Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தீவிரமடையும் இலங்கை அரசு – ஈ.பி.டி.பி முரண்பாடு!

ஈபிடிபி அரசாங்கத்திற்கு கறையை ஏற்படுத்துவதாக யாழ்ப்பாண படைக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.
இந்துக்கல்லூரி மாணவன் கபிலநாத் படுகொலை தொர்பாக சந்தேகத்தின் பேரில் சாவகச்சேரி பொலிஸாரினால், ஈ.பி.டி.யின் தென்மாராட்சி இணைப்பாளர் அலெக்சாண்டர் சூசைமுத்து எனும் சார்ள்ஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வழக்கு தொடர்பாக சாவகச்சேரி நீதிவான் கே, பிரபாரகரனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிறுத்தப்படுவார் என, யாழ்ப்பாண கட்டளைத் தளபதி,தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தி ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது கருத்து தெரிவித்த அவர், மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு கறை சேர்க்கும் நடவடிக்கைகளை ஈபிடிபி மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அரச துணைக் குழுவாகச் செயற்பட்டுவந்த ஈ.பி.டி.பி அமைப்பிற்கும் அரசிற்கும் இடையேயான இந்த முரண்பாடு பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தமிழ்க் கட்சிகளை சுதந்திரக் கட்சியோடு இணையுமாறு மகிந்த குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்து வந்தது தெரிந்ததே. யாழ்பாணத்தில் நடைபெறும் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவங்கள் இந்த முரண்பாட்டுடன் தொடர்புடையவையா என பலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கை இந்திய அரசுகள் பேச்சுநடத்தி வருவது அறியப்பட்டதே.

Exit mobile version