விஜயவாடா எம்.பி. லகடபதி ராஜகோபால் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும், 20 எம்.எல்.ஏக்களும் விலகுவதாக வெளியாகியுள்ள தகவல்களால் ஆந்திராவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று, தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவின் பிற பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளது. இதனால் ஆந்திர அரசுக்கும், மத்திய அரசுக்கும் பெரும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராஜகோபால், தனது எம்.பி. பதவியை விட்டு விலகுவதாக கூறி இன்று லோக்சபா சபாநாயகர் மீரா குமாரை சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் டில்லியிலிருந்து அவர் ஹைதராபாத் கிளம்பிச் சென்று விட்டார். ஒருங்கிணைந்த ஆந்திராவைக் காக்க, தான் தீவிரமாகப் போராடப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து ராயலசீமா, கடலோர ஆந்திராவைச் சேர்ந்த மேலும் பல காங்கிரஸ் எம்.பிக்களும் விலகுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கானாவை அமைக்கக் கூடாது என்று கோரி இவர்கள் போராட்டத்தி்ல் குதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ராஜினாமா செய்த எம்.பிக்கள் இன்று கூடி போராட்டம் குறித்து திட்டமிடவுள்ளதாகவும் தெரிகிறது.
இதற்கிடையே, ஆந்திர மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 20 பேரும் பதவி விலகியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதனால் ஆந்திராவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானாவை எதிர்த்து போராட்டம்
இந்நிலையில் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது என்று வலியுறுத்தி போராட்டங்கள் வெடித்துள்ளன. சந்திரசேகர ராவின் கொடும்பாவியும் கொளுத்தப்பட்டுள்ளது.
தெலுங்கானா அமையக் கூடாது, அப்படியே அமைந்தாலும் ஹைதராபாத்தை அதனுடன் சேர்க்கக் கூடாது என்று வலியுறுத்தி, கடப்பா மாவட்டம் பொதட்டூரில் பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் 1 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
இப்பேரணியை நடத்திய முன்னாள் எம்.எல்.ஏ. வரதராஜுலு ரெட்டி கூறும்போது,
“ஆந்திர மக்களின் வரிப்பணத்தில் பிரமாண்டமான நகரமாக உருவெடுத்துள்ள ஹைதராபாத்தை நாங்கள் தெலுங்கானாவில் சேர்க்க விட மாட்டோம். ஹைதராபாத் எங்களுக்கே சொந்தம். அதை தெலுங்கானாகாரர்களுக்கு விட்டுக்கொடுக்கமாட்டோம்” என்றார்.
பேரணியில் வந்த மாணவர்கள் சிலர் ஆவேசமாக சந்திரசேகரராவ் உருவ பொம்மையை எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ராயலசீமா மாநிலம் அமையுங்கள்…
மாணவர்கள் சங்க தலைவர் கிருஷ்ணய்யா கூறும்போது,
“சித்தூர், நெல்லூர், கர்னூல், அனந்தபுரம், கடப்பா ஆகிய மாவட்டங்களைத் தனியாகப் பிரித்து ராயல்சீமா என்ற தனி மாநிலத்தை அமைக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது” என்றார்.
குண்டூரில் மக்கள் கூடி, சந்திரசேகரராவ் உருவ பொம்மையை எரித்தனர். பின்னர் தெலுங்கு மொழி பேசும் மக்களை பிளவு படுத்தும் சந்திரசேகரராவை இனி ஆந்திராவுக்குள் நுழைய விடமாட்டோம் என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
விசாகப்பட்டினத்திலும் தெலுங்கானா மாநிலத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அங்குள்ள ஏ.யு. கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
“தெலுங்கானாவில் ஹைதராபாத்தைச் சேர்த்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றும் கோஷமிட்டனர்.
அதேபோன்று, ஸ்ரீகாகுளம், பிரகாசம் மாவட்டங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
விஜயவாடா நகரில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிரஜா ராஜ்ஜியம் கட்சி தொண்டர்கள், மாணவர்கள் ஆகியோர் வீதியில் திரண்டு சந்திரசேகரராவ் உருவ பொம்மையை எரித்தனர்.
தெலுங்கானா மாநிலம் அமைக்க உறுதி கூறப் போய் தற்போது புதிதாக வெடித்துள்ள எதிர்ப்புப் போராட்டத்தால் ஆந்திர மாநில அரசு திணறிப் போயுள்ளதாகக் கூறப்படுகின்றது.
சந்திரசேகர ராவின் உண்ணாவிரதம் முடிவு
அதே வேளை, தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து தனது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை சந்திரசேகர ராவ் கைவிட்டுள்ளார். தெலுங்கானா அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டது, மாணவர்கள் நடத்திய மாபெரும் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறியுள்ளார். தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வலியுறுத்தி இறுதிப் போராட்டமாக அறிவித்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் ராவ். இதையடுத்து தெலுங்கானா பிராந்தியம் முழுவதும் கொந்தளிப்பாகியது. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் கூட அவர் உண்ணாவிரதத்தை விடவில்லை. கடந்த 11 நாட்களாக அவர் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.