Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

துயர் பகிர்வும், இடர் களைவுக் கோரிக்கையும் : தமிழ் சிவில் சமூக அமையம்

maliyagamநேற்று முன்தினம் கொஸ்லந்தைப் பகுதியில் நிகழ்ந்த இயற்கை அனர்த்ததில் பலியான மலையகத் தமிழ் உறவுகளுக்கு எமது இரங்கல்களைத் தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வனர்த்ததினால் பாதிக்கப் பட்ட அனைவருக்கும் எமது அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அவர்களின் துயரத்திலும் உணர்வு பூர்வமாகப் பங்கேற்கிறோம்.

இலங்கையின் பொருளாதாரத்தைத் தாங்கியிருக்கும் மலையகத் தமிழ்ச் சமூகம் இரட்டை அடக்கு முறைக்கு உள்ளாகி வரும் ஒரு சமூகமாகும். உழைக்கும் வர்க்கமாகக் கடுமையான பொருளாதாரச் சுரண்டலுக்கு உட்பட்டுள்ள இச் சமூகம், அதற்கு மேலதிகமாக கொடூரமான இன ஒடுக்கு முறைக்கும் உள்ளாகி வருகிறது. சுதந்திர இலங்கையின் முதலாவது இன ஒடுக்கு முறை, பிரசாவுரிமைச் சட்டம் எனும் வடிவத்தில் இவர்கள் மீதே பிரயோகிக்கப் பட்டது. காலத்திற்குக் காலம் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக் கலவரங்களிலும் இவர்களின் உயிர்கள் கொத்துக் கொத்தாகப் பறிக்கப் பட்டன.

ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வரும் ஒரு சமூகம் என்ற வகையில், மலையக மக்களின் துன்ப துயரங்களை நாங்கள் ஆத்மார்த்தமாகப் புரிந்து கொள்கிறோம். அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்த மலையக மக்களின் வாழ்க்கையில், இவ்வியற்கை அனர்த்தம் ஒரு பேரவலத்தை விளைவித்துள்ளது. இப் பேரவலத்திலிருந்து அவர்களது ஆன்மாவில் உறைந்துள்ள உறுதியினால் மீண்டெழுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

அதேவேளை மலையகத் தமிழ் சமூகம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தினது பாராமுகத்தன்மையை இங்கு சுட்டிக்காட்டி இம்மக்களது வாழ்வாதார மேம்பாட்டிற்கு வழி செய்ய வேண்டிய அரசாங்கத்தினது கடமையை வலியுறுத்த விரும்புகிறோம். இன்னும் மலையக தமிழ் அரசியல் சக்திகள் சுயநலம் தவிர்த்து தம்மக்களது உண்மையான மேம்பாட்டிற்காக உழைக்க வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எம்மைப் போலவே அடக்குமுறைகளுக்குள் வாழ்ந்து மலையகத் தமிழ் சமூகம் இயற்கை அனர்த்ததினாலும் பாதிக்கப் பட்டுள்ள இந்த வேளையில், அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டிய தார்மீகப் பொறுப்பு எமக்கு உள்ளது. இவர்களுக்கான அவசர, மனிதாபிமான உதவிகளை ஒழுங்கு படுத்துவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனத் தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாம் வேண்டிக் கொள்கிறோம். முன்பும் இவ்வாறான வேளைகளில் மனிதாபிமானப் பணிகளை ஒருங்கிணைத்து நடாத்திச் சென்ற பல்கலைக் கழக சமூகம், இம்முறையும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க ஆரம்பித்திருப்பதை நாம் வரவேற்று, அவர்களுடன் எமது கரங்களையும் இணைத்துக் கொள்கிறோம். இப்பணியில் யாழ். பல்கலைக் கழக சமூகத்துடன் இணைந்து செயற்படுமாறு அனைத்துத் தமிழ் மக்களையும் நாம் வினயமாக வேண்டிக் கொள்கிறோம்.

தமிழ் சிவில் சமுக அமையம் சார்பாக
அதிவணக்கத்திற்குரிய இராயப்பு யோசப் { பேராயர் மன்னார் மறைமாவட்டம்}
31/10/2014

ஒரு சில கணங்களுக்குள் இலங்கை வரைபடத்திலிருந்து காணாமல் போயுள்ள கிராமம் : எம்.ரிஷான் ஷெரீப்

Exit mobile version