Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நமது மண்ணையும் மக்களையும் அழிவிலிருந்து பாதுக்காக உதவுவோம்: ஆர்பாட்டத்திற்கு அழைப்பு

nirjandmahindhaஇலங்கைப் பேரினவாதம் அறுபது ஆண்டுகள் சிறுகச் சிறுக நிழக்த்திய அழிப்பை அதே வக்கிரத்தோடு உலக அதிகாரவர்க்கத்தின் ஆசியோடு வன்னி நிலத்தின் மூலைக்குள் நிகழ்த்தி முடித்துவிட்டு உலகின் ஒவ்வோர் மூலையிலும் குருதியால் அறைந்து நியாயம் சொல்லிக்கொண்டிருக்கிறது.

நாளுக்கு நாள் இனப்படுகொலையும் இனச்சுத்திகரிப்பும் புதிய வடிவங்களில் தமிழ் பிரதேசங்கள் எங்கும் முளைத்தெழுகின்றன. தமிழ்ப் பேசும் மக்கள் மீதான உளவியல் யுத்தமும், பண்பாட்டுச் சிதைப்பும் பேரினவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.

இதன் புதிய கட்டமாக நமது மண்ணையும் வளங்களையும் சிதைத்துச் சீரழிக்கும் திட்டமிட்ட நடவடிக்கையை இலங்கை அரசும் பன்நாட்டு வியாபார நிறுவனங்களும் இணைந்து முடுக்கிவிட்டுள்ளன.

சுன்னாகத்தில் அமைந்துள்ள அனல் மின் நிலையத்தை தனது இலாப நோக்கங்களுக்காகக் ராஜபக்ச அரசின் அனுசரணையுடன் கையகப்படுத்தியுள்ள நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் வளம்மிக்க யாழ்ப்பாண மண்ணை அழித்து வருகின்றது. மின் உற்பத்தியின் போது வெளியாகும் பெரும் தொகையன கழிவு எண்ணையை மக்கள் குடியிருப்புக்களில் வெளியேற்றுவதனூடாக குடா நாட்டின் நீர், எண்ணை கலந்த பாவனைக்கு உதவாதாக மாறியுள்ளது.

ஆரம்பத்தில் சுன்னாகம், மருதனாமடம்., கோப்பாய் உரும்பிராய் போன்ற பகுதிகளில் நன்னீர்க் கிணறுகள் எண்ணை படர்ந்தவையாகின. இறுதியாக தெல்லிப்பளையில் எண்ணை படர்ந்த கிணறுகளைக் காணக்கூடியதாக இருந்தது. இந்த நிலை இன்னும் சில வருடங்கள் தொடருமானால் யாழ் குடா நாடு முழுமையும் நீர் வளமற்ற வரண்ட பிரதேசமாக மாற்றப்படும்.

என்ன குறை எமக்கு? வானமும் வையகமும் என்றைக்கும் இளமைபொங்கும் காதலோடு வழம்கொழிக்கும் நாடு அது. மக்கள் அன்னியர்களை என்றுமே எதிர்பார்த்ததில்லை. மனிதச் சதைகளால் அந்த மண்ணை உரமாக்கிய கொடிய மனித மிருகங்கள் இன்று நீர் வளத்தை அழித்து திட்டமிட்ட நாசகாரச் செயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.

எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர் இலங்கையரான பிரித்தானிய அரசியல்வாதி. இலங்கையில் மொரட்டுவ பகுதியிலிருந்து பிரித்தானியாவிற்குக் குடிபெயர்ந்த நிர்ஜ் தேவா ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் நீண்டகால உறுப்பினர். இன்று ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர்.

கேட்பதற்கு யாருமற்ற அனைதைகளாக தமிழ்ப் பேசும் மக்கள் கைவிடப்பட்டுள்ளனர் என்ற எண்ணத்தில் இனப்படுகொலை அரசுடன் இணைந்து நிர்ஜ் தேவா என்பவர் பிரித்தானியாவிலிருந்து செயற்படுகிறார்.
யாழ்ப்பாணத்திலிருந்து இந்த அழிப்பிற்கு எதிராகக் குரல்கொடுப்பவர்களையும், வழக்காடும் சட்டத்தரணிகளையும் பயங்கரவாதிகள் என அந்த நிறுவனம்குற்றம் சுமத்தியுள்ளது. நிர்ஜ் தேவாவின் நிறுவனம் அப்ப்பாவி மக்களை பயங்கரவாதிகளாக்கும் அதே வேளை அவர் பிரித்தானியாவிலிருந்து ஜனநாயகம் பேசுகிறார்.
நிர்ஜ் தேவாவின் இக் குற்றச் செயலை வெளிப்படுத்தி அவரை பதவி நீக்கம் செய்யக் கோரியும், இலங்கையில் சட்டரீதியான வழிகளில் மின்னுற்பத்தியை நடத்தக் கோரியும், பேரினவாத அரசின் திட்டமிட்ட நாசகாரச் செயலை நிறுத்தக்கோரியும் ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் லண்டன் கிளையின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இன்று நாம் அவசரமாகச் செயற்படத் தவறினால் யாழ்ப்பாணம் மனிதர்கள் வாழமுடியாத பிரதேசமாக மாற்றப்பட்டுவிடும். நீருக்காக தென்னிலங்கையிலும் பல்தேசிய நிறுவனங்களிடமும் கையேந்தும் அவலம் தோன்றும். வளமான நமது தேசத்தின் மண் அழிக்கப்படும்.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர் நிர்ஜ் தேவாவின் குற்றச் செயலுக்கு எதிராக லண்டனில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. நமது மக்களின் வாழ்விற்காகவும் மண்ணின் இருப்பிற்காகவும் இந்த ஆர்ப்பாட்டம் வெற்றிபெறவேண்டும்..

தயவு செய்து அனைவரையும் கலந்துக்கொள்ளுமாறு நட்புடன் அழைப்புவிடுக்கிறோம்.

இடம்: The Uk Office Of The European Parliament, Smith Square 32, SW1P 3EU London
காலம்: 22ம் திகதி திங்கள் டிசம்பர் மாதம்
நேரம்: மாலை 3 மணிக்கு
அண்மித்த Tube: St. James’s Park

-Parai Voice Of Freedom

தண்ணீர் கேட்டவர்கள் பயங்கரவாதிகளாக்கப்பட்டனர் : புலம்பெயர் தமிழர்களுக்குச் சவால்

யாழ்ப்பாணத்தை நஞ்ச்சாக்கும் நிறுவனத்தின் இயக்குனர் பிரித்தானியாவில்:புலம்பெயர் அமைப்புக்கள் எங்கே?

Exit mobile version