Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேர்தல் வெற்றி : மாவை அறிக்கை

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து மாவை சேனாதிராசா விடுத்துள்ள அறிக்கையில் தமிழ் மக்களின் தீர்ப்பை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.

தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வன்னி, திருமலை, அம்பாறை மாவட்டங்களில் பெரு வெற்றியைப் பெற்றிருக்கின்றோம்.

எதிர்பார்த்த நகர, பிரதேச சபைகளில் ஆட்சியைப் பெற்றிருக்கின்றோம். ஏனைய சபைகளிலும் கணிசமான அளவு வெற்றி கிடைத்திருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதும் அதன் கொள்கை இலட்சியம் மீதும் நம்பிக்கை கொண்டே மக்கள் இத்தேர்தலிலும் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்துள்ளனர்.

வாக்களித்த மக்களுக்கும் வெற்றிக்காக உழைத்தவர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

அமைச்சர்களும் அரசின் முகவர்களும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர், அமைச்சர் குழாமும் அதிகாரங்களையும் வளங்களையும் தாராளமாகப் பயன்படுத்தியும் ஆங்காங்கு முகாமிட்டு ஆயுத முனையில் எமது வேட்பாளர்களையும் மக்களையும் அச்சுறுத்தியும் வாக்குகளை அபகரிக்க முயற்சித்த பொழுதும் தமிழ்மக்கள் பெருமளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களித்து மக்களின் வெற்றியை மீண்டும் நிரூபித்துள்ளனர்.

தமிழ் மக்களின் இத் தீர்க்கமான தீர்ப்பும் பெற்ற வெற்றியும் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சிச் சபைகளிலும் தேர்தல் நடைபெறும் பொழுதும் நிரூபிக்கப்படும் என்ற நம்பிக்கையுண்டு.

தமிழ் மக்களின் இத்தெளிவான தீர்க்கமான தீர்ப்பை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Exit mobile version