Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தோழர் ஆசாத் கொலை என் கருத்தில் மாற்றமில்லை-மம்தா பானர்ஜி.

இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,ஜனநாயக அமைப்பில் சுமுகமான, அமைதியான தீர்வுக்கே நாம் தயாராக இருக்கிறோம். ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சுதந்திர தின உரைகளை கேட்டேன். அவர்களும் இதையே வலியுறுத்தி சொல்லி இருக்கிறார்கள். அவர்களது வேண்டுகோளை ஏற்று பேச்சு வார்த்தைக்கு மாவோயிஸ்டுகள் தயார் என்றால் அது நம் நாட்டுக்கு நல்லதுதான். ஜனநாயக ரீதியில் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட வேண்டும். அதன் மூலம் மக்களின் உயிர்கள் காப்பாற்றப்படும். நாட்டின் பாதுகாப்பும் காப்பாற்றப்படும்.பேச்சு வார்த்தைக்கு முன்னர் 3 மாதம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும். பேச்சு வார்த்தைக்கு நான் நடுவராக செயல்படுவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று கிஷன்ஜி அறிவித்திருப்பது பற்றி எனக்கு தெரியாது. அது பற்றிய செய்திகள் வழியாகத்தான் தெரிந்துகொண்டேன். அவர் என்ன சொன்னார் என்பது பற்றி முதலில் முழுமையாக தெரிந்து கொள்கிறேன். அவரது கோரிக்கைகள் பற்றி அரசாங்கம்தான் முடிவு செய்ய வேண்டும். அதில் நான் தலையிட முடியாது. ஏனென்றால் அதற்கென்று தனி அமைச்சகம் உள்ளது.நான் 10 நாட்களாக ஓய்வில் இருந்தேன். நான் யாருடனும் பேசவும் இல்லை, யாரையும் சந்திக்கவும் இல்லை. நான் அரசுக்கு எதுவும் தெரிவிக்கவும் இல்லை. ஆனால், மாவோயிஸ்டுகள் பற்றி என்னுடன் யாரும் விவாதிக்க விரும்பினால், நான் என் கருத்தை தெரிவிக்க தயாராக இருக்கிறேன்.மாவோயிஸ்டுகளின் தலைவர் ஆசாத் என்கவுண்ட்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்ட விதம் தவறு. அது படுகொலை என்று லால்கர் பொதுக்கூட்டத்தில் நான் குற்றம் சாட்டியது குறித்து பாராளுமன்றத்தில் யாரும் பிரச்சினை கிளப்பினால் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். அந்த பேரணியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவராகத்தான், ஆசாத் என்கவுண்ட்டர் குறித்து நான் சொன்னேனே தவிர மத்திய அமைச்சராக சொல்லவில்லை. அந்த கருத்துக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை. என் கருத்தில் எந்த தவறும் இல்லை. அது குறித்த என் நிலைப்பாட்டில் மாற்றமும் கிடையாது. ஜனநாயகத்தில் என் கருத்தை ஏற்றுக் கொள்ளும்படி யாரையும் நான் கட்டாயப்படுத்த முடியாது. அதுபோல மற்றவர்களும் தங்களது கருத்தை ஏற்றுக் கொள்ளும்படி என்னை கட்டாயப்படுத்த முடியாது என்றார்.

Exit mobile version