Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முயற்சிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்களிப்பு

ரி.குகதாஸ்- இன்று கம்யூனிஸ்ட் கட்சியின் 65 வருட நிறைவு
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தனது 65 ஆவது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுகிறது. இந்த வேளையில் தேசிய இனப்பிரச்சினையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆற்றிய பங்கு என்ன என்பதை நாம் ஆராய வேண்டும்.
பிரித்தானிய ஆட்சி அதிகாரத்தை ஒழித்து மக்கள் ஆட்சியை நிறுவுவதற்கான பல போராட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சி நேரடியாகப் பங்கேற்று செயற்பட்டு வந்ததை யாரும் மறக்கமாட்டார்கள். யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ்தான் முதன்முதலில் பூரண சுதந்திரம் வேண்டும் என்னும் குரலைக் கொடுத்தது. அந்தவேளையில் ஒரு இளம் கம்யூனிஸ்டாக இடதுசாரி தத்துவங்களை மக்களுக்கு எடுத்துச்சொல்லிவந்த டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க அவர்கள் பூரண சுதந்திரத்தை ஆதரித்து பிரசாரம் செய்து வந்தார்.
ஆரம்பத்தில் லங்கா சமசமாஜக்கட்சி என்ற பெயரில் இடதுசாரிக் கட்சி ஆரம்பமாகியது. இதில் டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க, ஏ.வைத்திலிங்கம், சரணங்காதேரே, என்.ஜி.மென்டிஸ் போன்றவர்களும் அங்கம் வகித்தார்கள். துரதிர்ஷ்டவசமாக இந்தக் கட்சியில் தேவையற்ற பிளவு ஏற்பட்டது. இந்தப் பிளவைத் தொடர்ந்து தான் கம்யூனிஸ்ட் கட்சியானது ஆரம்பிக்கப்பட்டது.
1943 இல் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டபோது பல தமிழர்கள் இதில் பங்கேற்றார்கள். குறிப்பாக ஏ.வைத்திலிங்கம், பொன்.கந்தையா, கே.இராமநாதன், ரி.துரைசிங்கம் போன்றவர்கள் குறிப்பிடக்கூடியவர்கள். 1947 முதல் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்ற போது தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் இருந்து 7 பேர் தெரிவானார்கள்.
பிரஜாவுரிமைச் சட்டம்
தேர்வு செய்யப்பட்ட இந்த 7 பேரின் அங்கத்துவத்தைப் பறிப்பதற்காக டி.எஸ். சேனநாயக்க அரசாங்கத்தால் பிரஜாவுரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் பிரதான நோக்கம் தோட்டத் தொழிலாளர்களை வாக்களிக்கத் தகுதியற்றவர்களாக்குவதே. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தோட்டத்தொழிலாளர்களின் பிரதிநிதிகளாகிய 7 பேரையும் பதவியிலிருந்து அகற்றுவதே.
இதை எதிர்த்து இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராடின. இதில் பிரதான பங்கை கம்யூனிஸ்ட் கட்சி வகித்தது. பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியும் கம்யூனிஸ்ட் கட்சி போராடியது. தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரஜாவுரிமை கொடுக்கப்பட கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பத்தில் இருந்து போராடியது. இதன் பலன் தான் இன்று மலையக மக்கள் தமக்கென ஒரு பிரதிநிதியைத் தெரிவு செய்யும் நிலைக்கு வந்துள்ளார்கள். இந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் சரத்முத்தெட்டுகம தனி ஒரு மனிதனாக நின்று ஆற்றிய உரையை யாரும் மறக்க மாட்டார்கள்.
மொழிப்பிரச்சினையில் கட்சியின் நிலைப்பாடு
தனிச்சிங்கள மசோதா 1956 இல் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி நாடாளவிய போராட்டத்தை நடத்தியது. இப்படி நடத்தப்பட்ட எதிர்ப்புக்கூட்டங்களை இனவாதிகள் காடையர்களை ஏவிவிட்டு குழப்பினார்கள். குண்டர்கள், தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதை எல்லாம் எதிர்த்து தனிச்சிங்கள மசோதாவிற்கு எதிராக கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்கா, பீட்டர் கெனமன், பொன்.கந்தையா போன்றோர் ஆற்றிய உரைகள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை.
