பல பத்தாண்டுகள் நடந்த போரினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை சீரமைக்க சிறிலங்க அரசிற்கு அமெரிக்க அரசு உதவ வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சி உறுப்பினரான கிரிஸ் வான் ஹோலன், குடியரசுக் கட்சி உறுப்பினரான இராபர்ட் ஆடர்ஹோல்ட் ஆகிய இருவரும் கடந்த 15ஆம் தேதி ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில் சிறிலங்க அரசிற்கு அமெரிக்க அரசு உதவிட வேண்டும் என்பது மட்டுமின்றி, அந்நாட்டுடன் அமெரிக்கா நட்புறவு கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
“தங்களுடைய வரலாற்றில் முக்கியமானதொரு காலகட்டத்திலுள்ள இலங்கை மக்களுக்கு உதவுவது மட்டுமின்றி, சிறிலங்க அரசுடன் இராணுவ ரீதியிலான கூட்டாண்மையையும் அமெரிக்க அரசு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே தொழில், முதலீட்டு உறவு பலப்பட வேண்டும். அதற்கு சிறிலங்காவிற்கான நாடாளுன்றக் குழு (காகஸ்)உதவ வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.