படைப்பாளி என்பவர் சமூகத்தில் இருந்து எப்படி வேறுபடுகிறார்? பெண் கவிதைகள் மீதான விமரிசனம் இன்று எப்படி இருக்கிறது?
எனக்குப் பிடிக்காததை இதுவரை வலிந்து செய்ததில்லை. தொலைதூரத்தில் தெரிகிற குறிப்பிட்ட ஒரு இலக்கை நோக்கிப் போக வேண்டும் என்ற திட்டமிடலும் இல்லை எந்த அவசரமும் இல்லை. கவிதை எழுதுவது என் இயல்பு. கவிதையின் நீட்சியாக என்ன தோன்றுகிறதோ அதைச் செய்கிறேன். தடாகத்தில் தூக்கி எறியப்படுகிற கல்போல படைப்புகளைச் சமூகத்தின் முன் வைக்கிறோம். அதிர்வுகள் பெரிதாக இருக்கலாம் சிறியதாகவும் இருக்கலாம். ஆனால் சமீப காலமாக தமிழ் படைப்பாளிகளுக்கு அதிகாரத்தின் மீதான கவர்ச்சி அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக ஈழம் சார்ந்து படைப்பாளிகளின் அணுகுமுறை கேள்விக்கு உட்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இங்கே போர் இல்லை. மூன்று வேளையும் சாப்பாடு கிடைக்கிறது. சவுகர்யமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமூகத்தைப் போல படைப்பாளிகளும் மந்தமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். பெரிய எழுத்தாளர்கள் என… என் வாயால் அவர்கள் பேரைக்கூட உச்சரிக்க விரும்பவில்லை – பெண் கவிதைகள் குறித்து இதுவரை அவர்கள் நேர்மையான அணுகுமுறையோடு விமரிசனம் செய்ததில்லை. இதை திட்டமிட்ட சதி என்றுகூட சொல்லலாம். தொடர்ந்து இப்படிப்பட்ட புறக்கணிப்பு நிகழும்போது பின்னால் வரும் சந்ததிக்குப் பெண் கவிதை குறித்த வரலாறே தெரியாமல் போகலாம்!
“இலங்கை பிரச்சினையில் அரசியல்வாதிகளைப்போல இலக்கியவாதிகள் நடந்துகொண்டார்கள் என்கிற விமரிசனம் எழுந்துள்ளது. இதில் உங்களுடைய கருத்து என்ன?”
சமீபகாலமாக ஈழ வரலாறு குறித்து அத்தனை நூல்களையும் தேடிப்பிடித்து படித்து வருகிறேன். நமக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமான பூகோள ரீதியான உறவுகள்இ சமூக வரலாற்றுஇ அரசியல் உறவுகள் நெகிழ்வைத் தருகின்றன. இப்படிப்பட்ட எந்த வகையான புரிதலும் இல்லாமல் ஆறேழு மாதங்களாக இலக்கியவாதிகளால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் கவியரங்கங்கள் கேலிக்கூத்தாகத்தான் இருந்தன. தொலைக்காட்சியில் காட்டப்படுகிற கொலைகளைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டவர்களாகத்தான் இவர்கள் நடந்துகொண்டார்கள். நம்முடைய தம்பியோ அண்ணனோ காயப்பட்டிருந்தால் உடல் மனம் என சகலமும் துடித்திருக்குமே! அந்தத் துடிப்பு நமக்கு வந்திருக்க வேண்டாமா? இதைவிட அபத்தம் தமிழக அரசின் உலகத் தமிழ் மாநாடு குறித்த அறிவிப்பு. ஆயிரம் ஆயிரமாக சொந்த உறவுகளைப் பறிகொடுத்துவிட்டு தமிழுக்கு விழா எடுத்து என்னவாகப்போகிறது? மொழியின் புளகாங்கிதத்தை பேசவா? தமிழ் மக்கள் குறித்தோ பண்பாடு இலக்கியம் குறித்தோ எந்தவித அறிதலும் அரசுக்குக் கிடையாது. நவீன இலக்கியத்தின் ஏஜென்சி போல கனிமொழியைச் செயல்பட வைப்பதுதான் இலக்கியம் குறித்து அரசுக்கு இருக்கிற அதிகபட்ச அக்கறை. 80இ90 வயதுகளைக் கடந்த தமிழ் அறிஞர்களை வைத்து நடத்தப்படுகிற உலகத் தமிழ் மாநாட்டால் என்ன நடந்துவிடப்போகிறது? பசுமை நிறைந்த நினைவுகளே என பாடச்சொல்லியா கேட்கப்போகிறோம்?! வரலாற்றில் எங்கும் நிகழ்ந்திராத வன்முறை ஈழத்தில் நடந்திருக்கிறது. முப்பத்தைந்து ஆண்டுகாலமும் இதுவெறும் அரசியல் பிரச்சினையாக பார்க்கப்பட்டதாலேயே இன்று ஒட்டுமொத்த தமிழர்களும் கண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் படுகொலைகளை நம்மால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். நம் எல்லோருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது.ஓரினச் சேர்க்கையை குற்றம் என சொல்லும் இந்தியக் குற்றவியல் சட்டம் 377வது பிரிவை நீக்குவது குறித்து உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ள நிலையில் ஊடகங்களில் ஓரினச் சேர்க்கை குறித்து ஆரோக்கியமான விவாதம் எழுந்துள்ளது. கவிஞர் லீனா மணிமேகலை கூட தன்னுடைய ‘உலகின் முதல் அழகிய பெண்’ கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் தான் இருபால் விருப்பமுள்ளவர் என எழுதியுள்ளார்.
