Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நாட்டின் சட்டம் காட்டுச் சட்டமாக மாறியுள்ளது : மங்கள சமரவீர

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டின் சட்டம் காட்டுச் சட்டமாக மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்தநிலை நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் பாரிய சவாலாக அமைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

ராஜகிரியவில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சட்டத்தை மீறுவோருக்கு எதிராக அரசாங்கம் வினைவிறனான முறையில் செயற்பட வேண்டும் எனவும் அவர்களுக்கு ஆயுதத்தினால் அல்ல சட்டத்தினாலேயே தண்டனை வழங்க வேண்டும் எனவும் மங்கள கூறியுள்ளார். சட்டத்தை மீறுபவர்கள் மாத்திரமல்லாது, அதற்கு அனுசரணை 
 
  வழங்குபவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் மங்கள தெரிவித்துள்ளார்.
அத்துடன், வடபகுதி மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கத் தேர்தலை நடத்துவதாகக் கூறும், அரசாங்கம் சுயாதீன ஊடகவியலாளர் அங்கு செல்வதற்கு அனுமதிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நாட்டில் நீதிக்குப் புறம்பான கொலைகள் இடம்பெறுகின்றன. பாதாளக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது. அவர்களை ஒழிப்பது தொடர்பில் எனக்கு மாற்றுக் கருத்து எதுவுமில்லை. பாதாளக் குழுவைச் சேர்ந்த சுமார் 90 பேர் அண்மையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயுதங்களை மீட்கச் சென்ற வேளையில், காவல்துறை மீது தாக்குதல் நடத்த முற்படுகையில் சுடப்பட்டதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர். நான் கேட்பது என்னவெனில், ஏன் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதாகும். இதற்கு ஏன் அரசு பயப்படுகிறது. பாதாளக் குழுவினரை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தி குற்றப் பத்திரிகை சமர்ப்பித்து தண்டனைப் பெற்றுக்கொடுக்க முடியாமல் இருப்பது ஏன் என்று கேட்கின்றேன். உலகில் ஜனநாயக நாடுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் பாதாளக் குழுவினருக்கு எதிராக சட்ட ரீதியாகவே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.’

‘நாட்டினுள் சட்டங்களுக்கு அமைய பாதாளக் குழுவினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பயன்படுவதற்குக் காரணம், இரகசியங்கள் அம்பலமாவதைத் தடுப்பதற்காகவேயாகும். அதனாலேயே அவர்கள் சுட்டுக் கொலை செய்யப்படுகின்றனர். வெள்ளை வான் முதலான பல சம்பவங்களுக்கு உதவியுள்ளவர்களே படுகொலை செய்யப்படுகின்றனர்.

இதேவேளை, பாதாளக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் பாதுகாப்புடன் வெளிநாடு செல்கின்றனர். 17வது அரசியல் திருத்தம் அமுல்படுத்தப்படாமல் உள்ளதாலேயே காவல்துறையினரால் சுயாதீனமாக இயங்க முடியாதுள்ளது.

இந்த வெள்ளை வான் முதலான சம்பவங்களுக்குக் காரணமாக பாதாளக் குழுவினரின் தொடர்பு குறித்து நிரூபிக்க முடியாது. சாட்சிகள், சாட்சியளிப்பதற்கு அஞ்சுவதே இதற்குக் காரணமாகும். பாதாள உலகத்தினருக்கு எதிரான தற்போதுள்ள நடவடிக்கை குறித்து வரவேற்போர் உள்ளனர்.

எதிர்காலத்தில் அதிகாரமுடையோருக்கு எதிராக பாதாளக் குழுவினரின் பெயரை பயன்படுத்தி இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். இதனாலேயே சட்டரீதியில் நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றேன். கடத்தலொன்றும் அண்மையில் நடைபெற்றுள்ளது. மகனைக் காப்பாற்ற பெற்றோர் உடனடியாக நடவடிக்கை எடுத்ததால் மகன் மீட்கப்பட்டுள்ளார்.

தென் மாகாண சபை கலைப்பட்டுள்ள நிலையில், அரச தரப்பினர், முதலமைச்சர் வேட்பாளர் பெயரைக் குறிப்பிடாது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளதாக அறியவருகிறது.

அரசாங்கம் வடக்கு கிழக்கில் புலிகளை ஒழித்தபின்னர் ஜனநாயகத்தை உருவாக்கி வருவதாகக் கூறுகின்றது. புலிகளின் பிடியில் அம்மக்கள் அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தது உண்மையே. அவர்கள் சுதந்திரமாகச் செயற்பட முடியாதிருந்தனர். அந்த மக்களுக்கு ஜனநாயகம் வழங்கப்படுவதை நான் ஏற்கின்றேன். வரவேற்கின்றேன்.

1995இல் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையிலான அரசு யாழ்ப்பாணத்தை முழுமையாக மீட்டது. இந்நிலையில், இடம்பெயர்ந்திருந்த மக்களை முதலில் மீளக்குடியேற்றியது. இதன்பின் 1998ம் ஆண்டு யாழ். மாநகரசபைத் தேர்தலை நடத்தியது. இத்தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் இடம்பெற்றது. தற்போது அரசாங்கம் யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் நடத்தும் தேர்தலுக்கு ஏன் சுயாதீன ஊடகவியலாளர்களைச் செல்வதற்கு அனுமதி வழங்க மறுக்கின்றது. அங்கு இடம்பெறும் மோசடிகளை, விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை வெளிவராது தடுப்பதற்காகவா? உலகத்திற்கு காண்பிப்பதற்காக மேற்கொள்ளும் தேர்தலைச் சுதந்திரமாக, ஒளிவுமறைவின்றி நடத்த வேண்டுமெனக் கேட்கின்றேன். இதற்கு ஊடகவியலாளர்களை அனுமதித்து அங்கு செல்ல அனுமதிக்க வேண்டும்.

தேர்தலில் அரச சொத்துக்கள் துஷ;பிரயோம் செய்யப்படுகின்றன. அரசாங்கம் பயத்தின் காரணமாகவே பகுதி பகுதியாக பிரித்துத் தேர்தலை நடத்துகிறது. இதற்காக அரச வாகனங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், மக்களின் பணம் பெருந்தொகையாக வீண்விரயமாக்கப்படுகிறது எனவும் மங்கள சமரவீர அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.

Exit mobile version