Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

துரோகிகளக்கப்பட்ட விக்னேஸ்வரனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் தியாகிகளான கதை

விக்னேஸ்வரனின் குடும்பத்கோடு விக்கி
விக்னேஸ்வரனின் குடும்பத்கோடு விக்கி

புலிகளின் பிடிக்குள் முடக்கப்பட்டிருந்த காரணத்தால் தம்மைப் போன்றவர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சுதந்திரமாக அரசியல் நடத்த முடியவில்லை என்று கூறிக்கொண்டு அரசியலில் நுளைந்த நீதிபதி விக்னேஸ்வரன் புலம்பெயர் மற்றும் தென்னிந்திய புலி ஆதரவாளர்களுக்கு கடைந்தெடுத்த துரோகியாகத் தெரிந்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் குடும்ப உறவுகளிலிருந்து சமயப் பற்று வரைக்கும் இணையவெளியில் இழுத்துவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

விளம்பரங்களில் கிடைக்கும் வருமானத்திற்காக நடத்தப்படும் தமிழ்த் தேசிய அரசியல் வியாபார இணையங்களிலிருந்து ப்ளோக்குகள் வரைக்கும் விக்னேஸ்வரனை ‘சிங்களத்தின்’ தூதுவராகவே விம்பத்தைக் கட்டியமைத்தது.

இதே விக்னேஸ்வரன் தனது உறவினரான வாசுதேவ நாணயக்காரவுடன் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட போது அவருக்கு மரணதண்டனையே விதித்துவிட்டார்கள்.
விக்னேஸ்வரன் முன்வைக்கும் அரசியல் என்ன, அவர் எந்த வர்க்கத்திற்குச் சேவை செய்கிறார் என்ற எந்த வகையான ஆய்வுகளுமின்றி வெறுமனே உணர்ச்சிவயப்பட்ட சுலோகங்கள் அப்பாவி மக்களைத் தவறாக வழி நடத்தின.

இதேபோலத் தான் ஈழதில் நடப்பது பயங்கரவாதப் போராட்டம் அது அழிக்கப்பட வேண்டும் எனக் கூறி 1991 ஆம் ஆண்டு ஆட்சிக்குவந்த ஜெயலலிதா ஈழப் போராட்டத்தில் பின்னடவை ஏற்படுத்தி ஈழ ஆதரவாளர்களைச் சிறைப்பிடித்த போது துரோகியாக்கப்பட்டார்.

இந்திய இராணுவம் இலங்கையில் தரித்திருந்து கொலைவெறியாட்டம் நடத்திய போது அதன் துணைக்குழுத் தலைவர்களில் முக்கியமானவராகவிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் நீண்டகால வரலாற்றுத் துரோகியானார். மண்டையன் குழு என்ற பெயரில் பிரேமச்சந்திரன் நடத்திய வெறியாட்டத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மரணித்துப் போயினர். பின்னதாக மகிந்த ராஜபக்ச மின்பிடி அமைச்சராகவிருந்த காலத்தில் அவரது அமைச்சில் இணைப்பாளராகப் பணியாற்றினார். இக் காலங்களிலெல்லாம் சுரேஷ் மரணதண்டனைக்குரிய குற்றவாளி.

இந்த மூவருமே இன்று தமிழ்த் தேசியவாதிகள் எனத் தம்மை அழைத்துக்கொள்பவர்களின் கடவுள்கள். புலிகளின் பெயராலும், பிரபாகரனின் பெயராலும் தமிழ்த் தேசியக் கோவிலில் இவர்கள் முன்னிலையில் தான் அர்ச்சனை செய்யப்படுகின்றது.

இவர்கள் புலம்பெயர் நாடுகளை நோக்கி அரோகராப் போடுகிறார்கள்.

இவர்களின் முன்னைய செயலுக்காக ‘பெரும்தன்மையுடன்’ மன்னிப்பளித்த புலம்பெயர் தமிழ்த் தேசியப் பிழைப்புவாதிகள் இன்றயை மக்கள் விரோதச் செயற்பாடுகளையும் கண்டுகொள்வதில்லை.
மகிந்த ஆட்சியிலிருக்கும் போது வராத தேசிய உணர்வு மைத்திரி ஆட்சியில் விக்னேஸ்வரனுக்கு வந்த மர்மம் அவரின் குருவான பிரேமனந்தாவின் அருளா என்ற கேள்விகூடத் தமிழ்த் தேசியப் பிழைப்புவாதிகளுக்கு எழவில்லை.

சுன்னாகம் அனல் மின் நிலையத்திலிருந்து யாழ் குடாநாட்டின் ஒரு பகுதியை நஞ்சாக்கி அழித்த கிரிமினல்களை ஆர்பாட்டமில்லாமல் காப்பாற்ற முனைந்த விக்னேஸ்வரனை இன்னும் தமிழ்த் தேசியவாதிகள் மன்னித்துவிட்டார்கள். யாழ்ப்பாணம் என்ன வடக்குக் கிழக்கு முழுவதுமே அழிக்கப்பட்டாலும் தமிழ்த் தேசியப் பிழைப்பிற்கு ஏற்ற சில உணர்ச்சி வார்த்தைகளை முழங்கினால் விக்கி தியாகிதான். அரசியலுக்குள் நுளைந்து சில ஆண்டுகளுக்கு உள்ளாகவே விக்கியும் எப்படிப் பிழைப்பது எனக் கற்றுக்கொண்டார் போலத் தெரிகிறது.

