Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நமது நாட்டின் அணு சக்தி உள்ளிட்ட எரிசக்தி சுதந்திரத்தை வாஷிங்டன் கட்டுப்படுத்தும்:இந்திய அணு சக்தி விஞ்ஞானிகள் .

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தபின், அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றிய ஹென்றி ஹைட் சட்டத்தின் மூலம் மற்ற நாடுகளுடனான நமது அணுத் தொழில்நுட்ப வணிகத்தை வாஷிங்டன் கட்டுப்படுத்தும் என்று அணு சக்தி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.இந்திய அணு சக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் பி.கே. ஐயங்கர், அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன், பாபா அணு சக்தி மையத்தின் முன்னாள் தலைவர் ஏ.என். ஆனந்த் ஆகியோர் மக்களவை உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பன்னாட்டு அணு சக்தி முகமையின் (IAEA) ஒப்புதலுக்காக தயாரிக்கப்பட்டுள்ள ஒப்பந்த வரைவில் ஏராளமான ஓட்டைகள் உள்ளதாகவும், நமது நாட்டின் அணு சக்தி உள்ளிட்ட எரிசக்தி சுதந்திரத்தை கட்டுப்படுத்தக்கூடிய அம்சங்கள் அதில் உள்ளதெனவும் கூறியுள்ளனர்.

 

பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் நாம் செய்துகொள்ளப்போகும் கண்காணிப்பு ஒப்பந்த வரைவில் குறிப்பிட்டுள்ளதுபோல, நமது அணு மின் சக்தி உலைகளுக்கு அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் எரிபொருள் வழங்கலை நிறுத்தினால், அந்த ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக நம்மால் வெளியேற முடியாது என்று கூறியுள்ள விஞ்ஞானிகள், அது தொடர்பாக கண்காணிப்பு ஒப்பந்த வரைவின் விதி 32-யை சுட்டிக்காட்டியுள்ளனர்.

“யுரேனியம் எரிபொருள் வழங்கல் தடைபடும்போது நமது அணு சக்தி உலைகளை கண்காணிப்பிலிருந்து தன்னிச்சையாக விலக்கிக்கொள்வதை விதி 32 தடுக்கிறது என்பது மட்டுமின்றி, அது மற்ற நாடுகளிடமிருந்து நாம் வாங்கி பயன்படுத்தும் அணு உலைகளுக்கு பொருந்தாத நிலை உள்ளது. ஏராளமாக முதலீடு செய்து நாம் அமைக்கப்போகும் அந்த அணு மின் உலைகளுக்கு எரிபொருள் நிறுத்தப்பட்டாலும், பன்னாட்டு முகமையின் கண்காணிப்பிலிருந்து அவைகளை விலக்கிக்கொள்ள முடியாது. அந்த உரிமை நமக்கு வழங்கப்படவில்ல” என்று அந்தக் கடிதத்தில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நிறுத்தி வைககப்பட்டாலும், நம்மிடம் உள்ள அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியம் எரிபொருளைப் பெறுவதற்கு அமெரிக்க நிர்வாகம் எந்த விதத்திலும் உதவக்கூடாது என்று ஹைட் சட்டம் கூறுவதையும் சுட்டிக்காட்டியுள்ள மூத்த விஞ்ஞானிகள், அப்படிப்பட்ட நிலையில் ஏற்படக்கூடிய பெரும் பொருளாதார இழப்பை தவிர்க்க என்ன மாற்று வழி உள்ளது என்பதை மக்களுக்குத் தெரிவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று மக்களவை உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கண்காணிப்பு ஒப்பந்த வரைவின் முகப்புரையில், மாற்று நடவடிக்கைகள் (Corrective Measure) எனும் உரிமை குறித்து கருத்து தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், பன்னாட்டு அணு சக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் உள்ள நமது அணு உலைகளுக்கு எரிபொருள் வழங்கல் நிறுத்தப்படும் நிலையில், அவைகளில் பயன்படுத்தப்பட்ட யுரேனியத்தையும், பயன்படுத்த பெறப்பட்டுள்ள யுரேனிய எரிபொருளையும் முற்றிலுமாக திரும்ப அளிக்கப்பட்ட பின்னரே விலக்கிக்கொள்ள முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், மாற்று நடவடிக்கை என்பதே பொருளற்றதாக உள்ளது என்று கூறியுள்ளனர்.

அணு சக்தி ஒத்துழைப்பிற்கு ஒப்புதல் அளித்து நிறைவேற்றப்பட்ட ஹைட் சட்டத்திலும், இருநாடுகளும் கையெழுத்திட்ட 123 ஒப்பந்தத்திலும் எரிபொருள் வழங்கல் தொடர்ந்து கிடைப்பது உறுதி செய்யப்படாத நிலையில், அதனை கண்காணிப்பு ஒப்பந்தத்தில் உறுதிசெய்வோம் என்ற மத்திய அரசின் வாக்குறுதி ஒப்பந்த வரைவில் இல்லாததை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பயன்படுத்தப்பட்ட யுரேனியம் எரிபொருளை மறு சுழற்சி செய்து பயன்படுத்துவது பேரத்திற்கு (non-negotiable) அப்பாற்பட்ட நமது உரிமை என்று மத்திய அரசு கூறியது. ஆனால், அதற்கான உறுதி மேம்போக்காகத்தான் 123 ஒப்பந்தத்தில் உள்ளது. பெரும் முதலீட்டில் மறு சுழற்சி (Reprocessing) செய்வதற்கான தனித்த மையத்தை ஏற்படுத்தி, அதனை கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்த பிறகுதான் அந்த உரிமை செயல்பாட்டிற்குவரும் என்று கூறப்பட்டுள்ளது. இது நிறைவேற பல ஆண்டுகள் ஆகும். அதன் பிறகே – பன்னாட்டு அணு சக்தி முகமையின் ஒப்புதல் பெற்று செயல்படத் துவங்கும் என்று உள்ளதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது அது நமது பாதுகாப்பிற்காக நாம் மேற்கொண்டுவரும் அணு ஆயுத திட்டத்தையும், நமது எரிசக்தி தேவையை நிவர்த்திசெய்யும் இலக்கை நோக்கி மேற்கொண்டுவரும் ஆராய்ச்சியை பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும்வரை பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதை நிறுத்தி வைக்கவேண்டும் என்று விஞ்ஞானிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Exit mobile version