Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நள்ளிரவு கழிந்த நேரத்தில் : ரோக் டால்டன் கவிதைகள்: யமுனா ராஜேந்திரன்

தமது சக புரட்சிகர இயக்கத் தோழர்களால் துரோகி எனக் குற்றம் சாட்டப்பட்டு, தனது நாற்பதாவது வயதை எட்டும் முன்பே படுகொலை செய்யப்பட்ட எல்ஸால்வடார் நாட்டின் போராளிக் கவிஞன் ரோக் டால்டன். இவரது எழுத்துக்கள் தணலின் வெப்பமும், குருதியின் வாசமும், வேட்டை நாய்களென இலத்தீனமெரிக்க மக்களைத் துரத்தும் மரணத்தின் குருரத்தையும் நேரடியாக முன்வைக்கும் எழுத்துக்கள். அடுத்த மனிதனை நேரடியாகத் தமக்கு முன்னிருத்தி முகத்துக்கு நேராகப் பேசும் கவிதைகள் இவை. பிரதி தரும் இன்பத்தையும் அது தரும் கிளரச்சியையும் இலக்கியத்தில் தேடித்திரிகிறவர்களுக்கு வசீகரமற்றவை இந்தக் கவிதைகள்.

1975 ஆம் ஆண்டு மே 10 ஆம் திகதி ‘ஈஆர்பி’ எனும் புரட்சிகர அமைப்பின் தலைவரான ‘அட்டில்லா’ என அழைக்கப்பெறும் ஜோக்வின் வில்லா லோபஸ் ரோக்டால்டனைக் கொல்வதற்கான உத்தரவைப் பிறப்பித்தான். ரோக் டால்டன் இன்னும் நான்கு நாட்களில் தனது 40 ஆவது பிறந்த நாளைக் கொண்hடவிருந்த வேளையில் இக்கொலைத் தண்டனை அவர் மீது விதிக்கப்பட்டது. ரோக் டால்னைக் கொல்வதற்காக ஜோக்வின் வில்லா லோபஸ் மற்றும் ஜோர்ஜ் மென்டஸ் போன்றவர்கள் உள்ளிட்ட கமான்டோக்கள் குழு அனுப்பப்பட்டது. இந்தக் குழுவை அனுபபியவர் எட்கர் அலஜான்ட்ரோ ஜோர்ஜ் மென்டஸ் என தற்போது அறியப்பட்டிருக்கிறார். எல்ஸால்வடோர் நாட்டின் ஸான் ஸால்வடோர் நகரத்திலுள்ள சாந்தா அனிதா எனும் இடத்திலுள்ள ஒரு வீட்டில் வைத்து, ரோக் டால்டன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்தக் கொலையில் பிறரும் பங்கு பெற்றிருக்கலாம் என்றாலும்,மேற்குறிப்பிட்ட மூவர் மட்டுமே இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். ஜோக்வின் வில்லா லோபஸ் தற்போது இலண்டனில் வாழ்கிறான். மென்டஸ் தற்போது ‘எப்எம்எல்என்’ அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறான். ரிவாஸ் மிரா தனது முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரியின் மூலம் மாற்றிக்கொண்டு திரிந்து வருகிறான்.

ரோக் டால்டனின் கவிதைகளுககான படைப்பு ஆதர்ஷங்களாக இரண்டு கவிஞர்களை டோல்டன் குறிப்பிடுகிறார். முதலாமவர் பெருநாட்டின் கவிஞரான ஸெஸார் வல்லேஜ்ஜோ. இரண்டாமவர் 1984 அம் ஆண்டு பாரிஸில் மரணமற்ற பெல்ஜியக் கவிஞர் ஹென்றி மிச்சாக்ஸ். ஸெஸலார் வல்லேஜ்ஜோ பாரிசில் மரணமுற்ற, சேகுவேராவைக் கவர்ந்த பெருநாட்டின் கவிஞர். மார்க்சிஸ்ட் புரட்சியாளர். மிச்சாக்ஸ் இந்தியா சீனா உள்ளிட்ட கிழக்கத்திய நாடுகளின் தத்துவங்களையும் மாந்தீரீகங்களையும் அறிந்தவர். ஸர்ரியலிஸ்ட்டுகளுடன் சேர்ந்து செயல்பட்டவர். தனது இறுதிக் காலத்தைப் பாரிஸில் கழித்தவர். ஸ்பானிய ஓவியர் ஸால்வடோர் டாலியுடன் உறவுகொண்டு ஓவியத்திலும் ஈடுபாடு காட்டியவர். குறிப்பிட்ட இருவரிடமும் அவர்களது படைப்புகளில் சர்ரியலிஸப் பண்புகள் இருந்தபோதிலும், வல்லேஜ்ஜோ கருத்தியல் எனும் அளவில் ஸர்ரியலிசத்தை மறுத்தவர். அது மட்டுமல்ல ஸர்ரியலிஸ்ட்டுகளை நக்கல் செய்தவர் அவர். ரோக் டால்டன் மிச்சாக்ஸின் ‘படிமங்கள், படிமங்கள் தாண்டிய மேலதிக நனவோடைக் கற்பனைகள்’ என்பதைத் தான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன் என்கிறார். மிகச்சிரியான அரசியல் உணர்வு, அது சார்ந்த கடப்பாட்டுணர்வு, பிரத்யேகமான சொந்தப் படிமங்கள் மீதான தேடல், இதுவே தனது படைப்பு நெறி என்கிறார். அழகான கச்சிதமான வார்த்தைகளில் தனது அரசியலைச் சொல்வதற்கே தான் கவிதையைத் தேர்ந்ததாகவும் ரோக் டால்டன் குறிப்பிடுகிறார்.

