Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தொடரும் கூடங்குளம் போராட்டம் : 1200 படகுகளில் மீனவர்கள் முற்றுகை

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட கோரி தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை 1200 படகுகளில் மீனவர்கள் முற்றுகையிட்டனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும், எரிபொருள் நிரப்புவதை நிறுத்த வேண்டும், 144 தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடங்குளம், இடிந்தகரை பகுதியில் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு ஆதரவு தெரிவித்து, தூத்துக்குடியில் கடந்த 10-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மீனவ அமைப்பினர் அடுத்த கட்டமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை கடல் வழியாக முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.
மீனவர்கள் தங்களது படகுகளின் முன்புறம் தேசிய கொடியும், பின்புறம் கறுப்பு கொடியும் கட்டியிருந்தனர். 9.30 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பல்கள் வரும் நுழைவு வாயில் பகுதியை அனைத்து படகுகளும் அடைந்தன. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மீனவர்கள் தங்களது படகுகளுடன் துறைமுகத்தை முற்றுகையிட்டனர். கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான படகுகளில் மீனவர் கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் அதிகாலையிலேயே புன்னக்காயலில் கூடினர். பின்னர் அங்கிருந்து அணிவகுத்து தூத்துக்குடி மாவட்ட மீனவர்களுடன் துறைமுகம் நோக்கி வந்தனர். சுமார் 1200 படகுகளில் துறைமுகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டனர்.
இதுதவிர, மாவட்டத்தின் பிற பகுதிகளான திருச்செந்தூர், அமலிநகர், புன்னக்காயல், மணப்பாடு, ஆலந்தலை, திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளான இடிந்தகரை, உவரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட படகுகளில் வந்த மீனவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
துறைமுக நுழைவுவாயிலில் ராட்சத கயிறு மூலம் படகுகள் உள்ளே செல்ல முடியாதபடி தடை செய்யப்பட்டிருந்தது. மேலும், துறைமுக சுற்றுப் பகுதியில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் ஆயுதம் தாங்கிய நிலையில் சுமார் 300 பேர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். கடலோர காவல் படைக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் மூலமும் போராட்டம் கண்காணிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தையொட்டி, தூத்துக்குடி மாநகரப் பகுதியிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸôர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பொலீசாரும் ஆயுதப்படையினரும் பெரும் வன்முறைகளில் ஈடுபடவில்லை.
அயல் நாடு ஒன்றுடன் போரிடுவது போன்று அப்பாவி மக்களின் அமைதிப் போராட்டதை ஆயுதப்படைகள் தீயணைப்புப்படைகள் கண்காணித்தனவாயினும் வழமை போன்று பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடவில்லை.
துறைமுக நிலவரம்: தூத்துக்குடி துறைமுகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 7 கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்தக் கப்பல்களில் இருந்து நிலக்கரி, சுண்ணாம்பு, பொது சரக்குகள் போன்ற பொருள்களின் இறக்குமதி வழக்கம்போல் எவ்வித பாதிப்புமின்றி நடைபெற்றது.
மேலும், வெளித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 5 கப்பல்களைச் சுற்றியும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதுதவிர, நிலக்கரி ஏற்றி வந்த இரண்டு கப்பல்கள் நிலக்கரிக்கான தனி தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.
இதற்கிடையே திரேஸ்புரம் பகுதியில் சனிக்கிழமை காலை அணு உலைக்கு எதிராகவும், கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் முழக்கமிட்டபடி வந்த சிலர் அந்தப் பகுதிகளில் நடப்பட்டிருந்த கட்சிக் கொடிக் கம்பங்களை வெட்டி சாய்த்தனர். பின்னர் கொடிகளை தீ வைத்து எரித்தனர்.

Exit mobile version