தலைநகர் மதுரைதொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மிக மோசமான முறையில் பின்தங்கியுள்ளன. எனவே, மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாநிலத்தை அமைத்தால்தான் மிகவும் பின்தங்கியுள்ள தென் தமிழகம் மேலோங்கி வர முடியும் என்பதை இந்தப் பிரிவினைக்குக் காரணமாக இந்தத் தலைவர்கள் கூறுகிறார்கள். மேலும், தமிழகத்தின் கடைக் கோடியில் உள்ளவர்கள் தலைநகரான சென்னைக்கு வந்து போவதில் ஏற்படும் அலைச்சல்,செலவீனங்கள் உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்களையும் தீர்க்க தமிழகத்தின் தென் மாவட்டங்களை உள்ளடக்கிய தென் தமிழக மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்பதும் இவர்களின் கோரிக்கை.
தமிழகப் பிரிவினைக்குத் தமிழகத்தின் முக்கிய கட்சிகள் எதுவும் பா.ம.க. தவிர இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதால் இந்தக் கோரிக்கை பெரிய அளவில் இதுவரை மேலோங்காமல் உள்ளது. இந்தநிலையில், தெலுங்கானா மாநிலக் கோரிக்கை வெற்றியைத் தொட்டு விட்டதால் தற்போது தமிழகப் பிரிவினைக் கோரிக்கையையும் மீண்டும் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய வட தமிழக, தென் தமிழக மாநிலக் கூட்டமைப்பின் தலைவர்களான சேதுராமனும் நடராஜனும் கூறுகையில்;
காவிரி ஆற்றையொட்டி பகுதிகளை வடக்கில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட வட தமிழகமாகவும் தெற்கில் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட தென் தமிழகமாகவும் பிரிக்க வேண்டும். தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறாமல் அப்படியே உள்ளன. இவற்றை மேம்படுத்த விடுக்கப்பட்ட கோரிக்கைகள் ஆண்டாண்டு காலமாக நிறைவேற்றப்படாமலேயே உள்ளன. பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் சென்னையிலும் சென்னையைச் சுற்றிலும் தான் அமைகின்றன. 18 தென் மாவட்டங்களும் வரட்சி மாவட்டங்களாகவே உள்ளன. இங்குள்ள மக்கள் ஏழ்மையின் பிடியிலிருந்து இன்னும் நீங்காமலேயே உள்ளனர். இவர்களின் பிரச்சினைகளையும் நலன்களையும் இதுவரை இருந்த எந்த அரசுமே தீவிரமாக கவனிக்கவே இல்லை. கண்டுகொள்ளவும் இல்லை. எனவே, தென் மாவட்டங்களை உள்ளடக்கிய தென் தமிழகம் அமைவது அவசியம். கட்டாயம் என்றனர்.