யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் அரசாங்கம் வெற்றிப் பெற்ற போதிலும் இதனை விட அதிக வெற்றியை பெறக் கூடிய சந்தர்ப்பம் இருந்தது. வவுனியா நகர சபைத் தேர்தலில் அடைந்த தோல்வியை பாரிய தோல்வி என தாம் நம்புவதாகவும் டக்ளஸ் தேவானந்த கூறியுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டிய அரசியல் தீர்வை துரிதமாக பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகவே இந்த தேர்தல் முடிவுகளை கருத முடியும். அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் நீண்டகாலத்திற்கு பின்னர், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மக்கள் எவ்வித அழுத்தங்களுமின்றி தமது தீர்மானத்தை சுதந்திரமாக வெளிப்படுத்த சந்தர்ப்பம் வழங்கியமைக்கு குறித்து ஜனாதிபதிக்கு நன்றிக் கூற வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தேர்தல்களில் தமது கட்சி வெற்றியீட்டியதாக கருதப்பட முடியாது எனவும் சமூக சேவைகள் அமைச்சரும், ஈ.பி.பி.டியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாநகரசபைக்கான தேர்தலில் தமது கட்சியைச் சேர்ந்த 9 வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை ஓர் வெற்றியாக கருத முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாநகரசபைக்காக ஈ.பி.டி.பி. 20 வேட்பாளர்களை களமிறக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தேர்தல்களில் 17 ஆசனங்களை வென்றிருக்க முடியும் எனவும், சில காரணிகளினால் தம்மால் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்தத் தேர்தலில் வெற்றி கிட்டியதாக கருதப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். எனினும், தேர்தல் தோல்விக்கான காரணத்தை அவர் குறிப்பிட மறுத்துவிட்டார்.
அதேவேளை யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைத் தேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு தாம் மதிப்பளிப்பதாகவும் அவர்கள் மேற்கொண்ட இந்த தீர்மானம் குறித்து எதிர்காலத்தில் அவர்கள் நீண்டகால அடிப்படையில் சிந்திக்க வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் வோனந்தா தெரிவித்துள்ளார்.