Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நவநீதம்பிள்ளையின் கருத்து மிகச் சரியானது : மனோ கணேசன் எம்.பி.

இலங்கைக்கு மனித உரிமை கண்காணிப்பாளர்கள் அனுப்பப்படுவதற்கு இலங்கை அரசு உடன்பட வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் கருத்து சரியானது. ஒன்றில் இங்கு நடக்கும் மனித உரிமை அவலங்கள் நிறுத்தப்பட வேண்டும். அல்லது ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் உட்பட உலக சமுதாயம் கூறுவதை இலங்கை அரசாங்கம் மதித்து நடக்க வேண்டும் என மக்கள் கண்காணிப்புக்குழு ஏற்பாட்டாளரும், மனித உரிமைகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் கழகத்தின் தலைவருமான மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

மனோ எம்.பி. மேலும் இது தொடர்பில் கூறியதாவது:

“ஐ.நா. மனித உரிமை பணியகம், இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் குடிமக்கள் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டுமெனவும் நிலைமைகள் போர் குற்றம் எனக் கருதப்படும் அளவுக்குத் தீவிரமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதே கருத்தையே இன்று உலக நாடுகள் பலவும் தெரிவித்து வருகின்றன. ஆனால், அரசாங்கம் உலகத்தின் குரலுக்கு செவிமடுப்பதாகத் தெரியவில்லை.

பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தினசரி மக்கள் செத்துமடிகின்றனர்; காயமடைகின்றனர். இதை அரசாங்கம் மறுக்க முடியாது. ஏனென்றால் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் நூற்றுக்கணக்கான காயமடைந்த மக்களை முல்லைத்தீவுப் பகுதியிலிருந்து திருகோணமலைக்கு அழைத்து வந்து கொண்டிருக்கின்றது.

அவர்கள் திருகோணமலை, கண்டி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றார்கள். அதற்குப் பின் வவுனியா முகாம்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றார்கள். இதற்குள் பல குடும்பத்தவர்கள் தங்கள் சொந்தங்களை பிரிந்து தாய் ஓரிடத்திலும் பிள்ளை ஓரிடத்திலுமாக பிரிந்து தவிக்கின்றார்கள். வன்னியிலே வாழும் தங்களது உடன்பிறப்புக்களின் நிலைமையை அறிய முடியாமல் வவுனியா முதல் தெற்கே வாழும் உறவினர்கள் வரை அனைவரும் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதுதான் இன்று நமது நாடு எதிர்கொள்ளும் மனித பேரவலம். இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு இருக்கக்கூடிய மாற்று திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

எனவே, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் கோரிக்கையை அரசாங்கம் உடனடியாக செவிமடுத்து செயற்படுத்த வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version