Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நண்பர்காள், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?: துடைப்பான்

 

டேவிட் ஐயா

சுமார் 30 வருடகால இலங்கை தேசிய இனப்பிரச்சினையின் ஆயுதப்போராட்டம், அது சுட்டி நின்ற நியாயமான காரணங்கள், புலிகளின் அழிவோடு முடிவுக்குவந்துவிட்டதாகவும், எனவே இனிமேல் இலங்கை அரசோடு ஒட்டி உறவாடி அது தருகின்ற, அல்லது இன்னறய வாழ்வோடு இரண்டறக்கலந்து வாழ்தலே ‘சுபீட்சமானது’ எனக்கருதும் ஒரு சாரார்.

இல்லை, இல்லை தொடர்ந்து புலிகளின் பாணியில் செல்லுதல், ‘தமிழ் ஈழக்’ கனவு சுமந்து மக்களை இன்னும் மந்தைகளாக இட்டுச் செல்லுதல் என்ற இரண்டாம் நிலைச்சாரார்.

மேற்கண்ட இருநிலைச் சாரார்கள் மத்தியில் செயல்படுகின்ற, மூன்றாம் நிலைச்சாரார்கள் என குறிப்பிடப்படும் ஒரு பகுதியினரின் மனநிலையோட்டம் என்னவாக உள்ளது?.

மூன்றாம் நிலைக்ச்சாரார்கள், இரண்டு நிலைக்ச்சாரார்களின் அரசியல் சித்தாந்த நடைமுறைகளோடு முரண்கொண்டவர்கள். ஒடுக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களின் விடுதலை இன்னும் சாத்தியமாகவில்லை, எனவே வெவ்வேறு போராட்ட வடிவங்களினூடாக இவை முன்னெடுத்து வளர்க்கப்படவேண்டுமென கருதுபவர்கள்.

இவர்கள் மூன்று நிலைகொண்டவர்கள்.

1.தமிழ்ஈழம் சாத்தியமானது. புலிகளின் இராணுவ மயப்பட்ட அரசிலைத் தவிர்த்து ஜனநாயக வழிப்பட்ட அரசியல் அமைப்பொன்றின் ஊடாக ஆயுதப்போராட்டத்தை முன் எடுத்தல். இவர்கள் ஆயுதப்போராட்டமே இறுதிவடிவமென கருதுபவர்கள்.

2. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு காணல். ஒடுக்கப்பட்ட தமிழ் , சிங்கள ,முஸ்லீம், மலையக மக்களோடு கைகோர்த்து ஒன்றிணைதல். ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கை வைத்தல். இலங்கை அரசுக்கு எதிரான அரசியல் கிளாச்சியை ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தல்.

3. ஒனறுபட்ட இலங்கைக்குள் தீர்வு காணல். தமிழ் ,சிங்கள ,முஸ்லீம் ,மலையக மக்கள் மத்தியிலும் சர்வதேச ரீதியிலும் ஜனநாயகப்போராட்டங்களை, மக்கள் எழுச்சிகளை, தாக்கங்களை ஏற்படுத்துதல். ஆயுதப்போராட்டத்தை நிராகரித்தல்.இலங்கை தழுவிய, அரசுக்கு எதிரான வெகுஜன அமைப்புக்களை உருவாக்குதல்.

சமீப நாட்களாக மேற்கண்ட மூன்று நிலை சிந்தனை கொண்ட ,செயற்பட ஆர்வம் கொண்டிருக்கும் பல நண்பர்கள், தோழர்கள் இவை பற்றி என்னோடு உரையாடுகின்றனர். இவற்றின்பால் என் சார்பு, செயற்பாட்டு நிலையை கோருகின்றனர். நானோ???

என் அரசியல் சமூக செயற்பாட்டுவாழ்வு 13வயதில் தொடங்கியது. என் தகப்பனாரும் என் அம்மாவும் அன்றைய தமிழரசுக் கட்சியின் தீவிர அபிமானிகளாக இருந்தனர். காலமும், நேரமும் ,பொருளாதாரமும் தமிழரசு கட்சிக்கே தாரைவார்க்கப்ட்டது. சத்தியாக்கிரகப் போராட்டத்தில் என் தகப்பனும் அம்மாவும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதிலிருந்தே இதனை புரிந்துகொள்ளமுடியும். என் அரசியல் சித்தாந்த ஈடுபாடு என் குடும்பத்தோடு முரண்பாடு கொண்டதாகவே அமையப்பெற்றிருந்தது.

சோவியத் ரசிய வெளியீடுகளோடும், நாவல்ளோடும், அப்போது வெளிவந்துகொண்டிருந்த சோவியத் செய்தி பத்திரிகையோடும் என்காலம் கடந்தது. இவற்றின் தீவிர வாசகனாக நான் இருந்தேன். நானும், என் வயதொத்த நண்பர்களும் ‘இளந்தளிர் வாசகர் வட்டம்’ எனும் அமைப்பினைத் தொடங்கி பல்வேறு அரசியல் கருத்தரங்குகளையும், மாணவர் கல்வி சம்பந்தமான இலவச வகுப்புக்களையும், கிராமத்தில் சமூக செயல்பாடுகளையும் முன் எடுத்தோம். அன்றைய காலத்தில் என் கிராமத்தில் என் நண்பர்கள் குழாம் ஊரில் முன் மாதிரியாக காட்டப்பட்டோம். வார்த்தைக்கும் ,வாழ்க்கைக்கும் ,செயலுக்குமான நெருக்கமான உறவை நாம் பேணுவதில் கண்டிப்பாய் இருந்தோம். வெற்றியும் பெற்றோம்.

