Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தோழர் டக்களஸ் தேவாவிற்கு ஒரு பகிரங்க வேண்டுகோள்! : வட்டக்கச்சியான்

வட்டக்கச்சி – மானிப்பாய் நோக்கிய பயணத்தில் சோர்வடைந்திருந்தோம். சாவக் கச்சேரியில் அருள் தோழரையும் அழைத்துக்கொண்டு மானிப்பாயை அண்மித்ததும் பச்சைப் பசேலென்ற நீண்ட வயல் வெளியின் வரப்பில் கண்களை இறுக மூடிக்கொண்டு மாலை வெய்யிலை அனுபவித்தவாறே உறங்கிவிடலாம் போலிருந்தது. தேவா தோழரைச் சந்திக்கப் போகிறோம் என்ற அவசரமும் ஆதங்கமும் ஆனைக்கோட்டை மூலைக்கடையில் தேனீர் கூட அருந்த மனமின்றி சைக்கிளை இறுக மிதித்துக் கொண்டிருந்தோம். ஒருவாறாக மானிப்பாய் முகாமை அடைந்தபோது சற்றேறக்குறைய மலை ஏழு மணியை அண்மித்திருக்கும்.
அப்போது எங்கள் இயக்கத்தினுள் முரண்பாடுகள் உச்சமடைந்திருந்த காலகட்டம். தோழர் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கும் உங்களுக்கும் எட்டாப்பொருத்தம் என்று எல்லாருமே பேசிக்கொண்டார்கள்.
தோழர் தேவா எங்களைப் போன்ற கடைனிலைத் தோழர்களைக் கூட பொருட்படுத்திப் பேசக் கூடியவர் என்பதையும் எல்லோரும் பேசிக் கொண்டார்கள். அங்கு உங்களைச் சந்திக்க வந்திருந்த நான் உட்பட மற்றைய நான்கு பேரில் உங்களிடம் யாருமே முன்னெப்போதும் பேசியிருக்கவில்லை.
நீங்கள் இன்னமும் முகாம் திரும்பியிருக்கவில்லை. காத்திருந்தோம்.. எமக்கு உடம்ப்பு பூராவும் நம்பிக்கை இருந்தது. நீங்கள் வந்ததும், சுரேஷ் தோழர் வட்டக்கச்சியில் என்னென்ன தவறுகள் செய்தார் என்பதையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட வேன்டுமென்று.
முகாமில் ஒரே உச்சாகம்! வரவேற்பு!! சில தோழர்கள் புத்தகங்கள் வாசித்துக் கொண்டிருந்தார்கள். உலகின் சர்வாதிகாரிகள் பற்றிய நூலொன்றுள் மூழ்கிப்போன ஒரு தோழனைப் பேச்சுக்கொடுத்து குழப்ப விரும்பாமல் தூர இருந்து எட்டிப்பார்த்தது இன்னமும் நினைவிருக்கிறது.
ஒன்பது மணியளவில் நீங்கள் கருப்பு நிற பஜரோ வாகனத்தில் கம்பீரமாய் முகாமை அடைந்தபோது எமது நம்பிக்கை நரம்புகள் மேலும் முறுக்கேறி முஷ்டி பிடித்துக்கொண்டன.

நாங்கள் பேசிக்கொண்டோம். உட்கட்சிப் போராட்டம், சுரேஷ் தொழர், நாபா தோழர் இப்படி எல்லாவற்றைப் பற்றியும்..
நாங்கள் கேட்டவை பற்றி எந்த முடிபும் கிடைக்கவில்லை என்றாலும் நீங்கள் எங்கள் பக்கம் எனத் தெரிந்து கொண்டு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நிம்மதியாக உறங்கப்போனோம்.

நீங்களும் நாங்களும் இலங்கை அரசின் இன அடக்கு முறைக்கெதிராகப் போராடுவதற்கு எமக்குள்ளேயெ உருவாகும் தடைகளைப் பற்றியே பேசிக்கொண்டோம் என்பதை மட்டும் நான் மறந்துபோய்வில்லை.

ஆனால் தோழரே,
எமது இயக்கத்துள் ஏற்பட்ட வாசிக்கும் பழக்கத்தில் இரு தினங்களின் முன்னர் வெளியான ரைம்ஸ் சஞ்சிகையில் வெளியான கட்டுரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தோ அல்லது பெயர்க்கப்பட்டோ தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மூன்று லட்சம் தமிழ் மக்களில் 1400 பேர் ஒவ்வொரு வாரமும் ஆடுமாடுகள் போலச் செத்துக்கொண்டிருப்பதாக அல்லவா அக்கடுரையில் சொல்லப்பட்டிருக்கிறது. பிரபாகரன் குழு செத்துப் போன பிறகு நீங்கள் மட்டும்தான் தமிழ் மக்கள் சார்பாகப் பேச வல்லவராக மார் தட்டிக்கொள்கிறீர்கள். ஏகப்பிரதினிதி நிலையிலிருந்து சில அங்குலங்கள் மட்டுமே கீழே இருப்பதாகத் தெரிகிறது?

