Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தொழில் பெற்றுத் தருவதாக கூறி வடபகுதிக்கு வருபவர்களுடன் யுவதிகளை தனியே அனுப்ப வேண்டாம்!- அனோமா திசாநாயக்க

வடபகுதிக்கு வந்து தொழில் பெற்றுத்தருவதாக கூறி, உறுதிமொழிகளை வழங்கி அழைப்பு விடுக்கும் நபர்களுடன் யுவதிகளையும் பிள்ளைகளையும் தனித்து அனுப்பவேண்டாம் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி அனோமா திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தொழில் பெற்றுத்தருவதாக கூறியும் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறியும் வடபகுதியிலிருந்து யுவதிகளை கொழும்புக்கு அழைத்து வந்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

எனவே எக்காரணம் கொண்டும் தொழில் மற்றும் ஏனைய உறுதி மொழிகளை வழங்கி அழைப்பு விடுக்கும் நபர்களுடன் யுவதிகளையும் பிள்ளைகளையும் தனித்து அனுப்பவேண்டாம் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி அனோமா திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

வட பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட யுவதிகள் சிலர் கொழும்பில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுவந்த நிலையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளால் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விபரிக்கையிலேயே அதன் தலைவி இந்த கோரிக்கையை விடுத்தார்.

அனோமா திசாநாயக்க இந்த சம்பவம் தொடர்பில் மேலும் விபரிக்கையில்,

வட பகுதியில் இருந்து தொழில் பெற்றுத் தருவதாக அழைத்து வரப்பட்ட ஏழு யுவதிகள் கொழும்பில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் தகவல் அறிந்த நிலையில் எமது சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் குறித்த இடத்துக்கு சென்றனர். எனினும் அங்கிருந்தவர்கள் அவ்வாறு ஒருவரும் இல்லை என்று கூறி விட்டனர். எனினும் சந்தேகம் கொண்ட எமது அதிகாரிகள் அந்த இடத்தை சோதனையிட்டுள்ளனர்.

அப்போது அலுமாரி போன்ற சிறிய இடம் ஒன்றில் ஏழு யுவதிகள் அடைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அதனைக் கண்ட எமது அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துவிட்டனர். பின்னர் அவர்களை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்கள் தற்போது நீதிமன்ற பிணையில் அவர்களின் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவருக்கு சமூக நோய் ஏற்பட்டுள்ளதாக வைத்திய அறிக்கை கூறுகின்றது.

மேலும் ஏற்கனவே குறிப்பிட்ட இடத்தில் இருந்து தப்பிய சிறுமி ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு குறிப்பிட்ட பெண்கள் மீட்கப்பட்டனர். இதனை நடத்திச் சென்றவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட சிறுமி எமது பொறுப்பிலேயே இருக்கின்றார்.

இந்நிலையில் முக்கியமாக வடபகுதி மக்களிடம் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன்.

அதாவது எக்காரணம் கொண்டு தொழில் மற்றும் ஏனைய உறுதிமொழிகளை வழங்கி அழைப்பு விடுக்கும் நபர்களுடன் பெண்களையும் யுவதிகளையும் தனித்து அனுப்பவேண்டாம் என்ற கோரிக்கையை விடுக்கின்றேன்.

இது தொடர்பில் பெற்றோரும் பாதுகாவலர்களும் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டும்.

இவ்வாறு தொழில் பெற்றுத்தருவதாகவும் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறியும் கொழும்புக்கு அழைத்து வந்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்கள் தெரியவந்துள்ளதால் இந்த விடயத்தில் பெற்றோரும் பெரியோரும் கவனமாக இருக்கவேண்டும் என்றார்.

Exit mobile version