Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தொழில்நுட்பத்தால் வெற்றிகொள்ளப்பட்ட தேர்தல் : ஹிட்லர் வெற்றி கொண்ட முறைக்கு ஒப்பானது : மங்கள் சமரவீர

ஜெனரல் சரத் பொன்சேகாவின் 1.5 மில்லியன் வாக்குகள் இறுதியில் மென்பொருள் தொழில்நுட்பத்தினால் முறைகேடாக மாற்றப்பட்டதன் மூலமே மஹிந்த ராஜபக்சவுக்கு 1.8 மில்லியன் வாக்குகள் மேலதிகமாக கிடைத்து அவர் வெற்றிப்பெற்றதாக சரத் பொன்சேகாவின் ஊடகப்பேச்சாளரான மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.
உலகில் முதன் முதலாக மேற்கொள்ளப்பட்ட மென்பொருள் தொழில்நுட்ப வாக்குமோசடி இதுவென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் விரைவில் இந்த தேர்தல் மோசடி மிக்க தேர்தல் என்பதை உணர்ந்துக்கொள்வார்கள் எனக்குறிப்பிட்டுள்ள அவர், 1933 ஆம் ஆண்டு நவம்பரில் ஜெர்மனியில் அடொல்ப் ஹிட்லர், மோசடிமிக்க தேர்தலை நடத்தி 96 வீத வாக்குகளை பெற்றமையை அவர் நினைவூட்டியுள்ளார்.

தமது குற்றச்சாட்டுக்கு அடிப்படையாக மஹிந்த ராஜபக்ச அரச சொத்துக்களை தமது பிரசாரத்திற்காக பயன்படுத்தியமை உட்பட்ட பல்வேறு விடயங்களை குறிப்பிட்டுள்ள மங்கள சமரவீர, தேர்தல்கள் ஆணையாளர் இறுதியாக வெளியிட்ட அறிக்கையை உற்று நோக்கினால் இந்த உண்மை புரியும் என தெரிவித்துள்ளார்.

“ பல சந்தர்ப்பங்களில் நாங்கள் வாக்குப்பெட்டிகளை காப்பாற்ற முடியாமல் இருந்தோம். இது மிகவும் பிழையான வழிமுறையாகும். இந்தநிலையில்,நான் மிகவும் கஸ்டமான முறையிலேயே பணியாற்ற முடிந்தது” என தேர்தல்கள் ஆணையாளர் கூறியிருந்தமையை மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை ரத்துச்செய்ய நீதிமன்றம் சென்றால், ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவுக்கு அரச ஊடகங்கள் மேற்கொண்ட பிரசாரங்களும் நிகழ்ச்சிகளும் மாத்திரமே போதும், அவருடைய பதவியை ரத்துச்செய்வதற்கு எனக்குறிப்பிட்டுள்ள அவர், துரதிஸ்டவசமாக பதவியில் உள்ள பிரதம நீதியரசரே அரசியலமைப்பை மீறி பதவிக்கு நியமிக்கப்பட்டவர் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கணணி தொழில்நுட்பத்துடன் கூடிய வாக்கு மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதை தம்மால் தற்போதைக்கு நிரூபிக்கமுடியாதுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், வடக்கில் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றும் தெற்கில் பல்வேறு இடங்களில் தேர்தல் தினத்தன்று வன்முறைகள் இடம்பெற்றும் கூட சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்த தேர்தலை நியாயமான தேர்தல் எனக்குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் அரசாங்கத்தினால் நன்றாக உபசரிக்கப்பட்டவர்கள் என்பதும் குழுவில் இடம்பெற்றிருந்த சிலர் இது தமக்கு கொடுப்பனவுடன் கூடிய விடுமுறை என்றும் தெரிவித்திருந்தமை அவர்களின் நடவடிக்கைகளை வெளிப்படுத்துவதாக மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு கிடைத்த தகவல்களின்படி, மாவட்ட செயலாளர்கள், வாக்குகள் மஹிந்த ராஜபக்சவுக்கு சென்று சேரும் வகையில் கணக்கெடுப்பின் போது நடந்துக்கொண்டனர். இவர்கள் அனைவரும் ஜனாதிபதியின் சகோதரரால் தெரிவுசெய்யப்பட்டு இந்த நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தப்பட்டார்கள் என்ற தகவலும் தமக்கு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இதனை தவிர கொழும்பு உட்பட்ட பல்வேறு இடங்களில் ஆயுதம் தாங்கியவர்கள் தேர்தல் வாக்களிப்பின் போது வாக்குமோசடிகளிலும் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் பயன்படுத்துவதற்காக மாத்திரம் அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள், கிராமசேவகர்களின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்ட போதும் அவை அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் அங்கம் வகிக்கும் சமுர்த்தி உத்தியோகத்தர்களால் விநியோகிக்கப்பட்டன. இதனை தவிர இறந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றவர்களின் பெயர்களில் சுமார் 4 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான போலி அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் காலத்தில் அடையாள அட்டைகளை அச்சிடும் இயந்திரமும் லெமினேட் இயந்திரமும் ஜனாதிபதியின் அலரி மாளிகைக்கு எடுத்துச்செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைதவிர சரத் பொன்சேகாவின் அன்னம் சின்னத்துக்குரிய வாக்குகள் மஹிந்த ராஜபக்சவின் வெற்றிலை சின்ன வாக்குகளுடன் எண்ணப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. என்றும் இல்லாதவாறு இந்த தடவை தேர்தல்கள் ஆணையாளரின் கையொப்பமில்லாமல் வாக்கு எண்ணிக்கைகள் ஊடகங்களுக்கு தொழில்நுட்பம் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. அத்துடன் ஏன் வாக்கு எண்ணிக்கைகள், வாக்கு எண்ணும் நிலையங்களில் வெளியிடப்பட்டதன் பின்னரும் கூட அதிக நேரம் கழித்து ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டன? ஏன் பசில் ராஜபக்ச, தேர்தல்கள் ஆணையாளருடன் அதிக நேரங்களை செலவிட்டார்? என்ற கேள்விகளை தொடுத்துள்ள மங்கள சமரவீர, தகவல்களின் படி பசில் ராஜபக்ச அதிகாலை 3 மணிவரை தேர்தல்கள் ஆணையாளருடன் இருந்ததாக தெரிவிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று மணி நேரம்  கோதாபய  ராஜபக்ச தேர்தல்  ஆணையாளருடன்  துப்பாக்கி முனையில் மிரட்டி முடிபுகளை  மாற்றியது  உண்மையா எனக் கேள்வியெழுப்பிய  சுவிஸ்  அரச வானொலிச்  செய்தியாளரே இலங்கையை விட்டு  வெளியேறுமாறு பணிக்கப்பட்டார் என்பது  அறிந்ததே.

Exit mobile version