இந்த ஆண்டு தமிழகத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை தொடங்காத காரணத்தால் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே, காவிரி நதி நீர் தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவுப்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரையும் கர்நாடகம் வழங்கவில்லை. இதுபோன்ற குறிப்பிட்ட வறட்சிக் காலங்களில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவு குறித்தும் ஒப்பந்தத்தில் தனியாக குறிப்பிடவில்லை.
இந்த வறட்சி காலத்தில் தனது அணைகளில் நீரை சேமித்து வைப்பதைத் தவிர்த்து, தற்போதுள்ள நீர்வரத்தை வைத்தே தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். நீர்ப் பங்கீடு தொடர்பாக காவிரி கண்காணிப்புக் குழு அளித்துள்ள உத்தரவை நிறைவேற்ற உதவும் வகையில், காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்ட உத்தரவிட வேண்டும். 24-வது காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை காவிரி நதி நீர் ஆணையத்திடம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இனவாத தேசிய வெறியாக வளர்த்தெடுக்கப்படும் காவிரி நீர் பிரச்சனை இதுவரைக்கும் தேர்தல் கட்சிகளின் வாக்குப் பசிக்கு தீனி போடும் ஒன்றாகவே இருந்து வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையான காவிரி நீர்ப் பகிர்வு குறித்து தமிழக கேரள முற்போக்கு இயக்கங்களின் போராட்டங்கள் மட்டுமே அரசுகளை அடிபணிய வைக்கும்.