Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நளினியை விடுதலை செய்ய தமிழக அரசு மறுப்பு – பழ. நெடுமாறன் கடும் கண்டனம்..

மக்கள் 

உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :இராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டும், பதினெட்டு ஆண்டுக் காலத்திற்கும் மேலாகச் சிறையில் இருந்து வரும் நளினியையும் மற்றவர்களையும் விடுவிக்க முதல்வர் கருணாநிதி மறுத்து வருவதற்குப் பொருந்தாத காரணங்களைக் கூறியுள்ளார்.நளினி விடுதலையானால் அவரின் தாயாருடன்தான் இருப்பார். ஆனால் அவர் வசிக்கும் வீட்டைச் சுற்றிப் பல முக்கியமானவர்கள் வாழ்கிறார்கள். அமெரிக்கத் தூதரகமும் உள்ளது. எனவே நளினி விடுதலை செய்யப்பட்டால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படும் என்பது முதலாவது காரணமாகச் சொல்லப்படுகிறது.நளினி விடுதலை குறித்து மத்திய அரசைக் கலந்து ஆலோசிக்காமல், செயல்படுவதில்லை என நாங்களே எங்களுக்குச் சுயகட்டுப்பாடு விதித்துக்கொண்டோம் என்றும் விசித்திரமான காரணமும் கூறப்பட்டுள்ளது.ஏற்கனவே, இதே வழக்கில் நளினி உட்பட நால்வர்க்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போது, அவர்களின் கருணை மனுக்களை ஆளுஞர் தள்ளுபடி செய்ததை எதிர்த்து நால்வர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம். அந்த வழக்கில் மாநில அமைச்சரவையின் பரிந்துரையின்படித்தான் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்ற தீர்ப்புக் கூறப்பட்டது. எனவே நால்வரின் கருணை மனுக்கள் மீது பரிந்துரை செய்யும் அதிகாரத்தை, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அவர்களுக்குப் பெற்றுத் தந்தோம். ஆனாலும் நளினி தவிர மற்றவர்களுக்குக் கருணை காட்ட அவர் மறுத்தார்.அதைப்போல இப்போதும் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு மாநில அமைச்சரவைக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவு அதிகாரம் அளித்துள்ளது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 1400க்கும் மேற்பட்ட கைதிகளைக் கருணாநிதி விடுதலை செய்தார். இவர்களிற் பலர் பயங்கரமான கொலைக்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள். ஆனால் இவர்கள் விடுதலை செய்யப்பட்ட பின் எந்த இடத்திலும் சட்டம் ஒழுங்கு கெடவில்லை. இவர்களிற் பலர் ஆயுதத் தடைச் சட்டத்தின் கீழ்த் தண்டிக்கப்பட்டவர்கள். மத்திய அரசிடம் கேட்டு இவர்களைக் கருணாநிதி விடுதலை செய்யவில்லை.இராஜீவ் கொலை வழக்குச் சம்பந்தப்பட்டவர்கள் பிரச்சினை எழும்போது மட்டும் மத்திய அரசைக் கேட்க வேண்டும் என்று நழுவுகிறார்.சோனியா காந்தியின் அதிருப்திக்கு ஆளாகக் கூடாது என்பதற்காகத்தான் நளினியையும் மற்றவர்களையும் விடுதலை செய்ய மறுக்கிறார். கருணாநிதியின் இந்த மனிதநேயமற்ற பாரபட்சமான போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.  

பழ.நெடுமாறன்
(
அமைப்பாளர்)

Exit mobile version