ஜோர்ஜ் லூயிஸ் போர்ஹேயின் வழியிலும், கார்சியா மார்க்வஸின் வழியிலும் அல்லது மேஜிக் ரியாலிசத்தின் வழயிலும், இலத்தீன் அமெரிக்க இலக்கியத்தைப் பயின்றவர்கள் அறிகிற இலத்தின் அமெரிக்க வாழ்விலிருந்து முற்றிலும் வித்தியாசமான இலத்தீன் அமெரிக்காவை, அதனது மனிதர்களை நாம் ரோக் டால்டனிடம் தரிசிக்க முடியும். ரோக் டாலடன் வாழ்நாள் முழுக்கவும் அவருக்கு ஓரடி பின்னால் மரணம் துரத்தத் தப்பித் திரிந்தவன். அரசியல் முரண்பாடுகளும், முரண்பாடுகளை துப்பாக்கிகளின் வழியில் தீரத்துக் கொள்வதுமான ஒரு சூழலில், மரணம் எந்நிமிடமும் நேரும் நிச்சயம் எனத் தெரிந்த நிலையில், தான் உறவுகொண்ட பெண்களின் அம்மண உடம்பிலும் முலைக் காம்புகளிலும் அவர்களது யோனிகளிலும் ஆறுதலும் அடைக்கலமும் நித்தியமும் பெற்ற கலைஞன் ரோக் டால்டன். இக்காரணத்தாலேயே அவரது கவிதைகளில் பெண்ணின் உடல் தரும் இன்பம் என்பது மிகமுக்கியமான கூறாக இருக்கிறது. அவரது கவிதைகள் அனைத்திலும் இவ்வகையிலேயே மரணமும் பெண்ணின் உடம்பும் அருகருகில் இடம் பெற்றுவிடுகிறது.

தனது இறுதிக் கவிதைகளிளொன்றில், போலீசிலிருந்து தப்பும் நான், உனது அம்மண உடலில் அடைக்கலம் தேட முடிகிறது எனக் குறிப்பிடும் டால்டன் வாழ்ந்த சூழல், ராணவத்தினதும் போலீசினதும் வேட்டையில் இருந்து தப்பித் திரிந்த சூழல், புரட்சிகர அமைப்புகளினுள் ஆக்கபூர்வமான விமர்சனங்களும், விவாதங்களும் கூட துரோகமாக அடையாளம் காணப்படும் சூழல், தனிநபர் அதிகாரப் போட்டிகள் கூட அரசியல் முலாம் பூசப்படும் சூழல். இதுதான் ரோக் டால்டன் வாழ்ந்த அரசியல் சூழல். மக்களையும் பெண்களையும் நேசிக்கிற ஒரு கலைஞன் இத்தகைய சூழலில் நீண்ட நாட்கள் மரணத்தின் கொடுங்கரங்களிலிருந்து தப்புவது என்பது இயல்பாகவே கடினம். இராணுவக் கொலைத் தண்டனையிலிருந்து அவர் தப்புகிறார். அமெரிக்க உளவுத்துறையின் கொலை முயற்சியிலிருந்து அவர் தப்புகிறார். ஆனால் தனது சொந்தப் புரட்சிகரக் கட்சியின் கொலைத் தண்டனையிலிருந்து அவரால் தப்ப முடியவில்லை.