மண்டையன் குழுவின் போர்க்குற்றங்களை மன்னித்த தமிழ்த் தேசியப் பிழைப்புவாதிகள், சுரேஷ் பிரேமச்சந்திரனின் இந்திய அரச தொடர்புகள் குறித்தும் தமிழ் நாட்டில் அவருக்குள்ள சொத்துக்களின் உள்ளடக்கம் பற்றியும் கிஞ்சித்தும் சிந்திக்காமல் மன்னித்து தமிழ் தேசியவாதிகளாக்கிவிட்டார்கள்.

அம்மா கசிப்பு, அம்மா தேசியம் என்ற அனைத்திற்கும் பின்னல் ஈழ எதிர்ப்பே காணப்பட்டதைக்கூட ஈழ ஆதரவாளர்கள் மன்னித்துவிட்டர்கள். அம்மா அகதிகள் முகாமில் வாடும் ஈழத் தமிழர்களைகூட அவர்கள் கண்டுகொள்வதில்லை.
இவர்கள் அனைவரும் தீர்மானங்களை நிறைவேற்றுவார்கள், அறிக்கைகள் விடுத்து தமது பீஆர் ரேட்டிங் ஐப் பேணிக்கொள்வார்கள்.
ஆக, இவர்கள் அனைவரதும் பின்னால் எந்த அரசியல் உள்ளது என்பதையும், அது யாருக்குச் சேவகம் செய்கிறது என்பது பற்றியும் தமிழ்த் தேசியப் பிழைப்புவாதிகள் துயர் கொள்வது கிடையாது, அமெரிக்கனாகட்டும், ஆனயிறவானாகட்டும் தமது பிழைப்பிற்கு அவர்களின் திருவாய் மலர்ந்தருள்கிறதா என அணில் ஏறவிட்டதைப் போன்று காத்திருக்கும் தமிழ்த் தேசியவாதிகள் எமது சமூகத்தின் சாபக்கேடுகள்.
இந்த நிலையில் மாவை சேனாதிராசாவிற்கு விக்னேஸ்வரன் எழுதிய துண்டுக்கடிதத்திற்காக விக்னேஸ்வரனை மறுபடி தியாகியாக்கி சமூக வலைத் தளங்களிலும் இணையங்களிலும் தமிழ்த் தேசியப் பிழைப்புவாதிகள் ‘பஞ்ச் டயலாக்’ வீசத் தொடங்கியுள்ளனர்.

‘தமிழ்த் தேசியத்துக்காக உழைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை உணர்வும், அர்ப்பணிப்பு தன்மையும் தேர்தல் காலங்களில் மட்டுமல்லாமல் என்றும் நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்’
என விக்னேஸ்வரன் கூறியிருப்பதே இதற்கு தலையாய காரணம்.
மாவை சேனாதிராசாவிற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் ஏணிவைத்தாலும் எட்டாத நிலை வந்து நாளாகிவிட்டது. அப்படியானால் விக்னேஸ்வரனின் தமிழ்த் தேசியம் என்ன? அடிப்படையில் தேசியம் என்பது அன்னியப் பொருளாதாரத்திற்கும், பல்தேசிய ஆக்கிரமிப்பிற்கும், ஏகாதிபத்திங்களுக்கும், அன்னியத் தலையிட்டிற்கும், பெருந்தேசிய ஒடுக்குமுறைக்கும் எதிரான கோட்பாடு. விக்னேஸ்வரனோ இவை அனைத்திற்கும் எதிரானவரல்ல. தமிழ்த் தேசியப் பிழைப்புவாதிகளுக்கும் ஏகாதிபத்திய ஒட்டுக்குழுக்களுக்கும் தீனி போடும் வெற்று அறிக்கைகள் மட்டுமே விக்னேஸ்வரனின் தேசியம்.

விக்னேஸ்வரனின் துண்டுக் காகிதத்தின் இறுதிப்பகுதியும் கவனிக்கத்தக்கது.: ‘மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நிதி ஒதுக்கீடு பற்றி அந்தந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்க முன்வரவேண்டும் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தும், ஏனையோர் அது பற்றி இன்னமும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்காதது கவலையளிக்கிறது. மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுரேஸ் பிரேமச்சந்திரனைப் போல்; வெளிப்படையாக தமது நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிக்க முன்வரவேண்டும்’

இந்த இறுதிப் பகுதியை ஆழமாகச் ஆராய்ந்தால் தமிழ்த் தேசியம் இந்திய எல்லைகளுக்குள் உட்படதான சந்தேகம் தவிர்க்கமுடியாதது.

சுய நிர்ணைய உரிமைப் போராட்டத்திற்கான அரசியல் திட்டம் ஒன்று மக்கள் சார்ந்து முன்வைக்கப்படும் வரை பிழைப்புவாதிகளின் இன்றைய கூட்டு தொடரும். மக்கள் வாழ்வில் இருண்டகாலம் மேலும் தொடரும்.

Exit mobile version