இராணுவச் சர்வாதிகார அரசை ராஜபக்சவின் தலைமையில் உருவாக்கத் துணைபோகும் மேற்கு ஏகபோக அரசுகளும் இந்திய அரசும் சமூகத்தின் மீது பற்றுள்ள எஞ்சியவர்களையும் அழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியே இப்படுகொலை.
நகுலேஸ்வரன் விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து நிலப்பறிப்பிற்கு எதிரான போராட்டங்களில் பங்காற்றியிருக்கிறார். சமூகப்பற்றுடன் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். மக்கள் மீது பற்றுக்கொண்ட எவரையும் இலங்கையில் ஆட்சிசெலுத்தும் இனப்படுகொலை அரை இராணுவ அரசு வாழ அனுமதிக்காது என்பதே நகுலேஸ்வரனின் படுகொலை உலகிற்குச் சொல்லும் செய்தி.
இது இவ்வாறிருக்க மரணித்த போராளிகளை முன்வைத்து பிழைப்பு நடத்தும் சந்தர்ப்பவாதிகளின் நடவடிக்கைகள் தொடர்கின்றன. புரட்சிகரமாகவும் மக்கள் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட வேண்டிய போராளிகளின் நினைவு நாளை மாவீரர் நாள் என்ற தலையங்கத்தில் சமயச்சடங்கு போல புலம்பெயர் அரசியல் தலைமைகள் நடத்தி அதனைப் பிழைப்பாக்கிக் கொள்கின்றன. இவர்கள் தாம் சுருட்டிக்கொள்ளும் பணத்தின் ஒரு பகுதியையாவது நகுலேஸ்வரன் போன்ற போராளிகளின் மக்கள் சார்ந்த செயற்பாடுகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தினால் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் மீண்டும் முளைவிட வாய்ப்புக்களுண்டு.