மக்களுக்கும் புரட்சிகர அமைப்புக்கும் இடையிலான இன்றியமையாத உறவு குறித்து அவர் பேசினார். கட்சியைப் பிளவுபடுத்த முயல்கிறார், அமெரிக்க உளவாளி எனக் குற்றம் சுமத்தப்பட்டு அவர் சுட்டுக்கொலை செய்யப்படுகிறார். அவரது கவிதைகளின் இறுதி இவ்வாறுதான் மரணத்தைச் சந்திக்கிறது. ரோக் டால்டன், பெண் உடம்பின் வழி வாழ்வின் மீது தீராத காதலும் மோகமும் கொண்டு வாழ்ந்தவன். மரணத்தின் நித்தியமும் அநித்தியமும் அவனது கவிதைகளின் ஒவ்வொரு எழுத்திலும் தனது தடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. தான் வாழும் நொடிதொரும் காதலும் மரணமும் குறித்து, அதனை வாழ்ந்துபட்ட அனுபவத்துடன் பதிந்து வைத்த வகையிலேயே ரோக் டால்டனின் கவிதைகள் அமரத்துவம் பெறுகின்றன. ரோக் டால்டனின் கவிதைளும் உரையாடல் பண்பு கொண்டவைதான். தான் விரும்பிய அல்லது தன்னை விரும்பிய பெண்களுடனான, தனது சொந்தத் தோழர்களுடனான, மரணத்துடனான அவரது உரையாடல்தான், அவரது கவிதைகளாக ஆகிறது.

 

சந்தேகம் வந்ததென்றால்

 

கார்ல் மார்க்ஸ் ஒரு பட்டுப் பூச்சிக்கு முன்பாக

ஸ்தம்பித்து நின்றார்

 

இது ஒருவகையிலான ஒப்புதல் வாக்குமூலமா?

 

மத்தியக் குழவின் பொதுச் செயலாளர்

மூக்கின் மீது கட்டை விரலால் குத்தினார்

 

இதனை மற்றவிதத்தில் மனித அழகுக்கு

ஆப்பு வைப்பது என்பதா?

 

பார்ப்பதற்கு அழகான அக்குழந்தை

மிகச் சமீபத்தில்தான்

எமது அணியிலிருந்து அவன் விலக்கப்பட்டான்

(அவன் இப்போதும் பார்க்க அழகாகத்தான் இருக்கிறான்)

அவன் கண்ணில் ஒரு துப்பாக்கி ரவை

 

நகரத்தில் நுழைவதற்காகக் கழுகுகள் உலகெங்கும்

சம்மதம் கேட்டுக் கொண்டிருக்கின்றன

 

ஹோ பட்டுப்பூச்சிகளே ஒருவனைத் தட்டவேண்டுமெனில்

அவனது வாயடைத்துவிடுங்கள்!

 

ஹோ புரட்சிகர அலுவலகங்களே!

 

எனக்கென நான் ஒரு துப்பாக்கி வாங்கப் போகிறேன்.

 

 

அவர்கள் சொன்ன விஷயங்கள்

 

ஏகாதிபத்தியத்தினதும் முதலாளித்துவவாதிகளினதும்

மண்டையை உடைப்பதற்கான கல்

மார்க்சியம் லெனினியம்

 

இல்லையில்லை

மார்க்சிய லெனினியம்

அந்தக் கல்லை எறியும் கவன்

 

இல்லை இல்லவே இல்லை

கல்லை எறியும் ரப்பரைச் செலுத்தும்

கைகளை இயக்கும்

கருத்தே மார்க்சிய லெனினியம்

 

ஏகாதிபத்தியத்தின் கைகளை வெட்டும்

கத்தியே மார்க்சிய லெனினியம்

 

என்னது?

