Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

“தோழர்” சுரேந்திரன் காலமானார்.

பிரான்ஸ் நாட்டில் வாழும் இலங்கைத் தமிழ் மக்களால்  “தோழர்” என வாஞ்சையோடு அழைக்கப்பட்ட மானிட நேசன், தோழர் ச. சுரேந்திரன், பாரிஸில் கடந்த செவ்வாய்க் கிழமை காலை (02 – 03 – 2010) காலமானார்.

பாரிஸில் பல்துறை சார்ந்த அதிக நண்பர்களையும், ஐரோப்பாவெங்கும் தமிழ் வானொலி, தொலைக்காட்சி நேயர்களின் அபிமானத்தையும் பெற்ற தோழர் சுரேந்திரன் இலங்கையில் வட்டுக்கோட்டை – சித்தங்கேணியைச் சேர்ந்தவர்.

யாழ்ப்பாணக் கல்லூரியில் உயர்கல்வி கற்றபின் தமிழகம்  சென்று பொறியியல் துறையில் உயர்கல்வி மேற்கொண்டார். சில மாதங்களின் பின் நாடுதிரும்பி காரைநகரில் இயங்கிய ‘சிநோர்” நிறுவனத்தில் கடமையாற்றினார். அக்காலத்தில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார். அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியின் (மொஸ்கோ சார்பு) வடபிரதேசத் தலைவர்களான வி. பொன்னம்பலம், எஸ். விஜயானந்தன் ஆகியோருடன் நெருங்கிப் பழகி தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுழைத்தார்.

நாட்டுச் சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து 1981-ஆம் ஆண்டு பாரிஸ் வந்துசேர்ந்தார். இங்கு தமிழ் மக்களை ஒன்றிணைத்து ‘தமிழர் பேரவையை” ஆரம்பிக்க நண்பர்களுடன் முன்னின்று பாடுபட்டார். பின்னர் தமிழர் பேரவை அரசியல் காரணங்களால் பிளவுற்ற போதிலும் தோழர் சுரேந்திரன் முற்போக்குக் கொள்கைகளிலிருந்து வழுவிடவில்லை.

சிறந்த மேடைப் பேச்சாளரான தோழர் சுரேந்திரன் அங்கு நாட்டிலும், இங்கு ஐரோப்பாவிலும் பல மேடைகளில் முழங்கியவர். அரசியல், கலை இலக்கிய மேடைகளில் அவரது குரல் தொடர்ந்து ஒலித்து வந்தது. தாயகத்தில் எழுத்தாளர்கள் டொமினிக் ஜீவா, கே. டானியல், நாவேந்தன் ஆகியோரை அதிகம் நேசித்தவர். அவர்களது படைப்புகள் குறித்து இங்கு இளந்தலைமுறையினர்க்கு எடுத்துக்கூறி வந்தவர்.

தமிழ், சிங்கள மக்கள் புரிந்துணர்வோடு ஐக்கியப்பட்டு செயற்படுவதின் மூலமே ஒரு சோசலிச அரசை நிறுவமுடியுமென்பதில் நம்பிக்கை கொண்டவர்.
 

ஐரோப்பாவில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட இருபத்திநான்குமணிநேரத் தொலைக்காட்சியான ‘ரி. ஆர். ரி.” தமிழ் ஒளி தொலைக்காட்சியின் நிகழ்ச்சி முகாமையாளராகக் கடமையாற்றினார். கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்புவரை ‘ரி. ஆர். ரி.” தமிழ் ஒலி வானொலியில் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்து வந்தார்.

கண் பார்வை குன்றிவந்த நிலையில் தமிழகம் சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

நண்பர்களை மிகவும் நேசித்தவர். எல்லோருடனும் உள்ளம் திறந்து பழகும் பண்பினர். நண்பர் குழாம் சூழவிருப்பதில் ஆனந்தம் கொள்வதுடன், நண்பர்களுக்கு உதவுவதிலும் முன்னிற்பவர்;.

சிறந்த கலைஞனாகவும் விளங்கியவர். பாரிஸில் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்கள், குறும்படங்கள் சிலவற்றில் பங்களிப்புச் செய்தவர். வானொலி, தொலைக்காட்சி நாடகங்களிலும் தனது நடிப்பாற்றலால் புகழீட்டியவர். ஓரளவு இசை ஞானமும், மிருதங்க வாசிப்பும் கைவரப்பெற்றவர். இவரது மனைவி ஒரு சங்கீதப் பட்டதாரி ஆசிரியராவார்.

பாரிஸில் 1991ஆம் ஆண்டு முதல் எனது நூல் வெளியீடுகள் மற்றும் விழாக்கள் பலவற்றிலும் தோழர் சுரேந்திரன் உரையாற்றத் தவறுவதில்லை.

தனது கவிதைகளையும், வானொலி நிகழ்ச்சிக் குறிப்புகள் சிலவற்றையும் தொகுத்து நூல்களாக வெளியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகச் சொல்லியிருந்தார்.

தோழா… நண்பா… என உரத்த குரலில் யாவரையும் புன்னகை தவழ அன்போடு அழைத்து அளவளாவி மகிழ்ந்த தோழர் சுரேந்திரனை இனி எப்போது காண்பது..?

சிறந்த மேடைப் பேச்சாளனாக, முற்போக்குவாதியாக, கலைஞனாக, கவிஞனாகத் திகழ்ந்த தோழர் சுரேந்திரனின் மறைவு முற்போக்கு சக்திகளுக்கும், நண்பர்களுக்கும் பேரிழப்பாகும்.

 – வி. ரி. இளங்கோவன். (பிரான்ஸ்)

புகைப்பட விபரம்:

1.  தோழர் சுரேந்திரன்

2.  காலஞ்சென்ற பிரபல எழுத்தாளர் எஸ். அகஸ்தியர், வி. ரி. இளங்கோவன் ஆகியோருடன்  தோழர் சுரேந்திரன்.

Exit mobile version