Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தீக்குளிப்பது தீர்வல்ல : புதிய பெறுமானம் தேவை

maniபோர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்ச மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழகத்தில்  தீக்குளித்தவர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீக்குளித்த மணி, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இரவு 8.45 மணி அளவில் உயிரிழந்தார்

கடலூர் ஆட்சியர் அலுவலம் முன்பு சமூக ஆர்வலரான தீக்குளித்த நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர் தீக்குளித்ததால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்சவைப் போர்க்குற்றவாளியாக அறிவிப்பதற்கு உலகத்தின் கடைந்தெடுத்த ஏனைய போர்க்குற்றவாளிகள் முன்வரமாட்டார்கள். மகிந்த ராஜபக்ச போன்ற இனக்கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். உலகத்தில் இன்னொரு மனிதன் லட்சக்கணக்கில் மனித உயிர்களைப் பலியெடுத்துவிட்டு சுதந்திரமாக நடமாடக்கூடாது என்பதற்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இன்னொரு பாசிஸ்ட் மனிதர்களைக் கொல்வதற்கு அஞ்சவேண்டும் என்பதற்காக ராஜபக்ச குடும்பம் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

இது தமிழ்ப்பேசும் மக்களின் உரிமையை வெற்றிகொள்வதற்கான எந்த அடிப்படையையும் தந்துவிடாது. ராஜபக்சவிற்குப் பதிலாக மற்றொரு பேரினவாதி பிரதியிடப்படலாம். இலங்கையில் மக்கள் பற்றுள்ள தலைவர்களுக்குத்தான் பற்றாக்குறை. பேரினவாதிகளும், நயவஞ்சகர்களும் அணிவகுத்து நிற்கிறார்கள்.

தீக்குளிப்பது போன்ற உணர்ச்சிவயப்பட்ட தற்கொலைகள் எந்தப் பலனையும் தரப்போவதில்லை. வேண்டுமானால் இன்றைய சூழலில் சில ஏகபோக அரசுகளின் தலையீட்டை வலுவாக்கலாம்.

திடீர் உணர்ச்சிகளூடான போராட்டங்கள் இதுவரை தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ளன. மக்களை அணிதிரட்டுவதும், நேர்த்தியான அரசியல் வேலைத்திட்டத்தை சுயநிர்ணய உரிமையை கோரிக்கையை நோக்கிய போராட்டத்தை அடிப்படையாகக்கொண்டு வகுத்துக்கொள்வதற்கு மணிபோன்ற தியாகிகளின் பங்களிப்பு அவசியமானது.

இந்தியா முழுவதும் பரந்திருக்கும் ஜனநாயக முற்போக்கு சக்திகளும், மனிதாபிமானிகளும் ராஜபக்சவை மட்டுமல்ல தமது முற்றத்திலேயே நரேந்திர மோடி போன்ற இனக்கொலையாளிகளைப் பார்த்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரோடும் இணைந்த உலக மக்களின் போராட்டம் ராஜபக்ச போன்றோரை அரசியல் அரங்கிலிருந்து அகற்றி மக்கள் மன்றத்தில் மரணதண்டனை வழங்கும். ஈழப்போராட்டத்தில் கடந்த 30 வருடங்களாக நிரப்பப்படாமலிருக்கும் அரசியலை மக்களை அணிதிரட்டுவதற்கான ஐக்கிய முன்னணியிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

Exit mobile version