தோழரே, யாரோ ஒரு வெள்ளைக் காரப் பத்திரிகையாளன் எனது சொந்த மக்களின் அவலம் குறித்து மனம் வெந்து துயர்கொண்டு எழுதிய அதே நாளில் யாழ்ப்பாணத்திற்கு சொகுசு பஸ் ஓட்டுவதற்கு உங்கள் சனநாயகக் காவல்காரன் மகிந்தவிடம் அனுமதி வாங்கிவிட்டதாக பெருமையடித்து அறிக்கை விடீர்கள்.

ஒரு இனத்தின் பெரும் பகுதியொன்றை துடிக்கத் துடிக்க அழித்து மகிந்தவும் நீங்களும் புலியிடமிருந்து பெற்றுக்கொடுத்ததாகக் கூறும் சனநாயகம் இன்று முகாம்களில் மரண ஓலமாக ஒலிக்கிறதே!
90ஆம் ஆண்டிலிருந்து நீங்கள் முன்வைக்கும் வாதம், அரசுடன் சார்ந்துதான் “ஏதாவது” செய்யலாம் என்பதே.
பாருங்கள் தோழரே அரசுடன் சார்ந்து நீங்கள் ஏற்படுத்திய மரண ஓலத்தை!!

நீங்கள் போராட்டம் என்று ஏமாற்றியதில் 85 ஆம் ஆண்டு வரை அழிக்கப்பட்ட தோழர்களை எல்லாம் மறந்து விடுவோம். கூட்டம் கூட்டமாக மக்கள் கொல்லப்படும் போதுமா நீங்கள் மகிந்தவுடன் குலாவித் திரிகிறீர்கள்?
சரி உலகின் எந்த மூலையிலிருந்தாவது செத்துக் கொண்டிருக்கும் உயிர்களுக்காக யாராவது குரல் எழுப்பினால் கூட மகிந்த மனித இனத்தின் காவல்காரன் என்று “ஒரு தமிழனாகக் கூறியே” அவர்களை மௌனமாக்கி விடுகிறீர்கள்.
தோழரே,
ஏன் தமிழ் மக்கள் மீது அத்தனை வெறுப்பு உங்களுக்கு? அல்லது மனித குலத்தையே வெறுக்கிறீர்களா?

உங்களின் எசமானர்கள் இன்னும் எத்தனை ஆயிரம் பேரைக் கொலை செய்யப்போகிறார்கள். அபிவிருத்தி என்ற பெயரில் எத்தனை தமிழர்களை அவர்களின் இரத்த வெறிக்குப் பலி கொடுப்பதாக உத்தேசம்?
உங்களுக்குத் தெரியுமா ஹில்டரின் காலத்தில் தான் யேர்மனியில் மிகப்பெரிய அபிவிருத்தி நடந்ததாமே?ஹம்பேர்க் கின் தெற்க்குக் கிராமம் ஒன்றில் நாஸி சின்னம் கொண்ட சுவரொட்டிகளை யாரோ ஒட்டியதற்காக கிராமமே திரண்டு அவற்றை அகற்றிவிட்டது.

தேர்தல், அபிவிருத்தி, வெற்றிலைச் சின்னம், சொகுசு பஸ் .. எல்லாவற்றையும் ஒருகணம் மறந்து விட்டு உங்கள் சொந்த மண்ணிலேயே உங்கள் காலடியில் வந்து விழும் ஆயிரமாயிரம் உயிர்களைப் பற்றியும் சிந்திக்க நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள்.
இப்போது புலிகள் இல்லை! மக்கள் மட்டும்தான்!!அழிக்கவேண்டிய அவசியம் இல்லையே!!!
தோழரே,
இத்தனை ஆயிரம் உயிர்கள் கொல்லப்பட்டாயிற்று.. ஒரு கண்துடைப்புக்காகவேனும் ஒரு அறிக்கை விடத் தயாரகவில்லையே. கொலையாளிகளை வாழ்த்தி மட்டும் நூற்றுக்கணக்கில் அறிக்கை விட்டாயிற்று.!
உங்களுக்கு மகிந்த ராசபக்ச என்ற கொடிய மிருகத்தை விட்டால் வேறு போக்கிடம் இல்லை என்றெல்லாம் எண்ண வேண்டாம். உங்கள் கண்முன்னாலேயெ மூட்டைப் பூச்சிகளைப் போல அழிக்கப்பட்ட தமிழர்களை இனி நீங்கள் உயிர்ப்பிக்க முடியாது தான். ஆனால் உங்களது தவறுகளுக்குப் பாவ மன்னிப்பாக இன்னும் கொல்லப்படுதலைக் குறைக்க முயற்சியுங்கள். இந்த எண்ணத்தோடு உங்கள் முன்னைய தோழர்களைக் அணுகினால் உங்களுக்குப் புலம் பெயர் தேசத்திலிருந்து முதலமைச்சர் நிதியை மட்டுமல்ல…. உயிரைக் கூடத் தர ஆயிரக்கணக்கில் தயாராக இருக்கிறார்கள்.

Exit mobile version