 

மார்க்சிய லெனினியம் என்பது

ஏகாதிபத்தியத்தின் கைகளைப் பிணிக்கும் காலம் பார்த்திருக்கையில்

அதன் கைகளைக் கவனம் கொள்ளும் கோட்பாடு

 

மாரக்சிய லெனினியம் படித்து

வாழக்கையினூடே நான் செல்லும்போது

நான் வளர்ந்த பின்னால்

என்ன செய்வது என்பதை நான் மறந்துவிட்டேன்

 

எனது கால் சட்டைப்பை நிறையக் கல் இருக்கிறது

எனது பின் பாக்கெட்டில் கவன் இருக்கிறது

கத்தி எனது குடலில் சிக்கிக் கொண்டதென்றால்

நிச்சயம் இது நல்ல பலன்தரும்

 

அப்புறம் பெண்கள் ஒப்பனை நிலையத்தில்

ஐந்து நிமிடம் கூட அது எவருக்கும் பயன்படாது

 

 

நான் விரும்புகிறவை

 

அதனது அனைத்து லயங்களோடும் நான்

வாழ்க்கை குறித்துப் பேசவிரும்புகிறேன்

சொற்களின் நதியில் நான் சேகரிக்க விரும்பும் கரைகளை

 

செய்தித்தாள்களில் சொல்ல மறந்த

பெயர்களையும் கனவுகளையும் பற்றி

மழையின் நுனியில் ஆச்சர்யப்படுத்தும் தனிமை பற்றி

காதலர்களின் இலைகளற்ற உருவகங்களை மீட்டு

உன்னிடம் தருவேன்

 

குழந்தை தனது விளையாட்டைத் துவங்கும் முன்பாக

அதனைக் கிடத்துவேன்

அழகானது அவனது தினசரிக் குறும்புகளை அகலித்து

 

மக்களின் மொழியை நான் உச்சரிக்க விரும்புகிறேன்

அதனது துக்கங்களின் ஓசையை

எங்கே அந்த இதயங்கள் நொண்டுகின்றன என்பதை

உங்களுக்குக் காண்பிப்பேன்

 

எமது சொந்த நாடுகளின் முதுகில் துப்பாக்கி ரவைகள்

எவருக்குச் செலுத்தப்பட வேண்டும் என்று நான் சுட்டிக் காட்டுவேன்

 

உலகத்தின் அனைத்துப் பாதைகளும் திறவுபடும்

மகத்தான குடியேற்றத்தின் இடப்பெயர்வை உன் மீது திணிப்பேன்

சாக்கடைகளின் மீது அழுக்குப் பட்டவரின் அன்பைச் சொல்வேன்

பிறிதொருவரின் கத்தியால் தன்னை மாய்த்துக் கொண்ட

எனது நண்பனின் இரயில்கள் குறித்து உனக்குச் சொல்வேன்

 

மழையின் மன்னிப்பற்ற குருட்டுத்தனத்தினால் உடைந்த

அனைத்து மனத்தின் மீதும் மோதி சரித்திரம் சொல்வேன்

நீடு வாழும் எமது மூன்று மகன்களும்

காணாமல் போன நூற்றாண்டு பற்றி

 

மாபெரும் நான்கு கால் மிருகத்தின் காலின் கீழ் மிதிபட்ட

பஞ்சுபற்றி

பறவையின் நாவு பற்றிச் சொல்வேன்

 

சோவியத் யூனியன் மற்றும் கியூபப் புரட்சிகள் பற்றி

நான் பேசவிரும்புகிறேன்

 

அவளது கண்களுக்காவே நான் காதலித்த பெண்ணைப் பற்றி

குறுகலாகிய சுழற்காற்று பற்றி

விரல்களால் நிரம்பிய உனது வாழ்வு பற்றி

 

நான் உன் முன்னால் இங்கே வந்தது எப்படிச் சாத்தியமாயிற்று

எனச் சொல்லி உன்னைச் சந்திக்கும் மனிதர் பற்றி

 

இயற்கையின் அனைத்தும் பற்றி

இதயங்களுடையதும் அதனது வாக்குமூலங்களும் பற்றி

 

சின்னஞ்சிறு பிராணிகள் அழிக்கப்படும் முன்னால்

அவை பதித்த விரல் தடங்கள் பற்றி

அதன் மௌனம் பற்றி

 

ஆமாம் இவை எல்லாவற்றைப் பற்றியும் நான்

உன்னிடம் சொல்ல விரும்புகிறேன்

 

நான் அறிந்த எல்லாக் கதைகளையும் அல்லது

என்னிடம் சொல்லப்பட்ட எல்லாக் கதைகளையும்

அல்லது அந்த மகத்தான வலி நிறைந்த அறையில்

நான் வாழ்வதில் கற்றது பற்றி

 

நீ அறிவது நல்லது என நீ நினைக்கிற

எனக்கு முன்பான கவிஞர்கள் சொன்ன எல்லாமும் பற்றி

 

இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்ல இயலாது

 

கவிதையின் மூடுண்ட கதவே

 

