Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நாடும் மக்களும் இருள் சூழ்ந்த சர்வாதிகாரத்திற்குள் இழுத்துச்செல்லப்படும் நிலை:புதிய ஜனநாயக கட்சி கண்டனம்.

10.01.2009.

நாடும் மக்களும் இருள் சூழ்ந்த சர்வாதிகாரத்திற்குள் இழுத்துச் செல்லப்படும் சூழல் தோன்றியிருப்பதையே ஊடகவியலாளர்களும் சண்டே லீடர் வாரப் பத்திரிகையின் ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்கவின் பட்டப்பகல் படுகொலை எடுத்துக் காட்டுகிறது என புதிய ஜனநாயகக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா. செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமத்துங்க கொல்லப்பட்டமை தொடர்பாக அக் கட்சி வெளியிட்ட கண்டன அறிக்கையிலேயே அதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்தாவது;

விமர்சனம் செய்யக்கூடிய துணிவான ஊடகவியலாளர்களையும் மாற்றுக் கருத்துடைய அரசியலாளர்களையும் சட்டத்திற்கு அப்பால் இனம் காட்டாத ஆயுததாரிகள் மூலம் ஒழித்துக்கட்டும் போக்கு மீண்டும் முடுக்கி விடப்பட்டுள்ளதா என்ற அச்சம் தரும் கேள்வியே லசந்தவின் படுகொலை மூலம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இப் படுகொலை விடயத்தில் அரசாங்கம் உரிய அக்கறையுடன் நடந்து கொள்ளுமா என்ற சந்தேகத்தையும் கொண்டுள்ளது. ஏனெனில் அண்மைக் காலம் வரையான ஊடகவியலாளர்கள் படுகொலைகளுக்கும் ஊடகங்கள் தாக்கப்பட்டமைக்கும் அரசாங்கம் உரிய விசாரணைகளையோ நடவடிக்கைகளையோ எடுத்ததில்லை.

லசந்த விக்கிரமதுங்கவை ஆசிரியராகக் கொண்ட சண்டே லீடர் ஆங்கில வார இதழ் பல்வேறு அரசியல் விமர்சனங்களையும் மறைவில் உள்ள தகவல்களையும் வெளியிட்டு வந்துள்ளது.அதேவேளை லசந்த பல்வேறு விடயங்களையும் கருத்துகளையும் வெளியிட்டு வந்துள்ளார். அவற்றையெல்லாம் எவாராயினும் ஏற்கவும் நிராகரிக்கவும் முடியும். அக் கருத்துக்களும் விமர்சனங்களும் தவறானவையாகவும் கூட இருக்க முடியும். ஆனால் ஒரு ஊடகவியலாளருக்கு பத்திரிகை ஆசிரியருக்கு உள்ள அடிப்படை உரிமையைத் துப்பாக்கி ரவைகள் மூலம் மறுத்துவிட முடியாது.

கடந்த மூன்றாண்டுகளில் தமிழ் ஊடகவியலாளர் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர். அதே பாதையில் இப்போது சிங்கள ஊடகவியலாளரும் ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியருமான லசந்தவின் பேச்சும் எழுத்தும் துப்பாக்கி ரவைகள் மூலம் முடிவு கட்டப்பட்டிருக்கிறது.

இச் செயல் வன்மையான கண்டனத்திற்கும் எதிர்ப்புக்கும் உரியதாகும். யுத்த வெற்றியின் மறைவில் இது போன்ற திட்டமிட்ட படுகொலைகள் தொடர்ந்து அரங்கேறப் போகின்றதா என்ற கேள்வியே மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதே சமயம், எம்.ரி.வி. தாக்குதல் தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

எம்.ரி.வி. ஊடக வலையமைப்பின் மீது இனம் காட்டாத ஆயுததாரிகள் நடு இரவில் நடத்திய மோசமான தாக்குதல்களும் தீவைப்பும் ஊடக சுதந்திரத்தின் மீதான படுகொலை முயற்சியாகும். தமக்கு விரும்பாத கருத்துகளையும் காட்சிகளையும் சகிக்க முடியாத சக்திகளே மேற்படி தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தியுள்ளன.

பாசிசத்தன்மை வாய்ந்த மேற்படி தாக்குல்களை எமது புதிய ஜனநாயகக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அரசாங்கம் இதற்கான நடவடிக்கையை எடுக்கும் என நம்ப இடமில்லை. மக்களும் ஜனநாயக சக்திகளும் தான் உரிய பதில் கூற வேண்டும் என்பதையே எமது கட்சி வற்புறுத்துகிறது.

இன்றைய அரசாங்கம் பதவிக்கு வந்தபோது ஊடக சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் என்பவற்றுக்குப் பாதுகாப்பும் உத்தரவாதமும் தருவதாகவே கூறியிருந்தது. ஆனால் கடந்த மூன்றாண்டு ஆட்சியில் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் வடக்கிலிருந்து தெற்குவரை நாட்டின் சகல பாகங்களிலும் தாக்குதல்களுக்கும், கொலைகளுக்கும் ஆளாக்கப்பட்டே வந்துள்ளனர்.

தமிழ், சிங்கள ஆங்கில ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் இனம் தெரியாத இலக்கத் தகடுகள் அற்ற வாகனங்களில் வரும் ஆயுததாரிகளால் தாக்கப்பட்டு கொலைகளும் செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

மற்றொரு புறத்தில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக ஊடகவியலாளர்கள் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.இத்தகைய நிகழ்வுப் போக்கின் தொடர்ச்சியாகவே கடந்த செவ்வாய் இரவில் எம்.ரி.வி. ஊடக வலையமைப்பு தாக்கி எரியூட்டப்பட்டிருக்கின்றது. இச் சம்பவத்தின் சூத்திரதாரிகளையும் சம்பவத்தில் ஈடுபட்ட ஆயுததாரிகளையும் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்பதில் அர்த்தம் இல்லை. அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே அமையும்.

ஏனெனில் இதுவரையான ஊடகங்கள் மீதான தாக்குதல்களுக்கும் ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கும் உரிய நடவடிக்கைகளோ சட்டத்தின் மூலமான தண்டனைகளோ கிடைக்கவில்லை. அதற்குரிய எவ்வித முயற்சிகளும் அரசாங்கத்தினால் உரிய வகையில் முன்னெடுக்கப்படவில்லை. இந் நிலையில் முன்பு இடம்பெற்று வந்த இழுத்தடிப்பும் மறைப்பும் போன்றே அண்மைய தாக்குதல் பற்றியும் இடம் பெறும் என்றே எதிர்பார்க்க முடியும். இதற்கு மக்களும் ஜனநாயக சக்திகளும்தான் ஒன்று பட்ட உறுதியான எதிர்ப்பு நடவடிக்கை மூலம் பதிலளிக்க வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.

 

Exit mobile version