Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நாடு கடந்த தமிழீழக் குழுவின் உள்வீட்டில் புகை : உறுப்பினர் பகிரங்க மடல்

நாடுகடந்த தமிழீழக் குழுவினரின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான ஜெய்சங்கர் முருகையா அதன் உள்வீட்டுச் சிக்கல்களை பகிரங்க மடலாக எழுதியுள்ளார். அதனை மாற்றங்கள் இன்றிப் பிரசுரிக்கிறோம்.

 

ஜீ.ரி.வி என்ற தொலைக்காட்சி சேவையின் அறிவிப்பாளரும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான தினேஷ் வெளியேற்றப்பட்ட நிலையில் முரண்பாடுகள் எரிய ஆரம்பித்துள்ளன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் அரசியல் துறை மாண்புமிகு அமைச்சர், திரு. தயாபரன் தணிகாசலம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்…..

 

 

முதற்கண், எனது அன்பு கலந்த வணக்கங்கள். நா.க.த.அரசாங்கத்தின் உறுப்பினர்களுள் ஒருவனான ஜெயசங்கர் முருகையா ஆகிய நான் உங்களுக்கு பணிவுடன் எழுதிக் கொள்ளும் ஒரு திறந்த மடல் இது. மிக நீண்ட காலமாகவே இந்த மடலை உங்களுக்காக எழுத வேண்டும் என்று பல தடவைகள் நான் எண்ணியது உண்டு. ஆனாலும், பல நன்மைகள் கருதி இந்த முயற்சியினை முன்னெடுக்காமலே இன்று வரையில் நான் தவிர்த்து வந்திருந்தேன். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா? இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் உலகத்தமிழ் மக்களினது ஒரே நம்பிக்கை ஒளியான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிது சிறிதாக அழிந்து கொண்டு வருவதனை அதன் உறுப்பினர்களுள் ஒருவனாகவும் அதே சமயம், எங்கள் மக்களையும், எங்கள் தேசத்தையும் உண்மையாக நேசிப்பவர்களுள் ஒருவனாகவும் இருந்து கொண்டு, என்னால் இன்னமும் மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க முடியும்?

 

ஆரம்பத்தில், கடந்த இரு வருடங்களின் முன்னராக, நாம் இருவரும் ஒரே அணியில்தான் இருந்தோம். அதனால், நண்பர்களாகவும் கூட ஆகி விட்டிருந்தோம். ஆனாலும், நாம் இருவரும் அதே அணியிலேயே இன்னமும் தொடர்ந்து இருந்தாலும் கூட, எங்கள் இருவரது பாதைகளும் இரு வேறாகப் பிரிந்து விட்டன. எங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட அந்த சிறிய இடைவெளி, கால ஓட்டத்தில், அதிகமாகிக் கொண்டே வந்து, இன்று கடந்த சுமார் அரை வருட காலமாக இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசுவதைக் கூட நிறுத்திக் கொள்ளுமளவிற்கு வளர்ந்து நிற்கின்றது. எங்களது இந்தப் பிரிவுக்குக் காரணம், எங்களது தாயகத்தின் விடுதலைக்கான போராட்டத்தின் பாதை பற்றிய கருத்துக்களிலும், செயற்பாடுகளிலும் எங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள வேறுபாடுகளே அன்றி, வேறெதுவுமில்லை என்பதனை நாம் இருவருமே நன்கு அறிவோம்.

 

 

உங்கள் கருத்துக்களுடனும், செயற்பாடுகளுடனும் நான் முற்றாக வேறுபட்டதனால், என்னை உங்கள் வழிக்குக் கொண்டு வருவதற்காக நீங்கள் ஆரம்பத்தில் மிகவும் பிரயத்தனப்பட்டீர்கள், ஆனால், உங்கள் ஆசை நிறைவேறாது என்று நீங்கள் அறிந்தது முதல், என்னை முழுக்க முழுக்க ஓரம் கட்டுவதற்கு நீங்கள் தலைப்பட்டீர்கள். உங்கள் எண்ணம் அறிந்து, உங்கள் பாதையிலிருந்து என்னை நானாகவே விலக்கிக் கொண்டு, மௌனமாகத்தான் நான் இன்றுவரையில் இருந்து வந்தேன். ஆனால், இனியும் நான் தொடர்ந்து மௌனமாக இருந்தால், என் மனசாட்சியே என்னை இனி ஒரு போதுமே மன்னிக்காது, என்பதனை இன்று நான் ஆழமாக உணர்ந்து கொண்டதனால் இந்தத் திறந்த மடலினை உங்களுக்காக வரைவதற்கு நான் முடிவெடுத்தேன்.

