முதல் முக்கியமான காரணம், சல்மான்கானின் வாகனத் தொடரணி ஏற்படுத்திய விபத்து. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபட்ட நடிகர் சல்மான்கானைக் காண, வெலிகடை மாமரச் சந்தியில் வீதியோரமாக மக்கள் நின்று கொண்டிருக்கும்போது வேகமாக வந்த அவரது வாகனம் இரண்டு சிறுவர்களை மோதித் தள்ளியது. சிறுவர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், அங்கிருந்தவர்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்ய முற்பட்டனர். சல்மான்கான் இன்னும் இலங்கையிலிருந்தால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படுமெனக் கருதி சூட்சுமமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரை இந்தியாவுக்கு அனுப்பி விட்டார்.
இரண்டாவது காரணம் நடிகர் சல்மான்கான், இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான வியாபார ராஜதந்திரி எனவும், 650 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டமான “Krrish Square” திட்டத்தின் பின்னணியில் சல்மான்கான் இருப்பதாகவும் எதிர்க் கட்சியானது பகிரங்கமாகக் குற்றம் சாட்டியது சிக்கலை உண்டுபண்ணியது. இவ்விடயம் சல்மான்கானுக்கு எட்டியதும் அதிர்ந்து போனார்.
மூன்றாவதாக கௌரவமாக அழைத்து, அவமானப்படுத்தியது போல பொரள்ளையில் சல்மான்கான் கலந்துகொண்ட கூட்டத்தில் அவரை மேடையில் வைத்துக் கொண்டு, அவரைப் பாராட்டிப் பேசுவதாக எண்ணிக் கொண்டு, மஹிந்தவின் அமைச்சரான திலங்க சுமதிபால, சல்மான்கானை ஷாரூக்கானென விளித்தார். ஷாருக்கான்ட ஜயவேவா (ஷாருக்கானுக்கு வெற்றி கிட்டட்டும்) என வாழ்த்துச் சொன்னார். இது மேடையிலிருந்த சல்மான்கானுக்கு பெரிதும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
சல்மான்கானுக்கு அவர் இந்தியாவில் ஏற்கெனவே ஏற்படுத்திய விபத்துக்களின் வழக்குகளே இன்னும் அவப் பெயரைத் தேடித் தந்துகொண்டிருக்கையில், இலங்கையில் ஏற்படுத்திய விபத்தின் சிக்கலிலும் மாட்டிக் கொள்ள அவரும் விரும்பவில்லை. எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பரிசுகளோடு, இலங்கைக்கு வந்த அன்று இரவே இந்தியா கிளம்பிவிட்டார் நடிகர் சல்மான்கான். அவர் நாட்டை விட்டும் உடனடியாகச் செல்ல இவ்வளவு காரணங்கள் இருக்கையில், தமது குற்றச் சாட்டுக்களால்தான் அவர் இந்தியாவுக்குத் திரும்பி வந்தார் என தமிழக அரசியல்வாதிகள் முழங்குவது வேடிக்கைக்குரியதாக இருக்கிறது.
– எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com