Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேர்தல் வன்முறையை கைவிடுங்கள்! மக்களை பிளவு படுத்தாதீர்கள்! : இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்

ccucஅனைத்து விதமான தேர்தல் வன்முறைகளயும் கண்டிக்கும் இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் மலையகத்தில் தற்போது இ.தொ.க விற்கும் தொ.தே.ச விற்குமிடையில், அவற்றின் தலைவர்களினால் தேர்தல் இலாபத்திற்காக மக்கள் மத்தியில் முடுக்கி விடப்பட்டிருக்கும் தேர்தல் வன்முறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

ஒழுங்கமைப்பட்டிருக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்களையும் உள்ளடக்கிய தேசிய இனமாக எழுந்து நிற்கின்ற மலையக தமிழ் தேசிய இனத்தை, தங்கள் சுயநலத்திற்காக கூறு போட்டு மோதலில் ஈடுபடுத்தி அழிவு நோக்கிய ஒரு பயணத்தை செய்து கொண்டிருக்கும் இந்த சக்திகளின் மக்கள் விரோத நிலைப்பாட்டை உணர்ந்து செயற்படும் வகையில், அவர்களினுடைய தேர்தல் போட்டி, பொறாமை, காழ்ப்புணர்வு போன்றவற்றை புறத்தொதிக்கி அவர்களின் சுயநல சதி வலைக்குள் சிக்காமல், மலைய மக்கள் தங்கள் ஐக்கியம் குலையாமல் நிதானமாக செயற்ப்பட வேண்டுமென்று வலியுறுத்துகிறது.

இந்த இரண்டு கட்சிகளும் அடக்கப்படுகின்ற தமிழ், முஸ்லிம், மலையகத்தமிழ் தேசிய இனங்களை ஒடுக்கின்ற மகிந்த சிந்தனையின் மடியில் தவழுகின்ற கையாலாகாத வலது குறைந்த சக்திகளில் அடங்கும். இவர்களுக்காக மக்கள் தங்களுக்குள் வன்முறைகளில் ஈடுபடுவது அர்த்தமற்றவை, இவ்வாறு இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் இணைப்பாளர்களான இ.தம்பையா, டபிள்யூ.வி சோமரத்ன ஆகியோர் தற்போதைய மலையக நிலைமைகள் பற்றி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தனி நபர்கள் தங்கள் சுய இலாபத்திற்காகவும், இருப்புக்காகவும் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேருகின்ற போது, சில வேளைகளில் அவர்களது இன, மத, சாதி அடையாளங்களை மறைப்பர்; அவ்வடையாளங்களை துறப்பர். அதிலிருந்து விலகும் போது அவர்களது அடையாளங்களை தூக்கிப்பிடிப்பார்கள். இவர்களது சுய ரூபத்தை மக்கள் தான் விளங்கிக் கொள்ள வேண்டும். இது, இ.தொ.க விற்கோ, தொ.தே.ச விற்கோ விதிவிலக்கல்ல.

மலையக தமிழ் மக்கள், 60 வதுகளில் 70வதுகளில் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான முரண்பாட்டினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களின் போது மலையக தமிழ் மக்களும் தேர்தல் வன்முறைகளுக்கு பலியாகி இருந்தனர். ஆனால் எதிர்வரும் மாகாண சபை தேர்தலை மையமாக கொண்டு சாதாரண தொழிலாளர்களை உள்ளடக்கிய மலையக தமிழ் மக்களை வன்முறையில் ஈடுபடும் வகையில் இ.தொ.க வும், தொ.தே.ச வும் நடந்து கொள்வதை, மாக்சிச-லெனினிசத்தை அடிப்படையாக கொண்ட தொழிலாள வர்க்க கட்சி என்ற ரீதியில் நாம் சகித்து கொள்ள முடியாது.

மலையகத்தில் தொழிலாளர்களாகவோ, இளைஞர்களாகவோ, படித்தவர்களாகவோ இருக்கும் எவரும், மலையகத்தில் மறைந்து போய்க்கொண்டிருக்கும் சாதியத்தை-( உயர்ந்த, தாழ்ந்த சாதி என்ற சொல்லப்படுபவற்றை) மீண்டும் உயிர்த்தெழ வைக்கின்ற எந்த ஒரு சக்தியையும் ஆதரிக்கக் கூடாது என்று எமது கேந்திரம் கேட்டுக்கொள்கின்றது.
எனவே தேர்தல் வன்முறைகளில் எந்த கட்சியினதும் பலி கடாக்களாக வேண்டாம் என்று நாம் மிகவும் வினயமாக கேட்டுக் கொள்கிறோம்.

இணைப்பாளர்கள்
இ.தம்பையா
டபிள்யூ.வி சோமரத்ன.
இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்.

Exit mobile version