விடுதலைப்புலிகளை இலங்கை இராணுவம் கடந்த வருடம் தோற்கடித்த வேளையில் இடம்பெற்ற பொதுமக்கள் இழப்புகள் தொடர்பாக உலகின் கவனத்திற்குக் கொண்டுவந்த மருத்துவர் ஒருவர் அந்தத்தாக்குதலின் பின்னணியில் இருந்த மனிதருக்கு ஆதரவளிக்கும் கட்சியின் சார்பில் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடுவதாக ஏ.எவ்.பி.செய்திச்சேவை நேற்று செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டிருக்கிறது.
இராணுவத்தின் இறுதி வெற்றியை தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 மருத்துவர்களில் வீரகத்திப்பிள்ளை சண்முகராஜாவும் (40 வயது) ஒருவராகும்.சர்வதேச உதவி அமைப்புகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தவறான விதத்தில் புலிகளின் பிரசாரத்தைப் பரப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்டு இவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறும் தேர்தலில் தமிழ்க் கட்சியொன்றின் சார்பில் இந்த மருத்துவர் போட்டியிடுகிறார்.அந்த தமிழ்க்கட்சியானது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை தெரிவித்துள்ள கட்சியாகும்.
யுத்தத்தின் பின்னர் எமது நாட்டிற்கு தலைமைதாங்கி மீளக்கட்டியெழுப்புவதற்கு பொருத்தமானவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே என்று நான் நம்புகிறேன். அவருக்கு ஆதரவாக நான் பணியாற்றுவேன் என்று சண்முகராஜா கூறியுள்ளார்.
இராணுவத்தின் இறுதிக்கட்ட நடவடிக்கைகளின் போது நான்கு மாத காலத்தில் குறைந்தது 7 ஆயிரம் பொதுமக்கள் மரணமடைந்திருப்பதாக ஐ.நா. கூறுகிறது.மே 18 இல் இராணுவத்தினர் வெற்றியடையும் வரை யுத்த வலயத்திற்குள் தங்கியிருந்த மருத்துவர்களால் வழங்கப்பட்ட தகவலும் ஐ.நா.வின் கணிப்பீட்டில் ஒரு பகுதியாக உள்ளடக்கப்பட்டிருந்தது.மோதலின் இறுதிக்கட்டத்தில் 350400வரையிலான பொது மக்கள் கொல்லப்பட்டதாக டாக்டர்கள் கூறியிருந்தனர். அதன்பின்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது சண்முகராஜாவும் ஏனைய மருத்துவர்களும் முதலில் தாங்கள் கூறியதை மறுத்திருந்தனர். புலிகளின் அழுத்தத்தாலேயே முதலில் அவ்வாறு கூறியிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
அதன் பின் அவர்கள் விடுவிக்கப்பட்டு அவர்களின் வேலையும் திரும்ப வழங்கப்பட்டது.இழப்புகளின் தொகை குறித்து நான் கதைக்க விரும்பவில்லை.அது முடிந்துவிட்டது என்று முல்லைத்தீவிலுள்ள தனது வீட்டிலிருந்து தொலைபேசி மூலம் சண்முகராஜா ஏ.எவ்.பி.க்கு கூறியுள்ளார்.மிகவும் நெருக்கடியான நிலைமையில் நாம் பணியாற்றினோம்.மின்சாரம் இல்லை. உரிய மருந்துகளோ உபகரணங்களோ இறுதி நாட்களின்போது இருக்கவில்லை என்று அவர் கூறினார்.குண்டு, ஷெல் தாக்குதல்களைத் தவிர்க்க மருத்துவமனையை நகர்த்த வேண்டியிருந்தது.எமது மக்கள் அதிகளவுக்குப் பாதிக்கப்பட்டனர். யுத்தம் முடிந்த நிலையில் இப்போது விடயங்கள் அதிகளவுக்குச் சிறப்பாக இருக்கின்றன என்று சண்முகராஜா கூறியுள்ளார்.
ஈரோஸ் வேட்பாளராக சண்முகராஜா தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த அமைப்பு புலிகளுடன் முன்னர் தொடர்புபட்டிருந்து அமைப்பாகும்.இப்போது ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கிறது.சண்முகராஜா போட்டியிடும் முல்லைத்தீவு தொகுதி உட்பட வன்னி தேர்தல் மாவட்டத்தில் 2 இலட்சத்து 67 ஆயிரம் பேர் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாகும். ஆனால், இத்தொகையில் அரைவாசிக்கும் குறைவானோரே இப்போது அங்கு இருப்பதாக நம்பப்படுகிறது.பலர் இடைத்தங்கல் முகாம்களில் உள்ளனர்.”எனது மக்கள்” நான் சிகிச்சையளித்த நோயாளிகள் எனக்கு வாக்களித்து பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்வார்கள் என்று நம்புகிறேன் என்று சண்முகராஜா கூறியுள்ளார்.