Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திருமுறிகண்டியில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மக்கள் போராட்டம்

இராணுவம், காவற்றுறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் என அரச இயந்திரத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியது.

திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயச் சூழலில் காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கு கொண்டு தமிழர் நிலம் வன்பறிக்கப்படுவதற்கு எதிராக ஆர்ப்பரித்து வருகின்றனர்.

“நாம் கேட்பது எமது உரிமை
அது கிடைக்கும் வரை ஓய மாட்டோம்”

“எமது பூர்வீகத்தை அசிங்கப்படுத்தாதே”

“போர் முடிந்து மூன்றாடுகள் ஆகிவிட்டது.
இன்னும் எம் நிலத்தில் இராணுவமா?”

“சொந்த மண்ணில் அகதிகளாக நாம்”

“நிறுத்து நிறுத்து ஆக்கிரமிப்பை நிறுத்து”

எனப் பலகோஷங்கள் எழுப்பியவாறு கவனயீர்ப்பில் பங்கு கொண்டோர் ஆர்ப்பரித்தனர்.

பொதுமக்கள் எவரும் போராட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என அச்சுறுத்தும் வகையில் இன்று காலை முதல் ஆலயச் சுற்றாடலில் படையினர், காவற்றுறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் என பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்தனர். அதனையும் மீறியே பொதுமக்கள் திரண்டுள்ளனர்.

அத்துடன், பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரிடம் படையினரும் காவற்றுறையினரும் அவர்களுடன் புலனாய்வாளர்களும் சென்று அச்சுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. போராட்டம் ஆலய முன்றலில் நடைபெற்றால் ஆலய நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என அவர்கள் மிரட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version