 

 

எங்கள் அரசாங்கத்தினதும், எங்கள் விடுதலைப் போராட்டத்தினதும் நன்மைகள் பல கருதி, எங்கள் அரசாங்கத்தில் நீங்கள் அரங்கேற்றிவரும் உங்கள் திருவிளையாடல்கள் அனைத்தையும் நான் பொறுமையாகத்தான் இதுநாள் வரையில் பார்த்துக் கொண்டிருந்தேன். பொய்கள், புரட்டுக்கள், புளுகுகள் கூறுவதும் – ஒருவருக்கு எதிராக மற்றவரை “கோள்” மூட்டி அதில் “குளிர்” காய்வதும் – “நடுநிலைமை” என்ற போர்வையில் ஒரு சாராருக்கு “தலை” காட்டுவதும் மற்றவர்களுக்கு “வால்” காட்டுவதும், இவைதான் “அரசியல் இராஜதந்திரம்” என்று முழுக்க முழுக்க நம்பி, அதனைத் தவறாது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திலும் கடைப்பிடித்து வரும் ஒரு மகா மேதையான உங்களை ஒரு அமைச்சராக,  அதுவும் எங்கள் அரசாங்கத்தில் மிகவும் ஒரு முக்கியமான பொறுப்புமிக்க துறைக்கு அமைச்சராகப் பார்ப்பதற்கு எங்கள் மக்களும், எங்கள் பிரதமரும் என்ன “பாவம்” செய்தனரோ அதனை நான் இன்றுவரையில் அறியேன்.

 

 

ஆனால் இன்றோ, உங்கள் திருவிளையாடல்களை எங்கள் அரசாங்கத்தில் மட்டுமல்லாமல், ஈழத்தமிழர்களின் நம்பிக்கைக்கு உரிய தமிழ்த்தேசிய ஊடகமான GTV’யிலும் அல்லவா நீங்கள் ஆரம்பித்து விட்டிருக்கின்றீர்கள்? கடந்த இருவருடங்களாக நீங்கள் எங்கள் மக்கள் மத்தியில் எங்கள் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியிருந்த அபகீர்த்தியும், அவப்பெயரும், அவமானமும் போதும். தயவு செய்து, நீங்கள் உங்கள் சுயநலத்திற்காக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும், தமிழ்த்தேசிய ஊடகமான GTV’இற்கும் பேரழிவைக் கொண்டு வந்து விடாதீர்கள். பல நம்பிக்கைத் துரோகிகளினால், ஏற்கனவே “இருட்டினில்” தத்தளித்துக் கொண்டிருக்கின்றது எங்கள் தமிழினம். தயவுசெய்து, எங்கள் தமிழினத்தை உங்களைப் போன்றவர்கள் மேலும் காரிருளுக்குள் இட்டுசென்று விடாதீர்கள், என்று உங்களை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கின்றேன்.

 

எங்கள் மக்களை மீண்டும் உண்மையான “வெளிச்சத்திற்கு” கொண்டு வருவதற்கு நீங்கள் உண்மையில் விரும்பினால்.., தயவுசெய்து, நீங்கள் உடனடியாக GTV’யை விட்டு வெளியேற வேண்டும். இதனை நான் உங்களிடம் மிகவும் தாழ்மையுடனும், பணிவுடனும், உறுதியுடனும் வேண்டிக் கொள்கின்றேன். இது என் விருப்பம் மட்டுமல்ல அல்லது எங்கள் அரசாங்கத்தின் பல உறுப்பினர்களின் விருப்பம் மட்டுமல்ல, இது எங்கள் மக்களின் விருப்பமும் ஆகும். இது நீங்கள் எங்கள் மக்களுக்கும், மண்ணுக்கும், விடுதலைப் போராட்டத்திற்கும் இன்றுவரையில் செய்துள்ள சேவைகளுள் மிகவும் மகத்தான சேவையாக இருக்கும் என்பதில், தனிப்பட்ட ரீதியில் எனக்கு எள்ளளவேனும் ஐயமில்லை.

 

நன்றி.

 

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

Exit mobile version