தீபம் தொலைக்காட்சியின் உரிமையாளரான துரைசாமி பத்மநாபன் பணமோசடி வழக்கில் கைதானதன் பின்பு அத் தொலைக்காட்சி சேவை நெருக்கடிக்கு உள்ளானது. பிரித்தானிய மில்லியேனேர்களில் ஒருவரான பத்மநாபன், அவரது நிறுவனங்களின் முன்னைநாள் விற்பனை முகாமையாளர் மயூரன் குகதாசன் ஆகியோர் பின்னதாக பணமோசடிக் குற்றச்சாட்டுக்களுடன் விடுதலையாகினர். அவர்கள் மீதான வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் அவர் பிரித்தானியாவில் வியாபார நிறுவனங்களை நடத்துவதற்கான உரிமை தடைசெய்யப்பட்டது. இதனால் தீபம் தொலைக்காட்சி நோர்வேயிலுள்ள மக்களவையைச் சார்ந்த உறுப்பினர்களால் பொறுப்பேற்கப்பட்டது.
கடந்த நான்கு மாதங்களாக இவர்களது பொறுப்பில் இயங்கிவரும் தீபம் தொலைக்காட்சி நூற்றுக்கணக்கான சந்தாதாரர்களைக் கொண்டது. ஏறக்குறைய முப்பது ஊழியர்களைக் கொண்ட தீபம் தொலைக்காட்சி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான ஊதியத்தை இதுவரை வழங்கவில்லை எனத் தெரியவருகிறது. தொலைக்காட்சி ஊழியர்கள் தமது உழைப்பிற்கான பணத்தைக் கோரியபோது நிர்வாகத்தினர் தம்மிடம் பணம் இல்லை எனத் கைவிரித்துள்ளனர். அதே வேளை சட்டரீதியாக நிறுவனத்தை மூடும் நடவடிக்கை எதனையும் தொலைக்காட்சி நிறுவனம் மேற்கொள்ளவில்லை எனவும் தெரியவருகிறது.
இதனிடையே தமிழ் நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் புதிய தலைமுறை தொலைக்காட்சியைப் புலம் பெயர் நாடுகளில் தீபம் ஊடாக ஒளிபரப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதன் எதிரொலியாகவே ஊதியங்கள் வழங்கப்படவில்லை எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
1969-ல் மேற்கு மாம்பலத்தில் எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேள் என்ற பெயரில் துவங்கப்பட்ட ஒரு பிரைமரி ஸ்கூல் இன்று தமிழகத்தின் மாபெரும் கல்வி சாம்ராஜ்ஜியமாக வளர்ந்தது எப்படி? இதற்கான பதிலில்தான் பச்சைமுத்து பாரிவேந்தரான கதையும் ஒளிந்திருக்கிறது.
மொத்தம் 43 வருடங்கள்… பச்சைமுத்து குடும்பம் கொள்ளையடித்திருப்பதோ பல லட்சம் கோடி ரூபாய். இரண்டு தலைமுறைகளாக தமிழ்நாட்டு நடுத்தர வர்க்கத்து பெற்றோர் சம்பாதித்துக் கொட்டிய பணம்தான் காட்டாங்கொளத்தூரில் பிரமாண்ட கட்டடங்களாக எழும்பி நிற்கின்றன. கொஞ்சநஞ்சமில்லை… ஒரு பொறியியல் சீட்டுக்கு 20 லட்சம், மெடிக்கல் சீட்டுக்கு 80 லட்சம், எம்.பி.ஏ. சீட்டுக்கு 15 லட்சம்… என நினைத்துப் பார்க்க முடியாத கல்விக் கொள்ளை. அண்மை வருடங்களாக சென்னையை தாண்டி தமிழகம் எங்கும், தமிழகத்தை தாண்டி இந்தியாவெங்கும் தனது வியாபாரத்தை விரித்திருக்கிறது எஸ்.ஆர்.எம். குழுமம்
பல தமிழினவாதிகள், இலங்கை பிரச்னை, மூவர் தூக்கு போன்றவற்றில் புதிய தலைமுறை தமிழர் நலன் சார்ந்து இயங்குவதாக சொல்கின்றனர். அப்படி குறிப்பாக சொல்லாதவர்கள் கூட, ‘அவங்க நல்லா பண்றாங்க, பரவாயில்லை’’ என்கிறார்கள். சமீபத்தில் எஸ்.ஆர்.எம். குழுமம் இலங்கையில் ‘எஸ்.ஆர்.எம். லங்கா’’ என்ற பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட செய்தி ஆதாரத்துடன் அம்பலமானது.
புதிய தலைமுறையின் புலம்பெயர் வருகை உண்மையானதாயின் அது ஆபத்தானதும் கூட..
ஈழத் தமிழர்களின் உணர்வுபூர்வமான தேசியப் பிரச்சனை மனிதாபிமானமற்ற அவமானகரமான வியாபாரப் பொருளாக மாற்றமடைந்துள்ளது. பிரித்தானியாவிலிருந்து இயங்கிவந்த தீபம் தொலைக்காட்சி சேவை ஏதோ மாற்றங்களை உருவாக்கிய ‘புரட்சிகர’ தொலைக்காட்சியல்ல. ஆயினும் ‘புதிய தலைமுறையின்’ ஊடாக இலங்கை இந்திய உளவுத்துறைகள் சீரழிந்துபோன புலம்பெயர் தமிழ்த் தேசிய அரசியலைக் கையகப்படுத்த முயற்சிக்கின்றனவா என்ற சந்தேகம் எழுவது இயல்பானதே.
பிரித்தானிய சட்ட வரைமுறைகளுக்கு ஒப்ப சட்டப்படி வேலை நீக்கம் செய்யப்படுகிறன்வர்கள் தமது வாழ்க்கைக்கான அடிப்படை உதவித் தொகையாக வேலையற்றோருக்கான சமூக உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள இயலும். தீபம் தொலைக்காட்சி ஊழியர்களை சட்டரீதியாக வேலை நீக்கம் செய்யாதிருப்பதால் அவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாத நிலையிலுள்ளனர். மாதந்த ஊதியத்தையே நம்பி வாழ்க்கை நடத்தும் கடன் கலாச்சார்த்துள் மூழ்கியுள்ள பிரித்தானிய சமூகத்தில் ஒரு மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாமை என்பது குடும்பங்களின் வாழ்க்கையில் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.