தேசத்துரோகிகள் எனக் குறிப்பிட்டுள்ளது.
எமது அரசியலமைப்பின் 13 ஆவது சரத்தின் 3 ஆவது பிரிவு, குற்றம் சாட்டப்பட்டவர் மன்றில் அவரோ அல்லது சட்டத்தரணியின் ஊடாகவே தமது நியாயப்பாடுகளை முன்வைக்க முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் 13 ஆவது சரத்தின் பிரிவு 5, மன்றால் குற்றம் காணும் முன் அவரைக் குற்றவாளிகளென குறிப்பிட முடியாதெனவும் தெரிவித்துள்ளது.
அத்துடன், சரத்து 12 பிரிவு டி(ஜி) இல் சட்டத்தின் மூலம் சகலரும் சமன். அதுபோல் அத்தியாயம் 14 பிரிவு டி இன் பிரகாரம், எவரொருவர் தமது தொழிலைக் கொண்டு நடத்த இடமுண்டெனத் தெரிவித்துள்ளது.
மேலும் 41 (1) இல், சட்டத்தரணிகள் தமது கட்சிக்காரருக்கு எதிராக ஆஜராக முடியுமெனவும் குறிப்பிட்டுள்ளது. எனவே, சட்டத்தரணிகள் சுதந்திரமாக தமது தொழிலை நடத்துவதற்கு இடமளிக்க வேண்டும்.
முதலில் இணையத்தளத்திலுள்ள தவறை இல்லாமல் செய்ய வேண்டும். மற்றது சட்டத்தரணிகள் தமது தொழிலை தடையின்றி மேற்கொள்வதனை பாதுகாத்து உரிமை வழங்குமாறு கோருகின்றோம்.
இது தொடர்பில் அரசாங்கத்துக்கும் ஆசிய மனித உரிமை சங்கத்துக்கும் கடிதம் எழுதியுள்ளோம். இந்நிலையில், இதன் அடுத்த கட்டமாக சர்வதேச ரீதியில் எடுத்துச் செல்லவுள்ளோம்.
எமது ஜனநாயகத்தின் முதல்படியான செயற்பாடே கடிதமாகும். இதனைக் கவனத்தில் கொள்ளாதுவிடின் மக்கள் முன் நாம் சென்று விளக்குவோம்.
பத்திரிகை பேரவைச் சட்டமூலத்தைக் கொண்டுவந்து ஊடகவியலாளர்களை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது போல் சட்டத்தரணிகளை அடக்குவதற்கு முற்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் ஜனநாயகம் எங்கே செல்கின்றது என்பது தெளிவாகிறது என்றார்.
இதன்போது சங்கத்தின் செயலாளர் அஜித் பத்திரனவும் கலந்துகொண்டு பேசினார்.