அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் தொடர்பாக கட்சியின் கண்டி மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுக்காக செயலமர்வு முன்னணியின் மாவட்ட செயலாளர் வேலு குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இன்றைய சுதந்திர தினத்தில் நாம் நமது நாட்டின் ஐக்கியம் தொடர்பாகவும், இனங்கள் மத்தியில் நிலவவேண்டிய சமத்துவம் தொடர்பாகவும், நமது ஜனநாயக நெறிமுறைகள் தொடர்பாகவும் திடசங்கற்பம் பூணுகிறோம்.
ஆண்டாண்டு காலமாக நாம் பாடசாலையில் படித்து நமது தாய்மொழியில் பாடி வந்த ஸ்ரீ லங்கா தாயே என்ற நமது தமிழ் மொழியிலான தேசிய கீதத்தைகூட சுதந்திரமாக பாட யோசிக்கும் நிலைமை இன்று இந்நாட்டில் தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதை தடை செய்ய விரும்புவோர் இன்று இந்த அரசாங்கத்துக்குள் இருக்கின்றார்கள்.
சொந்த உழைப்பு மற்றும் முயற்சியினால்கூட தமது வர்த்தக, தொழில் நிறுவனங்களை சுதந்திரமாக கொண்டு நடத்த முடியாத நிலைமை இன்று இந்நாட்டில் தமிழ், முஸ்லிம் தொழில் அதிபர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சிறுபான்மையினரின் வர்த்தக முயற்சிகளை கைப்பற்றி அழிக்க நினைக்கும் இனவாதிகளை தட்டிகொடுத்து வளர்க்க நினைப்போர் இன்று இந்த அரசாங்கத்துக்குள் இருக்கின்றார்கள்.
இனப்பிரச்சினையை தீர்க்கிறோம் என்று சொல்லி இந்த அரசாங்கமே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவியது. இந்த ஆணைக்குழு நாடு முழுக்க சென்று சாட்சியங்களை பதிவு செய்து பல்வேறு சிபாரிசுகளை வெளியிட்டது. இந்த சாட்சியங்களை அமுல் செய்கிறோம் என்று, இந்த அரசாங்கம் ஐநா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு உறுதியளித்தது.
ஆனால் இந்த நல்லிணக்க சிபாரிசுகளில், ஏ9 வீதியை திறக்கவேண்டும் என்ற ஒரேயொரு சிபாரிசு மாத்திரமே இன்றுவரையில் முழுமையாக அமுலாகியுள்ளது. ஏனைய எந்த ஒரு நல்லிணக்க சிபாரிசும் அமுல் செய்யப்படக்கூடாது என்று கலகம் செய்வோர் இன்று இந்த அரசாங்கத்துக்குள் இருக்கின்றார்கள். இந்த அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கும் இவர்கள்தான் இன நல்லிணக்கத்துக்கான எல்லா கதவுகளையும் அடைத்து வைத்துள்ளார்கள். இது எதிர்கட்சிகளின் பிரச்சினை அல்ல. இது ஆளும் அரசாங்க கட்சியின் ஒட்டுமொத்த பிரச்சினை என்பது எந்த ஒரு முட்டாளுக்கும்கூட விளங்கும்.
எனவே இந்த நல்லிணக்கத்துக்கு எதிரான இனவாதிகளை வைத்துகொண்டு எப்படி இந்த நாட்டிலே இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்? இதுதான் இன்றைய சுதந்திர தினத்திலே நாம் எழுப்பும் கேள்வியாகும்.