மணலில் தலை துண்டிக்கப்பட்டுக் கிடக்கும்

எனது பிணத்திற்கும் மேலாக

 

 

இப்போது பார்

 

அந்தக் கல்லூரிச் சம்பாஷனைகளின் போது

நீ விரும்பிய அனைத்தினின்றும் பார்க்க

நீ இந்த நாடோடியின் காதலில் வந்து முடிந்திருக்கிறாய் பார்

 

மூன்று அல்லது நான்கு முதிய கனவான்களின்

சொத்துக்களுக்கு வாரிசான

ஐரோப்பாவுக்குத் தனி விமானத்தில் போகிற பெண்ணே

 

மான்தோல் அங்கியில் வாசனைத் திரவியங்கள் பூசிய பெண்ணே

அகன்ற வெள்ளி வளையல்கள் அணிந்த பெண்ணே

அனைத்துக்கும் மேலாக இந்தப் பெருமை மிக்க நகரத்தில்

அனைவரைக் காட்டிலும் அழகான கண்களைப் பெற்றவளே

 

பார் நீ

இந்தத் தனிமையில் இந்த ஏழையானவனின்; கைகளில்

நீ உறங்கிக் கொண்டிருக்கிறாய்

 

ஜொலிக்கும் சிலுவையை நான் உன் மார்பில் பார்க்கிறேன்

அறைச் சுவற்றில்

எனது மார்க்ஸ் படம் தொங்கிக் கொண்டிருக்கிறது

 

நான் நினைக்கிறேன்

எல்லாவற்றைக் காட்டிலும் வாழ்க்கை இனியது

 

 

பதட்டமான உரையாடல்

 

உனது மோசமான எதிரிகள் உன்னைக் காட்டிலும்

நிரம்பக் கெட்டிக்காரர்களாக இருந்தால் என்ன நடக்கும்?

 

எதுவும் நடக்காது, உனது மிக நல்ல நண்பர்கள்

உன்னைக் காட்டிலும்

மோசமானவர்கள் என்றால்தான் பிரச்சினை

 

எதிரிகளை மடடுமே கொண்டிருப்பதுதான் மோசமான விஷயம்

 

இல்லை

நண்பர்களை மட்டுமே கொண்டிருப்பதுதான் மோசமானது

 

சரி. யார் எதிரிகள்?

நீயா அல்லது உனது எதிரிகளா?

 

நல்லது நண்பனே

நான் உன்னை மறுபடி சந்திக்கிறேன்.

 

 

நிச்சயமாக நம்பிக்கைத் துயரம் எனச் சொல்ல முடியாது

 

கியூபாவிலிருந்து வந்த ஆரஞ்சுப் பழங்கள் இங்கு நா பிரிக்கோபில் கிடைக்கிறது! ‘சர்வதேசிய அரசியல் விமர்சனச் சஞ்சிகையின் ( நீங்கள் விரும்பினால், ‘சமாதானம் மற்றும் சோசலிசத்தின் பிரச்சினைகள்எனக் குறிப்படலாம்) ஆசிரியர் குழுக் கூட்டத்தின் வகுப்புகளில் பங்குபற்ற வந்த ருமேனியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பெண் தோழரின் இனிய முகத்தை இந்த ஆரஞ்சுப் பழங்கள் ஏன் ஞாபகமூட்டுகின்றன என எனக்குத் தெரியவில்லை.

 

தக்கூரா (தாகூர் சாலை என்பதற்கான செக் மொழபெயர்ப்பு) சாலையிலுள்ள கட்டிடத்தி;ன் மூட்டமான தாழ்வாரங்களில், ஒரு சின்னஞ்சிறு கியூப ஆரங்சுப் பழத்தைப் போன்ற அவள் முகம், அழகிய இளம்பெண்ணின் கண்களுடன், இளவரசியின் நாசியுடன், நான் தினமும் பார்க்க விரும்பிய ஒன்றாக ஆகியது. (இப்படி அனைத்தும் இருந்தும், ஒரு முறை பிரசுரமொன்றைக் கொடுப்பதற்காக அவள் எனது அலுவலத்தினுள் என்னைச் சந்திக்கவும் வந்தாள்) நாங்கள் ஒரு வார்த்தை கூட பேசிக் கொண்டதில்லை.

 

ஆனால், இப்போது எல்லாம் முடிந்து விட்டது. அவளது முன்னேறிய கர்ப்பம், மென்மையான, சீக்கிரத்தில் கண்டுபிடித்துவிட முடியாத அவளது கர்ப்பம், தெளிவாக அவள் கொஞ்ச நாட்களுக்கு முன்னால் மணமாகிவிட்டவள் எனச் சொல்கிறது.

