Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தீவிரமடையும் மாணவர் போராட்டங்கள் : புதிய நம்பிக்கை

இலங்கையில்  தீவிரமடையும்  மாணவர் போராட்டங்களில், இதுவரை 28 மாணவர்கள் வரை சிறை வைக்கப்படுள்ளனர். இனிமேலும் போராட்டம் தொடருமானால் 1000 மாணவர்கள் வரை சிறையில் அடைத்துவைக்க தமக்கு வலுவிருப்பதாக இலங்கை உயர்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெரும் எண்ணிக்கையிலான பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (15) மதியம் கலஹா சந்தியின் பிரதான வீதியில், டயர்களை எரியூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பில் மாணவர்கள் மீது காவற்துறையினர் நடத்திய தாக்குதல், பேராதனை பல்கலைக்கழகத்தை சேர்ந்த 4 மாணவர்களை கைதுசெய்து தடுத்து வைத்துள்ளமை ஆகியவற்று எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கைப் பொலீஸ் மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலில் 19 மானவர்கள் காயங்களுக்கு உள்ளாக்கப்படு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர் உரிமைகளுக்காக மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் கைவிடப்பட மாட்டாதென அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் உதுல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.

ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்வதற்கும் அரசாங்கம் தயங்கப் போவதில்லை என உயர்கல்வி அமைச்சர் சூளுரைத்துள்ளதாகவும், மாணவர் உரிமைகளை வென்றெடுப்பதற்காக பத்தாயிரம் மாணவர்கள் தங்களை அர்ப்பணிக்கத் தயாராக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு மருதானை சமூக கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்கும் எஸ்.பி. திஸாநாயக்கவின் முயற்சிகளுக்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரிமைக்காக குரல் கொடுக்கும் மாணவர்களை சிறையில் அடைப்பதன் மூலம் போராட்டங்களை தடுத்து நிறுத்த முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைப் போராட்டம் குறித்தும், அரச அடக்குமுறை குறித்தும் அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினரின் கருத்துக்கள் சிங்கள இளைஞர்கள் மத்தியில் புதிய மாற்றங்களுக்கான சிந்தனை தோன்றியிருப்பதான நம்பிக்கையைத் தருவதாக உள்ளது.
சிங்கள் – தமிழ் மாணவர்களின் ஒன்றிணைவைத் தடுப்பதற்காக இலங்கை அரச ஊடகங்கள் அவதூறுப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. இது குறித்து முன்னதாகக் கருத்து வெளியிட்ட உதுல் இவற்றை நம்ப வேண்டாம் என்றார். யாழ்ப்பாணம் சென்ற போது தமிழ் மாணவர்கள் தம்மைத் தாக்கியதாக வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.
ஆட்சி மாற்றத்திற்கான கருவியாக இந்தப் போராட்டங்கள் பயன்படும் அபாயம் காணப்பட்டாலும், பேரினவாதத்திற்கு எதிரானதாகவும், குறுந்தேசிய வாதப் போக்குகளுக்கு எதிராகவும் மாணவர் உரிமைக்கான போராட்டமாக இப்போராட்டங்கள் வளர்ந்து செல்வது நம்பிக்கை தருகின்றது.

Exit mobile version