எமது ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான நேசிப்பும் ,விடுதலை ஆர்வமும், மாக்ஸியமே அனைத்துவிடுதலைக்குமான தீர்வு என்ற திடமான நம்பிக்கையும், எங்கள் நண்பர்கள் குழாத்தை ஜனதா விமுத்தி பேரமுன என்ற JVPயிடம் கொண்டுசென்றது. இலங்கையின் வர்க்கப்போராட்டமே தமிழ் பேசும் மக்களுக்கான ஒரே தீர்வு என்று JVP சொன்னது. அவர்கள் வார்த்தைகளை நம்பினோம். எமது நண்பர் குழாம் JVP யோடு சங்கமாயிற்று. சுமார் இரண்டு வருடங்கள் இவர்களோடு தீவிரமாக செயல்பட்டோம். பாசறைகளில் கலந்துகொண்டோம். காலம் முரண்பாட்டை தோற்றுவித்தது. அவர்களின் கோட்பாட்டிற்கும் ,செயற்பாட்டிற்கும் இடையில் பாரிய இடைவெளியை கண்டோம். உட்கட்சி போராட்டங்களை நடாத்தினோம். இறுதியில் தோல்வி நிலையோடு வெளியே வந்தோம். எனினும் அவர்களோடு உறவு கொண்டிருந்த அக் காலங்கள், ஒரு சில நல்ல நட்புக்களை, மாக்ஸிய வழிப்பட்ட கல்வியை தேடல்களை வழங்கியிருந்தன.

மீண்டும் எமது “இளம்தளீர் வாசகர்வட்டத்தை” செயல்படுத்தத் தொடங்கினோம். 1980ம் ஆண்டு காந்திய அமைப்பின் தொடர்பு எங்களுக்கு கிடைத்தது. காந்திய வழிப்பட்ட சிந்தனைகள் மீது அப்போது எங்களுக்கு அவ்வளவு மரியாதை கிடையாது. எனினும் டேவிட் ஐயாவின் வழிகாட்டலில் செயல்பட்ட காந்திய அமைப்பினரின் செயல்பாடுகளும், வேலைத் திட்டங்களும், மலையக மக்கள் மீது குறிப்பாக அவர்களின் கல்வி, சமூக ,பொருளாதார மேம்பாடுகளில் கொண்டிருந்த அக்கறை எம்மை அதன்பால் ஈர்த்தது. அதனோடு இணைந்து செயல்படத் தொடங்கினோம். இங்கேதான் தமிழ் ஈழ மக்கள் விடுதலைக்கழகம் என்ற புளொட் அமைப்பின் தொடர்பு கிடைக்கப்பபெற்றது. அவர்களின் அரசியல் கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாறல்கள், சந்திப்புக்கள் என தொடர்ந்தன. தமிழ் ஈழம், பிரிவினை என்ற அரசியல் வார்த்தைகளோடு உடன்பாடு அற்று இருந்த எம் நண்பர் குழாத்தை “தேசிய விடுதலைப் போராட்டத்தோடு வர்க்கப்போராட்டம்” என்ற புளொட்டின் போராட்ட சித்தாந்த வடிவம் எம்மை கவர்ந்து இழுத்தது.  . எம்மைத் தொடர்ந்து எமது ஏனைய நண்பர்களும் எம்வழி தொடரலானார்கள்.

இக்காலங்களில் நாங்கள் “இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்” செயல்பாடுகளில், விளையாட்டு முகாம்களில் முக்கிய செயல்பாட்டாளர்களாக இருந்தோம். நிறைய தொடர்புகளையும், நட்புக்களையும் கிழக்கிலங்கை பூராகவும் பெற்றிருந்தோம். பெருவாரியான இந்த நண்பர்கள் எம் மீது நம்பிக்கைகொண்டு புளொட்டினுள் எம்மைத் தொடர்ந்தார்கள். நாங்கள் எல்லோரும் நம்பிக்கையோடு இருந்தோம். ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் விடுதலை கிடைக்குமென நம்பினோம். எமது குடும்பம் ,எதிர்கால தனிப்பட்ட நலன்சார்ந்த வாழ்வு ,கல்வி ,அனைத்தையும் விடுதலையின் பால் கொண்ட நம்பிக்கையினால் தூக்கியெறிந்தோம். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையே எமது வாழ்வு நெறி என பயணித்தோம்.

முடிவில், ஏமாற்றத்தின் விளிம்புநிலையில் கொண்டு விடப்பட்டோம்.

மீண்டும் புகலிடத்தில் நண்பர்களோடு அதேவகைப்பட்ட உரையாடல்கள்…. ! உரையாடல்கள்!! உரையாடல்கள்!!!

என்வாசக நண்பர்காள் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்

Exit mobile version