தேசிய பாடசாலைகளில் சிறிலங்காப் படையினர், காவல்துறையினர் மற்றும் வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு அரசாங்கத்தினால் முன்னுரிமை வழங்கப்பட்டமை பெரும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.
தற்போது, தேசிய பாடசாலைகளில் அனுமதி பெறுவது என்பது இயலாத நிலையில், சிறிலங்காப் படையினர், காவல்துறையினர் மற்றும் வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளது.
அரசாங்கத்தின் இச்செயலுக்கு பல மனித உரிமை அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இருப்பினும் அரசாங்கம் இவ்வாறு செயற்படுவதானது, சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் அளிக்கப்படும் இந்த முன்னுரிமை, அரசாங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெறும் மனித உரிமை மீறல் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
இலங்கையைப் பொறுத்தமட்டில் அனைவருக்கும் இலவசக் கல்வியை அரசாங்கம் வழங்குகின்றது. இருப்பினும், தேசிய பாடசாலைகளில் மாத்திரமன்று பல உயர்தர பாடசாலைகளிலும் மாணவர்களை இணைப்பதில் பாகுபாடு காட்டப்பட்டு வருகின்றது.
இதுபற்றி கல்வி அதிகாரிகள் தெரிந்து வைத்திருந்தாலும், எவரும் உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து எந்தவித நடவடிக்கையும்எடுப்பதில்லை.
இந்நிலையில், அரசாங்கமே இராணுவம், காவல்துறை, வைத்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கி சாதாரண மக்களின் கல்வி உரிமையை பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.