Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நாங்கள் தலித்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல : ஆதிக்க சாதி வெறியர்கள்

தமிழ் நாட்டில் ஆதிக்க சாதி வெறியைத் தூண்டிவரும் கட்சிகளில் பாட்டாளி மக்கள் கட்சியும் ஒன்று. தாழ்த்தப்ப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டம் போன்றவற்றைக் கூட நீக்குமாறு போராட்டம் நடத்திவருபவர்கள் இவர்கள். காதல் திருமணம் போன்ற மனித குலத்தின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராகக் கூட சாதி அடிப்படையில் வன்முறையைத் தூண்டியவர்கள். சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்புரம் கடற்கரையில் நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம், புதுவையில் இருந்து பல்லாயிரகணக்கில் மக்கள் திரண்டு வந்திருந்தனர். மாநாட்டுக்கு வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு என அழைக்கப்படும் தாதா எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். மனித குல அவமானமான ஆதிக்க சாதிவெறியைத் தூண்டும் கூட்டம் இந்த நூற்றாண்டிலும் இந்தியாவில் உயிர்வாழ்கிறது.

மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

கடந்த 32 ஆண்டுகளாக இளைஞர்களை நல்வழிப்படுத்த பயிற்சி அளித்து வருகிறோம். வன்முறை, தீவிரவாதம், பெண்ணாசை இன்றியும், மது, புகை, சூதாட்டத்துக்கு அடிமையாகாமலும் இருக்க வேண்டும் என்று இளைஞர்களிடம் உறுதிமொழி பெற்று வருகிறோம்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தி திருமண வயதை எட்டாத சிறுமிகளின் வாழ்க்கை ஒரு சிலரால் சீரழிக்கப்படுகிறது. இதை பாதிக்கப்பட்ட பெண் பெற்றோர்களும் நாங்களும் எடுத்து கூறினால் ஜாதி வெறியை தூண்டுவதாக காவல்துறை எங்கள் மீது குற்றம் சாட்டுகிறது. இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று அனைத்து சமுதாய மக்களும் கூறுகிறார்கள். நாங்கள் நீக்க சொல்லவில்லை. அதில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். முறையாக பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறோம்.

நாங்கள் தலித்துகளுக்கு எதிரிகள் அல்ல. அவர்களுடன் சமுதாயத்தில் நல்லிணக்கத்துடன் வாழவே விரும்புகிறோம். காதல் நாடகம் என்ற பெயரில் பணம் பறிப்பதைத்தான் எதிர்க்கிறோம். நாங்கள் காதலை எதிர்க்கவில்லை. நன்றாக படியுங்கள். 21 வயதுக்கு மேல் காதலித்தால் அது காதல் ஆனால் 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை காதல் என்ற பெயரில் பலாத்காரம் செய்வது எந்த வகையில் நியாயம். தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ அனைத்து சமுதாய மக்களிடமும் காவல்துறை பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Exit mobile version