Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தீவிரவாத அச்சுறுத்தல் என பொய் சொல்லி விட்டது ராஜஸ்தான் அரசு : ருஷ்டியின் புதிய சர்ச்சை

தன்னை கொல்ல மும்பை நிழல் உலக தாதாக்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக ராஜஸ்தான் பொலிஸார் பொய் சொல்லியிருக்கலாம் என எழுத்தாளர் சல்மான் ருஷ்டி குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொள்ளவிருந்தார் சல்மான் ருஷ்டி. ஆனால் அவருக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் வருவதைத் தவிர்க்குமாறு ராஜஸ்தான் அரசு ருஷ்டியைக் கேட்டுக் கொண்டது.

இதையடுத்து தனது பயணத்தை ரத்து செய்தார் ருஷ்டி. இந்த நிலையில், ராஜஸ்தான் அரசு பொய் சொல்லி தன்னை ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் ருஷ்டி
சர்ச்சைகளும் பரபரப்புமாக வாழ்தலும் அதனையே மூலதனமாக்கிக் கொள்வதும் சல்மான் ருஷ்டியின் வழமை. புதிய சர்ச்சையை தனது பல்தேசிய எழுத்து வியாபாரத்திற்காக சல்மான் ருஷ்டி பயன்படுத்திக்கொள்வார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் மூலம் வெளியிட்டுள்ள செய்தியில், எனக்கு மிரட்டல் இருப்பதாக வந்தது குறித்து நான் விசாரித்துப் பார்த்தேன். ஆனால் அப்படி எதுவும் இல்லை என்று தெரிய வந்தது. நான் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன். பொய் சொல்லி விட்டனர். இதனால் நான் மிகவும் கோபமாகவும், வெறுப்புடனும் உள்ளேன் என்று கூறியிருந்தார் ருஷ்டி.
ஆனால் இதற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையி்ல், அது தவறு, அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அவரது பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தோம். அது எங்களது கடமை. ஆனால் மத்திய அரசிடமிருந்து தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பாக தகவல் வரும்போது அதை நாங்கள் உதாசீனப்படுத்த முடியாது.
ருஷ்டி, இந்தியாவைப் பூர்வீமாகக் கொண்டவர். எனவே அவர் இந்தியாவுக்கு வர விசா தேவையில்லை என்றார் கெலாட்.

Exit mobile version