‘பணிச் சூழலை மேம்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு வேண்டும், பணிக்கு இடையே ஓய்வு நேரத்தை மாற்றக் கூடாது’ என்று பல்வேறு தொழிற்சங்க கோரிக்கைகளை முன் வைத்து இந்த வேலை நிறுத்தங்கள் நடக்கின்றன.
இதனால் தென் ஆப்பிரிக்காவின் முதலாளிகள் கதிகலங்கி போயிருக்கின்றனர். சிலர் யூனியன்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கின்றனர். சில நிறுவனங்கள் வேலைக்குத் திரும்பா விட்டால் வேலை நீக்கம் செய்து விடுவதாக தொழிலாளர்களை மிரட்டுகின்றனர்.
உலகின் நான்காவது பெரிய தங்க உற்பத்தி நிறுவனம் கோல்ட் பீல்ட்ஸ் ஜோகன்னஸ்பர்குக்கு அருகில் இருக்கும் கேடிசி கிழக்கு சுரங்கத் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பா விட்டால் வேலை நீக்கம் செய்யப் போவதாக மிரட்டியிருந்தது. தொழிலாளர்கள் உறுதியாக நிற்கவே, செவ்வாய்க் கிழமை (அக்டோபர் 23ம் தேதி) 8,500 தொழிலாளர்களுக்கு வேலை நீக்க நோட்டிசை அனுப்பியிருக்கிறது.
கூடவே தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு போலீஸ் படையையும் குவித்திருக்கிறது நிர்வாகம். “இதற்கு மேல் தாங்க முடியாது என்று நிலைமையை நாங்கள் அடைந்து விட்டோம். நிலவரத்தை கவனமாக அவதானித்து வருகிறோம். தேவைப்பட்டால் பயன்படுத்துவதற்காக போலீஸ் படையையும் குவித்துள்ளோம். ஆனால் நிலைமை அமைதியாகவே இருக்கிறது” என்கிறார் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஸ்வென் லுன்ஷெ..
இன்னொரு தங்கச் சுரங்க நிறுவனம் ஹார்மனி கோல்ட் வியாழக் கிழமைக்குள் வேலைக்குத் திரும்பும்படி தனது தொழிலாளர்களுக்கு கெடு விதித்திருக்கிறது. குசாசலேது சுரங்கத்தின் 5,400 தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தினால் 13,000 அவுன்ஸ் தங்க உற்பத்தி பாதிக்கப்பட்டதாக புலம்பியிருக்கிறது.
உலகின் மூன்றாவது பெரிய தங்க உற்பத்தியாளர் ஆங்கிலோ கோல்ட் அஷாந்தி நிறுவனம் தொழிலாளர்களுக்கு விதித்த கெடு புதன் கிழமை முடிவடைகிறது. ‘தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்புவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன’ என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஸ்டூவர்ட் பெய்லி பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார். ‘கோபனாங்க், கிரேட் நோலிக்வா என்ற இரண்டு சுரங்கங்களிலும் வேலை பார்க்கும் பெரும்பான்மை தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பி விட்டதாகவும் அந்தச் சுரங்கங்களில் உற்பத்தி வழக்கமான நிலையை எட்டி விட்டதாகவும், புதன் கிழமை 24,000 தொழிலாளர்களில் பாதி பேர் வேலைக்குத் திரும்பி விடுவார்கள்’ என்றும் அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அள்ளி விட்டிருக்கிறார்.
ஆனால், முதலாளிகளின் மிரட்டலுக்குப் பணிந்து விடாமல் தொழிலாளர்கள் உறுதியாக போராட்டத்தை தொடர்கின்றனர்.
உலகின் மிகப்பெரிய பிளாட்டினம் உற்பத்தியாளரான ஆங்கில அமெரிக்க பிளாட்டினம் (ஆம்பிளாட்ஸ்) தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் ரஸ்தன்பர்க் சுரங்கங்கள் செப்டம்பர் 12ம் தேதி முதல் மூடப்பட்டிருக்கின்றன. தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வதாக மிரட்டியிருந்த நிர்வாகம் தொழிலாளர்களை மறுபடியும் வேலைக்கு அமர்த்துவதைக் குறித்து பேச்சு வார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகச் சொல்லியிருக்கிறது.
டொயோட்டா மோட்டார் நிறுவனத்தின் இருக்கைகளும் கதவு பாகங்களும் உற்பத்தி செய்யும் டொயோடா போஷோகுவில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் காரணமாக நாட்டில் டொயோட்டா கார் உற்பத்தி அக்டோபர் 17 முதல் தடைப்பட்டிருக்கிறது. நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து யூனியனுடன் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறது.
செவ்வாய்க் கிழமை (அக்டோபர் 23) அன்று கிழக்கு கேப்பில் உள்ள குட் இயர் டயர் தொழிலாளர்கள் ஓய்வு நேரம் குறித்த நிறுவனத்தின் புதிய கொள்கையை எதிர்த்து வேலை நிறுத்ததில் இறங்கியிருக்கிறார்கள்.
இதற்கிடையில் ஆகஸ்ட் 16ம் தேதி மரிக்கானாவில் நடந்த துப்பாக்கிச் சூடு பற்றி விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஆணையம் அந்நிகழ்வு தொடர்பான வீடியோவை பார்வையிட்டது. இறந்தவர்களின் உறவினர்கள் வீடியோ பதிவைப் பார்த்து கதறி அழுதனர்.
தென் ஆப்பிரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களுக்கு ஆளும் வர்க்கத்தின் கொடூர முகத்தை அம்பலப்படுத்தி உறுதியாகப் போராட வேண்டியதன் அவசியத்தை உணர்த்திய சம்பவம் அது.
முதலாளிகளின் சுரண்டலும், அடக்குமுறையும் முன்னெப்போதையும் விட அதிகரித்து வரும் இன்றைய நிலையில் தொழிலாளர்கள் போர்க்குணமிக்க போராட்டத்தை தொடுக்க வேண்டும் என்ற அனுபவத்தை தென் ஆப்ரிக்க வேலை நிறுத்தப் போராட்டம் உணர்த்துகிறது.