“கட்டுப்பாடுகள் மிக்க இந்திய சமூகத்துக்குள் இத்தகைய வெளிப்படையான அறிவிப்புகள் விவாதங்கள் மாற்றங்களை ஏற்படுத்துமா?”
சட்டம் போட்ட பிறகுதான் ஊடகங்கள் ஒதுக்கப்பட்ட விஷயங்களைப் பேசவேண்டும் என்பதில்லை. அரசுக்குச் சொறிந்து கொடுக்கும் வேலையை விட்டுவிட்டு ஊடகங்கள் தன்னளவில் சுயமாக மக்களுக்காகச் செயல்பட முடியும். ஆனால் மனித மனங்களில் படிந்துபோயுள்ள வக்கிரமான பாலியல் ஆசைகளை நிறைவேற்றக்கூடியவையாகத்தான் பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. சமீபத்தில் நடிகை புவனேஸ்வரி கைது விவகாரத்திலும் அனந்தலட்சுமி கொலை சம்பவத்திலும் ஊடகங்கள் நடந்துகொண்ட விதத்தை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அந்தந்த நேரத்தில் கிடைக்கும் செய்திகளின் தன்மைக்கு ஏற்றபடிதான் ஊடகங்கள் செயல்படுகின்றனவே தவிர சமூக மாற்றத்துக்காக அல்ல. சமூகம் குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் ஒருவர் தன்னை இருபால் விருப்பமுள்ளவர் என சொல்லிக்கொள்வது மீடியாவின் கவனத்தை தன்பக்கம் ஈர்ப்பதற்கான முயற்சி. சமூகத்தின் மீது ஆழமான பார்வை வைத்திருக்கிறவர்களால் மேலோட்டமாக போகிற போக்கில் இப்படிப்பட்ட ஸ்டேட்மெண்டைக் கொடுக்க முடியாது.சமீப காலமாக ‘லிவிங் டுகெதர்’ என்று சொல்லப்படுகிற திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது அதிகரித்து வருகிறது.
” இது திருமணம் என்கிற நிறுவன அமைப்புக்கு மாற்றாக இருக்கும் என நம்புகிறீர்களா..?”
நானும் இப்படிப்பட்ட வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற வகையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது திருமண அமைப்புக்கு மாற்றாக இருக்கும் எனச் சொல்லமுடியும். ஆனால்இ முழுமையான மாற்றாக இருக்கும் என்று கூற முடியாது. பெண் மீதான பாலியல் ஒடுக்குமுறைகளுக்கும் திருமணம் என்கிற அதிகார அமைப்பின் முரண்பாடுகளுக்கும் இது தீர்வு தரும். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதுதான் இயற்கையின் நியதி. ஆனால் திருமணம் என்பது காலில் போடப்பட்ட அடிமைச் சங்கிலி. அதனால் நல்ல ஆண்களுடன் சேர்ந்து வாழ்வதை நான் வரவேற்கிறேன். இந்த வாழ்க்கையில் பெண்களின் தனிப்பட்ட ஆளுமையைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். ஆண்களுக்கும்கூட இது இறுக்கம் தளர்ந்த வாழ்க்கையாக இருக்கும். இருவருடைய வாழ்க்கையும் இலகுவாக அமையும். விவாகாரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்ட பிறகுதான் திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என லெனின் சொன்னது போலத்தான் இன்றைய திருமண வாழ்க்கை இருக்கிறது. விவாகரத்தும் விவாகரத்துக்குப் பிறகான வாழ்க்கையும் நம் நாட்டில் கொடுமையான விஷயங்கள். ஆனால் திருமண அமைப்புக்குள் போகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கையில் விடுதலைக்கான கனவுகள் திறந்திருக்கும். பெரியார் சொன்னதுபோலஇ ‘ஐந்து வருடம் சேர்ந்து வாழுங்க. அதுக்குப்பிறகு குழந்தை வேணும்னு நினைச்சா பெத்துக்குங்க..!
“இறுதியாக…நாடாளுமன்ற தேர்தலின்போது பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து பணியாற்றினீர்கள். இப்போது கட்சியிலிலிருந்து விலகிவிட்டதாக தெரிகிறது. திடீர் அரசியல் பிரவேசத்துக்கும் விலகலுக்கும் என்ன காரணம்..?”
அரசியல் ரொம்ப அவசியம். ஆனால் அதற்கு இன்னும் நான் தயாராகவில்லை! மக்களோடு இன்னும் கீழே இறங்கி வேலை செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. கூடவே தற்கால அரசியல் சூழலில் பெண்களுக்கான இடம் கேள்விக்குரியதாக இருக்கிறது. காலம் இருக்கிறது மீண்டும் என்னுடைய அரசியல் பிரவேசம் எழுச்சியோடு நிகழும்.
நேர்காணல் : மு.வி.நந்தினி – நன்றி :சூரியகதிர்