தமிழ்மொழி விசேட மசோதா
தொடர் போராட்டங்களின் பிரதிபலிப்புத்தான் தமிழ்மொழி விசேட மசோதா. 1958 களில் இந்த மசோதா கொண்டுவரப்பட்ட போதும் இது நடைமுறைப்படுத்தப்படாது இருப்பில் இருந்தது. தமிழ் மக்களை ஏமாற்றும் நோக்கோடு பல்வேறு அரசுகள் இந்த மசோதாவிற்கு உயிர்கொடுப்பது போல் நடித்தது.
காலம் பிந்திய போதும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான டி.யூ.குணசேகரா தனது அயராத முயற்சியினால் ஒரு புதிய இரு மொழித் திட்டத்தை கொண்டுவந்துள்ளார். இதன் பிரகாரம் புதிதாக சேவையில் இணையும் சகல அரச ஊழியர்களும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அது இன ஐக்கியத்திற்கு ஒரு நல்ல முறையாகும். ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையில் தோழர் டி.யூ. குணசேகர மிக நாசுக்காக இந்தத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.
பண்டாசெல்வா ஒப்பந்தம்
தமிழ் மக்களினதும் இடது சாரிக்கட்சி களினதும் இடைவிடாத போராட்டத்தினால் பண்டாசெல்வா ஒப்பந்தம் உருவானது. பிரச்சினைக்கு இது ஒரு முழுமையான தீர்வு அல்ல. எனினும் இது தீர்வுக்கான ஒரு முன் முயற்சி. தெற்கில் உள்ள இனவாத சக்திகளும் ஒரு சில மத குருமார்களும் இதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திலும் வன்செயலிலும் ஈடுபட்டார்கள்.
இந்த ஒப்பந்தத்தை கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. இதை எதிர்ப்பவர்கள் மீதும் வன் செயலை தூண்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்விட்டது. துரதிர்ஷ்டவசமாக வன்முறையாளர்களுக்கு பணிந்து ஒப்பந்தம் கிழிக்கப்பட்டது. பயத்தின் காரணமாக புறக்கோட்டையில் உள்ள தமிழ்க்கடைகள் பூட்டப்பட்டிருந்தன. தோழர் பீட்டர் கெனமனும் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத்தர்களும் ஆதரவாளர்களும் தமிழ்கடைகளுக்கு பாதுகாப்பளிக்க முன்வந்தார்கள். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ முன்வந்தார்கள்.
அகதி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தவர்களுக்கு உதவி வந்தார்கள். கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் களத்தில் இறங்கி உதவிவந்தார்கள். வடக்கிலும் கப்பலில் வந்தவர்களுக்கு ஆறுதல் கூறி பலவகையிலும் கட்சித் தொண்டர்கள் உதவி வந்தார்கள்.
யாழ்.திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் இறந்தார்கள் என்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி அரசு திட்டமிட்டு தமிழ் மக்களின் உடைமைகளைச் சூறையாடினார்கள். உயிர்களைப் பறித்தார்கள். இதை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழ் மக்களுக்கு பலவகையிலும் உதவினார்கள். இதைக்கண்ட அரசு கட்சியைத் தடைசெய்தது. தலைவர்களை சிறையிலிட்டது. இந்தக் கொடூர இனக்கலவரத்தை எதிர்த்து பாராளுமன்றத்தில் ஆக்ரோமாக ஆதாரத்துடன் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தினார் தோழர் சரத் முத்தெட்டுகம.
இனப்பிரச்சினையில் கட்சியின் நிலைப்பாடு
கம்யூனிஸ்ட் கட்சி சமஷ்டி முறை ஆட்சிக்கு ஆதரவு வழங்குகிறது. பிரதேச சுயாட்சியை ஆதரித்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்த அடிப்படையில் தமிழரசுக் கட்சியுடன் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை வடக்கில் செய்து கொண்டது.
ஒற்றை ஆட்சிமுறையை கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. பதிலுக்கு ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வு என்னும் கொள்கையையே கட்சி வலியுறுத்தி வருகிறது. கட்சி பிரிவினைக்கு எதிரேயன்றி அதுகாரப்பகிர்வுக்கு பூரண ஆதரவு அதிகாரப்பகிர்வு அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வையே கட்சி வலியுறுத்தி வருகின்றது.
நாடு நலம் பெற யுத்தத்திற்கு முடிவு கட்டி சுயாட்சித் தத்துவத்தின் மூலம் பிரிவினையற்ற அதிகாரப்பகிர்வினை உள்ளடக்கிய ஒரு அரசியல் தீர்வை உடன் வைக்கும் படி அரசை கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தி வருகின்றது.
கட்டுரையாளர் ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ்.மாவட்டச் செயலாளரும் அரசியற் குழு உறுப்பினருமாவார்

Exit mobile version