இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று தனது போராட்டத்தைக் கைவிட்டார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவருக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
இலங்கையில் போரை நிறுத்தி அப்பாவி தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கடந்த 15ஆம் தேதி சென்னை அருகிலுள்ள மறைமலை நகரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கினார்.
தொடர்ந்து 4ஆவது நாளாக இன்றும் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்த திருமாவளவனுக்கு மிகுந்த உடல் சோர்வும், மயக்கமும் ஏற்பட்டது. குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவர்கள் அவரைக் கண்காணித்து வந்தனர்.
இதற்கிடையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தமிழக முதல்வர் மு.கருணாநிதி ஆகியோர் திருமாவளவன் தனது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து ஆலோசிப்பதற்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் நிர்வாகக் குழு இன்று காலை உண்ணாவிரதப் பந்தல் அருகே கூடியது.
அ.தி.மு.க., காங்கிரசை தனிமைப்படுத்த வேண்டும்
இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,
“ஜெயலலிதா தொடர்ந்து தமிழ் உணர்வுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். அதனால் ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ உள்பட தமிழ்மான உணர்வுள்ள அனைவரும் அ.இ.அ.தி.மு.க. அணியில் இருந்து வெளியேற வேண்டும். ஈழத் தமிழ் இனத்தை காப்பாற்ற வேண்டுமானால் அதில் உண்மையான அக்கறை இருக்குமானால் காங்கிரசையும், அ.இ.அ.தி.மு.க.வையும் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும்.
மிகுந்த உருக்கத்தோடு இனமான உணர்வோடு வைகோ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு பணிவோடு வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழகத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்தால் தவிர தமிழினம் அழிவது தவிர்க்க முடியாது. இது ஒரு குறைந்தபட்ச கோரிக்கைதான். வைகோவும், தா.பாண்டியனும் பரிவுடன் இதை பரிசீலிக்க வேண்டும். இது ஒரு நெருக்கடியான நேரம். ஆகவே இந்த வேண்டுகோளை ஒரு அறை கூவலாக விடுக்கிறேன்” என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து இன்று மாலை தனது போராட்டத்தை திருமாவளவன் கைவிட்டார். அவருக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார்.