Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தென் மாகாண சபைத் தேர்தல் -ஏமாற்றம்:திஸ்ஸ அத்தநாயக்க

spotlight-15தென் மாகாண சபைத் தேர்தல் முடிவு அரசாங்கத்திற்கு பாரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. 90 வீதமான வாக்குகளைப் பெற்று சரித்திரம் படைப்போம் எனக் கூறிய அரசாங்கத்தின் இந்த சரிவானது எதிர்கால தோல்விக்கான அறிகுறியாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அரசாங்கம் கட்டம் கட்டமாக தேர்தல்களை நடத்தி வந்துள்ளதால் 1300 மில்லியன் ரூபா வீணடிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமல்லாமல் தென் மாகாண சபைத் தேர்தலில் பாரிய அளவு அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார். தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்றது. அதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்து கூறுகையில், ஜனாதிபதியின் குடும்ப அரசியலுக்கும் ஜனநாயகத்திற்கு விரோதமான அரசின் செயற்பாட்டிற்கும் எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். தென் மாகாண மக்களின் இந்தத் தீர்ப்பு ஏனைய மாகாண மக்களுக்கும் தைரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இராணுவ வெற்றியையும் தென் மாகாணத்தில் பல அபிவிருத்தி வேலைத் திட்டத் திட்டங்களையும் முன்வைத்தே அரசாங்கம் இந்தத் தேர்தலில் களமிறங்கியது. இதன் மூலம் பாரிய வெற்றியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் எதிர்பார்த்திருந்தது. ஆனால், எதிர்பார்த்தளவு வாக்குகளை அரசாங்கத்தால் பெற முடியவில்லை. குறிப்பாக ஜனாதிபதி பிறந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக் கொண்ட வாக்குகளை விட இத்தேர்தலில் குறைந்த வாக்குகளே பெறப்பட்டுள்ளன.

ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலரும் இந்தத் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அரசாங்கத்தின் முழுப் பலத்தையும் பிரயோகித்து தேர்தல் பணிகளை முன்னெடுத்து வந்தனர். இதன்போது அமைச்சர் டலஸ் அழகப்பெரும, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உட்பட அமைச்சர்கள் பலரும் அரசாங்கம் 90 வீதமான வாக்குகளைப் பெற்று பாரிய வெற்றியீட்டும் என தொடர்ச்சியாக கூறி வந்தனர். ஆனால், அவர்கள் கூறிய இலக்கை நெருங்கக் கூட முடியாமல் போயுள்ளது.

இந்த மாகாணத்தில் பாரிய அளவு தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. தேர்தல் தினத்தன்று கூட கட்டவுட், பெனர், போஸ்டர் என தேர்தல் விளம்பரங்கள் நீக்கப்படாமல் இருந்தன. 7 ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முடிவடைகின்றன என அறிவிக்கப்பட்ட போதிலும் 9 ஆம் திகதி வரை அரசாங்க தரப்பினர் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறு சட்டத்தை மதிக்காது செயல்படும் இவர்களால் மக்களை சட்டத்தை மதித்து செயல்படுமாறு எப்படிக் கூற முடியும்? மக்கள் இப்போது தெளிவடைந்துள்ளார்கள். தொடர்ந்தும் இவர்களால் மக்களை ஏமாற்ற முடியாது. இவர்களின் ஏமாற்று வித்தைக்கான பரிசினை மக்கள் வழங்குவார்கள். அதற்கான ஆரம்பமே தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள். ஜனாதிபதிக்கு நன்றி செலுத்தும் முகமாக தென் மாகாண மக்கள் 90 வீதமான வாக்குகளை வழங்கி அரசாங்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேட்டிருந்தார். ஆனால், மக்கள் இதனை நிராகரித்துள்ளார்கள். ஜனாதிபதி இந்த மாகாணத்தில் தங்கியிருந்து பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். அது மாத்திரமல்லாமல் அந்தக் காலங்களில் அமைச்சரவை ஒன்றுகூடலையும் தென் மாகாணத்தில் கூட்டியிருந்தார். இதன் மூலம் வீண் செலவுகளை செய்திருக்கின்றார். இந்த ஒன்றுகூடல்களுக்கான தண்ணீர் போத்தல்கள் கூட வானூர்தியின் மூலமே கொண்டு செல்லப்பட்டன. துறைமுகத்தில் தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதாக தென் மாகாணத்தில் இலட்சக்கணக்கான இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவ்வாறான போலி உறுதி மொழிகள் மூலம் பாரிய வெற்றி பெறலாம் என கனவு கண்டது. இதனை இனங்கண்டு கொண்ட மக்கள் அதற்கான தக்க பதிலை வழங்கியுள்ளார்கள். அரசாங்கம் கூறுவதைப் போல மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை. எனவே அரசாங்கம் உடனடியாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும். அதனை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்

Exit mobile version