 

நேற்றைய தினம், பக்கத்திலுள்ள மலைப் பக்கத்தில் செர்ரி மரங்களைப் பார்ப்பதற்காக ஜன்னலின் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தேன், அப்போது சூரியன் மற்றும் செர்ரி மரங்களின் உயர்ந்த கிளைகளின் உதவியுடன், காட்டு மான்களின் கொம்புகள் எனது நிழலின் தலையிலிருந்து வளர்வதைப் பார்த்தேன்

 

ஒரு புரட்சிப் போராளிக்கு இதுவெல்லாம் நிரம்பவும் கடினமானது

 

 

நிவாரணக் கலை

 

குடியரசின் மானமிகு ஜனாதிபதிக்கென

எழுத்தாளர்கள்

கொடியதொரு புத்தகத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள்

 

குடியரசின் மானமிக ஜனாதிபதி

தனது

கத்திகளின் சேகரிப்பைச் சரிபார்த்துக் கொண்டிருந்தார்

 

பிற்பாடு பிதாகாரஸின் மேற்கோளைக் காட்டினார்

 

தனது வேலையை முடிக்க

குடியரசின் மானமிகு ஜனாதிபதிக்கு

ஒரு கடப்பாரை வேண்டியிருந்தது

 

எழுத்தாளர்களுக்குப் பேண் பிடித்திருந்தது

 

எழுத்தாளர்களின் மேல் ஊர்ந்து கொண்டிருக்கும்

பேண்களைக் கொல்வதற்கென

மானமிகு குடியரசின் ஜனாதிபதி

கத்தியால் குத்தினார்

 

எழுத்தாளர்கள் வெளிநாடுகளுக்கு ஓடினார்கள்

 

எல்லை கடக்கையில்

அவர்கள் பயன்படுத்திய நிலவின் ஒளியில்

அவர்களின்

முழுக்கச் சிரைத்த மொட்டைத்தலைகள் மினுங்கின.

 

 

பயங்கரம்

 

எனது கண்ணிர், எனது கண்ணீர் கூட இறுகிப் போனது

 

நான் எல்லாவறறிலும் நம்பிக்கை கொண்டவன்

எல்லோரின் மீது நம்பிக்கை கொண்டவன்

 

கொஞ்சம் கனிவுடன் இருங்கள் என்றுதான் நான் கேட்டேன்

அதற்கு பெரிய விலையெல்லாம் தேவையில்லை

கொஞ்சம் இதயமிருந்தால் போதும்

 

இப்போது காலம் கடந்துவிட்டது

கனிவு மட்டும் இனிப் போதுமானதில்லை

 

வெடிமுருந்தின் நெடியை நான் நுகர்ந்து கொண்டிருக்கிறேன்

 

 

நள்ளிரவு கழிந்த நேரத்தில்

 

நான் இறந்துவிட்டேன் என நீ அறியும்போது

என் பெயரை உசசரிக்காதே

ஏனெனில்

மரணமும் அமைதியும் அப்போது காத்திருக்க வேண்டியதாகிவிடும்

 

உனது குரல், உனது ஐம்புலன்களினதும் மணியோசை

மூடுபனி கவிந்திருக்கும் எனது ஒளிக்கற்றையாக உருப்பெறும்

 

நான் இறந்துவிட்டேன் என நீ அறியும்போது

பிற சொற்களைச் சொல்

பூ என, தேனீ என, கண்ணீர்த் துளி என, ரொட்டி என

புயற்காற்று என

 

உனது உதடுகள்

எனது பெயரின்

பனிரெண்டு எழுத்துக்களைத் தேட அனுமதியாதே

 

எனக்குத் தூக்கமாக இருக்கிறது

 

நான் காதலிக்கப்பட்டவனயிருக்கிறேன்.

நான் நிசப்தத்தைச் சம்பாதித்திருக்கிறேன்.

 

எனது பெயரை உச்சரிக்காதே

நான் இறந்துவிட்டேன் என நீ அறியும்போது

உனது குரல் தேடி இருளின் ஆழத்திலிருந்து நான் வருவேன்

 

எனது பெயரை உசசரிக்காதே

எனது பெயரைச் சொல்லாதே

 

நான் இறந்துவிட்டேன் என்பதை நீ அறியும் போது

என் பெயரை உச்சரிக்காதே

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Exit mobile version