ஐநா மனித உரிமை ஆணையாளரின் இந்த கருத்துகளை கேட்டு, இலங்கை அரசும், அரசை சுற்றியிருக்கும் பேரினவாத அமைப்புகளும் சந்தோசப்படுகின்றன. ஆனால் இந்த மகிழ்ச்சி ஒற்றைக்கண் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.
சர்வதேச அங்கீகாரம் இல்லாத ஒரு கெரில்லா இயக்கமான புலிகளை விட, உலக ஏற்புடைய ஐநாவில் உறுப்புரிமை கொண்ட ஒரு நாடான இலங்கையின் அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள, அரச பயங்கரவாத குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐநா மனித உரிமை ஆணையாளர் விசாரிக்க முனையும்போதும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பாக அரசாங்கத்தின் பொறுப்புகூறலை வலியுறுத்தும் போதும், மண்ணெண்ணெயில் விழுந்த சாரைபாம்பு போல் இலங்கை அரசாங்கம் கலவரப்படக்கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரித்துள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
ஐநா மனித உரிமை ஆணையாளர் இங்கே வந்து புதிய விபரங்களை பெற்றுகொள்ளவில்லை. இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மற்றும் நிகழ்த்தப்பட்டு வரும் மனித உரிமை கொடுமைகளை அத்தாட்சிபூர்வமாக ஐநா மனித உரிமை ஆணையம் அறியும். ஆணையாளரின் நேரடி விஜயம் என்பது ஐநா சபையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது.
புலிகளை பற்றிய கடும் விமர்சனம் ஏற்கனவே ஐநா செயலாளர் நாயகத்தின் குழு சமர்பித்த அறிக்கையில் விலாவாரியாக இருக்கின்றது. எனவே புலிகள் பற்றிய விமர்சனம் புதிது அல்ல.
இலங்கை அரசாங்கம், தனது சொந்த ஆணைக்குழுவான, கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு முன்வைத்த சிபாரிசுகளை, குறிப்பாக உரிமை மீறல் விசாரணை மற்றும் பொறுப்பு கூறல் ஆகியவை தொடர்பில் என்னத்தான் செய்துள்ளது என்பதை நேரடியாக பார்த்து செல்லவே அவர் இங்கு வந்தார். தவிர, அமைச்சர் மேர்வின் சில்வா என்ற கோமாளியுடன் திருமண பந்தம் பற்றி ஆராய அவர் இங்கு வரவில்லை.
இங்கு வாழும் எங்களுக்கு இலங்கை அரசு நடைமுறை படுத்தியுள்ள தமது சொந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகள் எதையும், குறிப்பாக பிரதான விடயங்கள் தொடர்பில் காணக்கிடைக்கவில்லை.
நவநீதன் பிள்ளை தனது ஆய்வில் எதனை கண்டார் என்பது விரைவில் தெரியவரும். எது எப்படி இருந்தாலும் நமது மக்களுக்கு உரிமை மீறல்கள் தொடர்பிலும், அரசியல் அதிகார பகிர்வு தொடர்பிலும் உரிய ஏற்பாடுகள் நடைமுறை ஆகும் வரை நாம் எனது அரசியல் மற்றும் ராஜதந்திர போராட்டங்களை கைவிட முடியாது.
இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் உரிமை போராட்டம் தொடர்பாக சர்வதேச சமூகத்தை நாடும் எமது உரிமையை எந்த சந்தர்ப்பத்திலும் நாம் கைவிட உடன்பட மாட்டோம் என்பதயும் இலங்கை அரசாங்கம் தெளிவாக மனதில் கொள்ள வேண்டும்.