இந்தத் தேர்தல் முடிவுகளைத் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென அவர் கூறியுள்ளார். ராஜகிரியவிலுள்ள தமது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. தேர்தல் தொடர்பாக காணப்பட்ட நம்பிக்கை குறித்து பல கேள்விகள் இருக்கின்றன. 1933ம் ஆண்டு நவம்பர் 12ம் திகதி ஜெர்மனியில் அடால்ஃப் ஹிட்லர் நடத்திய தேர்தல் குறித்து வரலாற்று ஏடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறு நவீன யுகத்தில் நடத்தப்பட்ட மிகவும் முறைகேடான தேர்தலாக இலங்கையில் நடந்துமுடிந்த தேர்தல் அமைந்துள்ளது. தேர்தலில் 96 வீதமான மக்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். வாக்களிப்புக்களின் போது பல்வேறு அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. தேர்தல் முடிவுகளின்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 18 லட்சம் வாக்குகளை மேலதிகமாக பெற்று வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதாக அரச ஊடகங்கள் தெரிவித்த போதிலும் இதன் உண்மையான நிலை என்னவெனில் மக்களின் விருப்பம் முழுமையாக மழுங்கடிக்கப்பட்டுள்ளது. மக்களின் விருப்பத்தை புறந்தள்ளி மிகவும் மோசடியான முறையில் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.